சிவ சிவ என்ற சிவ வாக்கியர்
Sivavakkiyar Siddhar
இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார்.
சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார்.
அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது. அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார்.
சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார். அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார்.
“அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார். சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார்.
அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார்.
குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். “தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன்.
பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள். சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார்.
ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார்.
குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர்.
உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர்.
வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். “இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது.
வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார். சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார்.
சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார். சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள்.
சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள். சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது. ஒருநாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். “சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினர். சிவவாக்கியர் சற்று யோசித்தார். “அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் “சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க போகிறோம்” என்றனர். அதற்கு சிவவாக்கியர் கடகடவென சிரித்து “அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழி” என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள்.
18 siddhargal , siddhar jeeva samadhi temples in tamil nadu , siddhar temples , sivavakkiyar siddhar jeeva samadhi , 18 siddhar jeeva samadhi , 18 siddhar temples , 18 siddhargal jeeva samadhi , sitthar sivavakkiyar ,
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
18 siddhargal , siddhar jeeva samadhi temples in tamil nadu , siddhar temples , sivavakkiyar siddhar jeeva samadhi , 18 siddhar jeeva samadhi , 18 siddhar temples , 18 siddhargal jeeva samadhi , sitthar sivavakkiyar ,
Siva siva
ReplyDeleteArutSivam
ReplyDelete