1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதியான இறைவன், எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். இதனால்தான் சித்தர்கள் காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் தவம் இருந்து இறைவனை தரிசித்தனர்.
இயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு குகையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார். உத்ரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது, குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது. இந்தக் குகையில் சிவபெருமானுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பிரசித்திப்பெற்ற ஒவ்வொரு கோவிலுக்கும் தலபுராணம் இருப்பதைப் போன்று, இந்தக் கோவிலுக்கும் ஒரு தல புராணம் சொல்லப்படுகிறது. அது விநாயகப்பெருமானின் பிறப்போடு தொடர்புடையாக இருக்கிறது.
சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்தார். உடனடியாக குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து, ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அந்த உருவத்திற்கு உயிர் வந்தது. அந்த குழந்தையை, தன் பிள்ளையாக பாவித்த பார்வதி தேவி, ‘எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்று கூறிவிட்டு நீராடச் சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து, வெளியே சென்றிருந்த சிவபெருமான் வருகை தந்தார். அவரை தடுத்து நிறுத்திய விநாயகர், உள்ளே செல்லக்கூடாது என்று தடை போட்டார்.
இதனால் சினம் கொண்ட சிவபெருமான், விநாயகரின் தலையை சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். நீராடிவிட்டு வந்து பார்த்த பார்வதிக்கு, நடந்தது அனைத்தும் புரிந்து விட்டது. அவர் கண்ணீர் விட்டு கதறினார். அதைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான், பிரம்மதேவனை அழைத்து, விநாயகரின் தலையில்லாத உடலில் பொருத்த ஒரு தலையைக் கொண்டு வரும்படி சொன்னார். இதையடுத்து பிரம்மன் வெளியில் சென்றபோது, எதிரே ஒரு யானை வந்தது. அதன் தலையை வெட்டி எடுத்து வந்து, விநாயகரின் உடலில் பொருத்தினார்.
பின்னர் எட்டு இதழ் கொண்ட பாரிஜாதப் பூவில் இருந்து சொட்டிய நீரினை தெளித்து விநாயகரை, சிவபெருமான் உயிர்ப்பித்தார். அந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. பாதாள புவனேஷ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் கூடிய பாரிஜாதப்பூ மரம் இன்றும் இங்கு இருப்பதாக சொல்கிறார்கள். இந்து மதத்தின்படி கால சுழற்சி, ஒரு யுகமாக அளவிடப்படுகிறது. ஒரு மகா யுகம் என்பது கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. மகாபாரதத்தில் குருஷேத்தர யுத்தம் முடிவடைந்த பின்னர் கலியுகம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
திரேதா யுகத்தில் ரிதுபர்ணன் என்ற மன்னன், முதலில் பாதாள புவனேஷ்வர் குகைக் கோவிலை கண்டுபிடித்து வழிபடச் சென்றார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார். ஆதிசேஷன், ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச் சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்க வைக்கும் காட்சியையும் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபார யுகத்தின் போது பாண்டவர்கள் சிவ பெருமானை இங்கு பிரார்த்தனை செய்தார்கள்.
கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்த குகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு கடந்த யுகத்தில் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. குறுகலான குகையின் வாசல் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. குகையில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். படியைவிட்டு இறங்கியவுடன் சுவாசத்திற்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் உபகரணங்கள் வைத்திருக்கிறார்கள்.
எல்லோரும் ஆக்சிஜனை எடுத்து வைத்துக்கொண்டு, பிறகுதான் குகைக்குள் சென்று பார்க்க முடியும். படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் பிரமாண்டமாக காட்சி யளிக்கிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிஷேசன். அவர் பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி பிரமிக்கவைக்கிறது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு யாக குண்டம் தென்படுகிறது. இங்குதான் ஜனமேஜயன், தன் தந்தை பரீஷித்து மகாராஜாவின் மரணத்துக்கு பழி வாங்குவதற்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி, சர்ப்ப யாகம் செய்ததாக சொல்லப்படுகிறது.
பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் லிங்க வடிவங்கள், இங்கும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. காலபைரவர் நாக்கை நீட்டிக்கொண்டு உக்ரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். சிவன் தன் சடாமுடியை அவிழ்த்து விட்டது போல், விழுதுகள் காணப்படுகின்றன. அதில் இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. மேற்பகுதியில் பாரிஜாதப் பூ காணப்படுகிறது. அது தேவலோகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. காமதேனு பசுவின் மடி காம்பில் இருந்து பால் சுரப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் கீழே பைரவர், முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கியபடி நிற்கிறார்கள்.
கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. இவை ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. பக்தர்களை அதன் அருகில் உட்காரவைத்து பூஜை செய்கிறார்கள். இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருப்பது விசேஷமானதாகும். அடுத்ததாக கழுத்தில் பாம்பை சுற்றிய படி ஜடா முடியுடன் சிவபெருமான் காட்சி தரு கிறார். சிவன், பார்வதியுடன் சொக்கட்டான் ஆடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. குகையின் ஒரு பகுதியில் கலி யுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இது நாள் தோறும் வளர்கிறதாம்.
இதன் மேல் இருக்கும் கூம்பு, எப்பொழுது மலையை தொடுகிறதோ அப்பொழுது கலி யுகம் முடியும் என்பது நம்பிக்கை. மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஐராவதம். இவ்வளவு அதிசயங்கள் எல்லாம் இயற்கையாகவே அமையப்பெற்றவை என்பதுதான், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விஷயம். இந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் குகை கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆலயம் ஒவ்வொருவருக்கும், ஏதோ தேவலோகத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் 154 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள விமான நிலையம், சுமார் 226 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் விமான நிலையம் ஆகும்.
பாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
கோவில்கள் வரலாறு , இந்திய கோவில்கள் , கோவில்களின் மர்மங்கள் , சிறப்பு வாய்ந்த கோவில்கள் , பரிகார கோயில்கள் , பரிகார கோவில்கள் , பிரசித்தி பெற்ற ஆலயங்கள் , temples in india , famous temples in india , oldest temples in india , must visit temples in india , famous shivan temples in india ,
famous shivan temples in tamilnadu , தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் , தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில் , தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்கள் , temples in tamilnadu , tamilnadu temple tour , oldest temple in tamilnadu ,must visit temples in tamilnadu , must visit temples in south india , south india temple tour ,
No comments:
Post a Comment