Tourist Places Around the World.

Breaking

Sunday, 19 April 2020

வாலை குருசாமி சித்தர் - தீராத பிணி தீர்த்த சித்தர் / Sri Valai Guruswami Siddhar

Valai Gurusamy temple | பிணி தீர்க்கும் ...
தீராத பிணி தீர்த்த வாலை குருசாமி சித்தர்

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் கொம்மடிக்கோட்டை. இவ்வூரில் தான் அன்னை பாலாவின் அருள்பெற்ற குருவும் சிஷ்யர்களுமான இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அத்துடன் தீராத நோயை தீர்த்து திரு அருள் புரிந்தும் வருகிறார்கள்.

கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்த காரணத்தினால் இவ்வூர் ‘கொம்மடிக் கோட்டை’ என்ற பெயர் பெற்றுள்ளது. கொம்மடிராயன் கல்வெட்டு அருகில் உள்ள சிவாலயமான ஞானாதீஸ்வரர் கோவிலில் காணப்படுகிறது.  பழங்காலம் தொட்டே இவ்விடம் பெரும் புண்ணிய பூமியாக திகழ்ந்துள்ளது. சுற்றிலும் தேரிக்காடாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் சுனையும், தோப்பும் துறவுமாக பசுமை நிறைந்த வனப்பாகவே கொம்மடிக்கோட்டை விளங்கியுள்ளது.

இங்கு அகிலத்தினை காக்கும் பாலா தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். எனவே இவ்வூரை பாலாசேத்திரமென அழைக்கிறார்கள்.  சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை அம்மன். பாலா என்பது சமஸ்கிருத பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். அன்னை பராசக்தியான ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா.

‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலை அம்மனின் பெருமைகளை விவரிக்கிறது. ‘வாலாம்பிகை வாலையடி சித்தருக்கு தெய்வம்' என்பது வழி வழியாய் வந்த மொழி.  வாலை அம்மனை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் க்லிம் ஸௌ' என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான், மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீ வித்தையில் மிகவும் எளிதானது பாலா மந்திரம்.  வாலை அம்மனின் பெருமையை பலரும் பலவிதமாக பாடுகிறார்கள்.

இவரின் புகழ் பாட, ‘பத்து வயதினை உடைய பாவையினன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே...’ என்று பாடியவர் மஸ்தான் சாகிபு. வாலை, சித்தருக்கெல்லாம் தாயானதால் தான், ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தத்தா...’ என்றும் பாடப்பட்டுள்ளாள். சித்தர்கள் வாலை அம்மனை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை என்கிறார்கள்.  ‘உலகம் வாலையில் அடக்கம்’ என்பது உண்மை. வாலை அம்மனை பூஜித்து வர வேண்டுமானால், அதற்கு முற்பிறவியில் நற்பலன் இருந்தால் மட்டுமே முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாலை அம்மன் பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும், அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தான் தெரியும், எத்தனை அற்புத காட்சி எல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்று. ‘வாலையை வழிபடுவோருக்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவருக்கு நடுவே விளையாடுவாள்.

வல்லவர்களெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரிதான சூட்சுமம் ஏது?’ என்கிறார் கருவூரார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி நாத தத்துவத்தையும் சுத்தமாயையும் ஓங்கார சொருபிணி என்று சித்தர் கூடம் அவளையே போற்றுகிறது.  இவரின் அருள் சாதாரணவர்களுக்கு தெரியுமா என்ன? ஆனால் சித்த பெருமக்களுக்கு ஞானாம்பிகா அன்னை இருக்குமிடம் தெரிந்துள்ளது.  சுமார் 800 வருடங்களுக்கு முன்பு...  அன்னையை வணங்க பல பல யோகிகளும், ஞானிகளும் நிறைந்த புனித மலையாம் கயிலாயத்தில் இருந்து வந்தவர்தான் வாலை குருசாமி.

இவர் வாலையை தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னாள் ‘வாலை’ என சேர்த்துக்கொண்டவர். இவர் பல புண்ணிய தலத்துக்கெல்லாம் சென்று விட்டு காசி வந்தார். அங்கே.. காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா... வாலை குருசாமியின் சீடராகிவிட்டார். அவரோடு சேர்ந்து அன்னையை காண தென் திசை நோக்கி வந்தார்கள்.  வரும்வழியில் பல மக்களுக்கு அருளாசி வழங்கினர். வேண்டும் வரம் கொடுத்தனர். பல புண்ணிய தலத்தில் தங்கி யாகங்கள் பல செய்தனர். இறுதியாக கொம்மடிக்கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலசேத்திரத்தைக் கண்டனர்.  ‘ஆகா.. இதுவல்லவா.. புண்ணியசேத்திரம். இங்குதானே நாம் தேடி வந்த அன்னை அருள்பாலிக்கிறார்’ என வியந்து போற்றி... அங்கேயே அமர்ந்தனர். ஆசிரமம் அமைத்தனர்.

ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர். தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்குத் சன்னிதி அமைத்தனர். இங்கு அவர்களுடன் பல பல சித்தர்கள் வந்து யாகம் பல நடைபெற உதவினர்.  ஸ்ரீவித்யை (ஸ்ரீபாலா) மார்க்கத்தைக் குருமுகமாகவே அடையவேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாலை வழிபாட்டை போகர் முனிவர் நந்தீசரிடம் இருந்து உபதேசம் பெற்றார் என்றும், தான் பெற்ற உபதேசத்தை போகர், கொங்கணருக்கு உபதேசித்ததாகவும் கொங்கணர் தன்னுடைய பல சீடர்களுக்கு உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது.

அகத்தியர் உள்பட பல சித்தர்களும் அன்னையை புகழ்ந்து போற்றியுள்ளனர். எனவே இவ்விடம் அருள் ஆசியை அள்ளி தரும் அற்புத பூமியாக திகழ்ந்தது.  பாலசேத்திரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்கு பலரும் வந்து சென்றனர். நோய் பட்டவர்கள் வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குருசாமியும், காசியானந்தாரும் திருமாத்திரை வழங்கினர். அந்த திருமாத்திரையை பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது. பல மூலிகைகளைக் கொண்டு, அந்த மாத்திரையை, அன்னையின் தலத்திலேயே சித்தர் பெருமக்கள் உருவாக்கினார்கள்.

தற்போதும் கூட இதே மாத்திரை இங்கு கிடைக்கிறது.  மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.  தற்போது வழங்கப்படும் இந்த மாத்திரையை, அந்த காலத்திலேயே சித்தர்கள் வழங்கியதால் பலரும் நோய் தீர்ந்து அருள் பெற்றனர்.

எனவே இவ்விடத்தினை ‘ஞானியர் மடம்' என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அன்னையை நாள்தோறும் வணங்கி அருள் பெற்று, பக்தர்களுக்கும் அருள் தந்துக்கொண்டிருந்த சித்தர்கள் இருவரும் யோக முதிர்ச்சி பெற்றனர். சித்துக்கள் பெற்றனர். அதன் பின் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். அன்னையின் அருளால் நம்பி வருகின்ற மக்களுக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு வழங்கி வந்தனர்.  காலங்கள் கடந்தது.  சித்தர் பெருமக்கள்அடங்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது.

ஆனால் அருள் ஆற்றல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருந்தது. இவ்வூர் மக்கள் என்னவென்று தெரியாமலேயே இங்கு வந்து அந்த அருளை பெற்று சென்றனர். தேன் நிறைந்த வாசமுள்ள மலர்களை ஈக்கள் வண்டுகள் மொய்ப்பது போன்று ‘ஆகா.. இது புண்ணிய தலம். இங்கே ஏதோ இருக்கிறது. இங்கு வந்து சென்றால் ஏதோ.. நடக்கிறது. நல்லது தோன்றுகிறது. இது புண்ணிய பூமி..' என்று நினைத்து சென்றவர்களுக்கு நல்ல அருளும் வாழ்வும் கிடைத்தது.

அப்போது இங்கு தொடர்ச்சியாக வழிபடும் பக்தர்களுக்கு இங்கு வாலை தெய்வமும், வாலைகுரு சித்தரும், அவர் சீடர் காசியானந்தாரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.  ஆனால் எப்படி ஆலயம் கட்டுவது?. எங்கு கட்டுவது..? யாரிடம் கேட்பது?. கேட்பவருக்கு கேட்டபடி வாக்கு கொடுக்கும் அற்புத இடமல்லவா..? அங்கே ஒருவர் சொன்னார்.  ‘இவ்விடத்தில் விபூதியை பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அவர்கள் அருள்பாலிக்கும் இடத்தினை கூறுவார்கள்’ என்றார்.

அனைவரும் ஆமோதித்தனர். அதுபோலவே விபூதியை எடுத்து அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறு நாள் காலை விடிந்து வந்து பார்த்த போது, சித்தர்கள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினை கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலைகுரு சாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.  அதன் பிறகு அங்கு பல அற்புதங்கள் தொடர்ந்தது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

mahans in thoothukudi , thoothukudi siddhargal , jeeva samadhi in thoothukudi , thiruvangoor siddhar , siddhar temple in thoothukudi , thoothukudi siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in thoothukudi , siddhar temples in thoothukudi thoothukudi sitthargal , siddhars in thoothukudi 

No comments:

Post a Comment