Tourist Places Around the World.

Breaking

Sunday 3 May 2020

ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் / Kattikulam Mayandi Swamigal

கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

Kattikulam Mayandi Swamigal

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார்.

அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார்.

சிறுவனைச் சுற்றிய நாகம்:

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

குரு செல்லப்ப சுவாமிகள்: 

மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார். (இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர்.

அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார்.


ஆசிர்வாதமும் வழிநடத்தலும்:

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை.

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான். பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .  ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார்.

சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள்.

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள்.

கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

சட்டையைக் கழற்றிவிடலாமா?  

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார்.

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் .

சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .  திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது .

இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in kattikulam , kattikulam siddhargal , jeeva samadhi in kattikulam , kattikulam siddhar , siddhar temple in kattikulam , kattikulam siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in kattikulam ,

No comments:

Post a Comment