சித்தருக்குக் கிட்டிய சித்தி
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள்.
நெரூர் காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி. இவரது சித்துக்களில் ஒன்றை பார்க்கலாம். சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும் தலத்துக்கு வருகின்ற இடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகத்தியம்பாறை எனும் இடம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது மோதி காவிரி வெள்ளம் கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிக்கலாம். அந்த பாறையின் மீதுதான் சதாசிவ பிரம்மேந்திரர் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம்.
பிறரால் தொல்லை ஏற்படாத ஏகாந்தமான இடமாக இந்த இடத்தை பிரம்மேந்திரர் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை. அப்படி அவர் தியானத்தில் தன்னை மறந்து, இவ்வுலக புறவாழ்வை, தன் உடலை மறந்த நிலையில் பிரம்மத்தில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலை. அப்போது அவர் உடல் வெறும் கட்டை, அதற்கு ஏற்படும் துன்பம் அவரை எட்ட முடியாத நிலை. அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒவ்வொரு நாழிகைக்கும் அதிகரித்து இறுதியில் பாறையின் மீது ஆழ்நிலை தியானத்தில் இருந்த யோகியாரை அடித்துக் கொண்டு போய்விட்டது.
அவர் உடல் என்னாயிற்று. அவர் உயிர் என்னவாயிற்று என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றியதும், பாறையில் அமர்ந்து தியானத்திலிருந்த அந்த யோகி எங்கே, என்னவானார் என்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ, கரை ஏறினாரோ, தன்னை மறந்து இருந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போய் உடல் எங்காவது கரை ஒதுங்கியதோ. அல்லது ஆற்று நீரோடு போய்விட்டதோ? தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.
சில காலம் ஆனபின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. மணல் கொள்ளை என்பது இப்போதுதான், ஆனால் அந்த நாளில் வீடு கட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துப் போனார்கள். அப்படி மணல் எடுத்துப் போக வந்த ஆட்கள் ஆற்றில் நல்ல மணல் மேடிட்டுக் கிடந்த இடம் நோக்கிப் போய் அங்கு மண்வெட்டியால் மணலைத் தோண்டி எடுத்து வண்டிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேடு கரைந்தது. வண்டிகளில் மணல் நிறைந்தது. சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான்.
உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது. சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர். இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந்திருக்கிறார். பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் கசிந்தது.
கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். செய்தி சுற்றுப்புறங்களுக்கும் பரவியது. கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்து வெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதை உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனியாக கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர். இப்படியொரு வரலாறு இந்த யோகியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in nerur , nerur siddhargal , jeeva samadhi in nerur , nerur siddhar , siddhar temple in nerur , nerur siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in nerur , siddhar temples in nerur , nerur sitthargal , siddhars in nerur ,
No comments:
Post a Comment