Tourist Places Around the World.

Breaking

Thursday, 18 June 2020

கோவிந்த சாமி சித்தர் - சாதாரணரிலிருந்து ஒரு அசாதரணர் / Govindaswamy Siddhar

கோவிந்த சாமி சித்தர்

- சாதாரணரிலிருந்து ஒரு அசாதரணர்

Govindaswamy Siddhar

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சித்தரின் வாழ்க்கை அன்றைய காலத்தைப் பிரதிபலிப்பதைப் போலவே நமது காலகட்டத்தின் சித்தர்கள் வாழ்க்கையும் நமது காலத்தையே பிரதிபலிக்கின்றன. சாதாரணமானவர்களிடமிருந்தே அசாதாரணமானவர்கள் உருவாகிறார்கள். கண்ணுள்ளவர்கள் - அகப்பார்வை உடையவர்கள் - அவர்களைக் கண்டடையும் பாக்கியம் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட அசாதாரணர் ஒருவரின் கதைதான் இது.

கோவிந்தசாமி எளிய குடும்பத்தில் பிறந்தவர். சிறிய வயதில் படிப்பு வராததால், குடும்பத்தில் கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்ட சிறுவன் அவர். ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். பிழைப்புக்காகத் துணி வணிகத்தில் ஈடுபட்டார். உண்மையையும் நேர்மையையும் மட்டுமே வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து, பிற்காலத்தில் எல்லோரும் போற்றி வணங்கக்கூடிய தெய்வீக நிலையை அடைந்தார்.

திடீரென ஒரு நாள் கோவிந்தசாமி அசாதாரணர் ஆகிறார். எப்படி? அசாதாரணமான திறன்கள் அவரை வந்தடைகின்றனவா? இல்லை. அவர் தன்னை அறிகிறார். இந்தப் பிரபஞ்சத்தின் முன் தான் ஒன்றுமற்று இருப்பதை உணர்கிறார்; கூடவே, இந்தப் பிறப்பின் சூட்சுமத்தையும் உணர்கிறார். இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் உடனே துறக்கிறார். அவ்வளவுதான். அவரது கதை முடிந்தது.  இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்கிறார்களா தொடர்ந்து படியுங்கள்!  கோவிந்தசாமியின் இளம்பருவம்  கோவிந்தசாமி அற்புதங்களை நிகழ்த்தியவரல்ல. சில அற்புதங்கள் அவரைச் சுற்றி நடந்திருக்கின்றன.

கோவிந்தசாமி தன்னை மையப்படுத்தி ஒரு பீடத்தையும் அமைப்பையும் இயக்கத்தையும் உருவாக்கியவர் அல்ல. இந்த மண்ணில் தோன்றிய உண்மையான சித்தர்களும் ஞானிகளும் எதை நோக்கி நம்மை வழிநடத்தினார்களோ அதை நோக்கியே அவரும் சென்றார். தன்னை அறிந்துகொள்ள கோவிந்தசாமி தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி அது. நமக்குள் இருக்கும் நம்மைக் கண்டுகொள்ள நமக்கு அது ஒரு வழிகாட்டியாக அமைகிறது. அந்த வழி கொஞ்சம் எளிமையாகவும் நம்மோடு நெருக்கமானதாகவும் இருப்பதே அதன் சிறப்பு. ஏனென்றால், அவர் சென்ற வழியை நோக்கி அது நம்மை அழைக்கவில்லை. மாறாக, நமக்கான வழியை நாமே உருவாக்கிக்கொள்ள அது பெரிதும் உதவுகிறது.  சித்தர்களும் சுவாமிகளும் பெரும்பாலும் பின்னாளில் ஏதேனும் ஒரு பெயரால் அழைக்கப்படுவதே இயல்பு. ஆனால் கோவிந்தசாமியை அறிந்தவர்கள் எல்லோரும் அவரை வெறுமனே சாமி என்றே அழைத்தார்கள். இனி, நாமும் அப்படியே குறிப்பிடுவோம்.

சாமி பிறந்த ஊர் திருவையாறு. அப்பா பஞ்சநதம் பிள்ளை. அம்மா கிருஷ்ணவேணி அம்மாள். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை சாமி. மூத்தவர் ஞானசுந்தரம். சாமியின் அப்பா சைவப் பிள்ளை. அம்மா இசை வேளாளர். வயல், வாய்க்கால் என்று கொஞ்சம் வசதியான குடும்பம் சாமியின் அப்பாவினுடையது. சாமியின் அப்பாவுக்கு விவசாயத்தைவிடவும் நாட்டமுள்ள இன்னொரு விஷயம் இருந்தது. அது, திருவையாறு ஐயாரப்பர் கோயில் சேவகம். கோயில் தர்மகர்த்தாவான அவர், நாளின் பெரும் பகுதியும் கோயிலிலேயே கிடந்தார். கிருஷ்ணவேணி அம்மாளின் உறவினர்கள் பலர் தேர்ந்த இசைக் கலைஞர்கள்.

அவரும் நன்றாகப் பாடக் கூடியவர். சாமி முறையாக சங்கீதம் கற்றவர் இல்லையென்றாலும், அவருடைய ரத்தத்திலேயே அது ஊறியிருந்தது. அதுபோலவே, சின்ன வயதிலேயே அப்பாவழியிலான இறையுணர்வும் அவருக்குள் கலந்துபோனது!  தித்தி தியாகராஜா  அப்பாவைப் போலவே சாமியும் சின்ன வயதில் வீட்டில், பள்ளிக்கூடத்தில் இருந்த நேரத்தைவிடவும் ஐயாரப்பர் கோயிலில் கிடந்த நேரம்தான் அதிகம். சாமிக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. பள்ளிக்கூடத்துக்குப் போக விருப்பம் இல்லை. வீட்டிலும் சொல்ல முடியாது. அம்மாவிடம் கண்டிப்பு அதிகம். அதேசமயம், அப்பா ஏதோ உணர்ந்துகொண்டவரைப் போல, சாமியின் போக்குக்குத் தடை விதிக்காதவராக இருந்தார். பிள்ளை பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல், கோயிலுக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்ததை அப்பா தவறாகக் கொள்ளவில்லை.

பள்ளிக்கூடம் போவதாகப் போக்குக் காட்டிவிட்டு, பனை நுங்கு வண்டி தேர் செய்து, ‘தித்தி தியாகராஜா... தித்தி தியாகராஜா..’ என்று விளையாடிக்கொண்டிருப்பார் சாமி. சாமியைக் கோயில் வளர்த்தெடுத்தது!  படிப்பு ஏறாத பிள்ளைக்கு வீட்டில் மதிப்பேது? அம்மாவிடம் நிறைய வாங்கிக் கட்டிக்கொண்டார் சாமி. அதேசமயம், சாமியின் அண்ணனுக்கு நல்ல மரியாதை. சாமிக்கு அம்மா மீது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், எல்லாவற்றுக்கும் காரணம் தானே என்று நினைத்துக்கொண்டார் சாமி. விளையாட்டுப் புத்தி தன் எதிர்காலத்தை நாசமாக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும், அதற்காக என்றைக்குமே வருந்தியதில்லை. ஆனால், அம்மாவின் மனம் வாடிப்போக இந்தப் படிப்பார்வமின்மை காரணமாகிவிட்டதே என்பதை உணர்ந்து நிறையவே வருந்தியிருக்கிறார். கிருஷ்ணவேணி அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

அவருடைய கடைசி நாட்களில்தான், அம்மா தன்னிடம் பல சமயங்களில் கோபத்தை வெளிப்படுத்தியதெல்லாம்கூடத் தன் மீது வைத்திருந்த அளவுகடந்த பிரியத்தால்தான் என்பதை சாமி உணர்ந்தார். சாவு நெருங்கிவிட்ட நிலையில், சாமியைத் தன் சகோதரி மகள் அபிதகுசலாம்பாளிடம் கையளித்தார் கிருஷ்ணவேணி அம்மாள். இந்த அக்காவைத்தான் தன்னுடைய இன்னொரு தாய் என்று சொல்வார் சாமி. அந்த அக்காவுக்குத் தன் தம்பி மீது அத்தனை பாசம், அத்தனை பரிவு!  சின்ன வயதிலேயே சாமி ருசித்துச் சாப்பிடுவார். வெல்லம் கலந்த பால் சாதம், மணத்தக்காளி வத்தல் குழம்பு ஆகியவை சாமிக்கு ரொம்பவும் பிடித்தமானவை. சாமியின் அக்கா மிகவும் நன்றாகச் சமைப்பார். ஆனால், சமையலில் சாமிக்குப் பிடித்தமானது கும்புலிங்கத்தின் சமையல். சாமி வீட்டு சமையல்காரராக இருந்தவர் கும்புலிங்கம்.

பின்னாளில், யார் சமையலேனும் அபாரமாக இருந்தால், அரிதினும் அரிதாக சாமி பாராட்டுவார்: “கும்புலிங்கம் சமையல் மாதிரி இருக்கு!”  கிருஷ்ணவேணி அம்மாளின் மரணத்துக்குப் பிறகு, பஞ்சநதம் பிள்ளை இன்னொரு திருமணம் செய்துகொண்டார். சாமியின் சிறு வயது வாழ்க்கை சற்றுச் சிக்கலாக மாறியது அப்போதுதான். நாட்கள் வளர வளர பேதங்களும், பொறாமையும் விஷமாய் வளர்ந்து, ஒருகட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறினார் சாமி.

வீட்டிலிருந்து வெளியேறிய கோவிந்தசாமி, நிறைய சில்லரை வேலைகள் செய்திருக்கிறார். கொஞ்சம் காலமாவது நிலைத்திருந்தது, ரேஷன் கடை வேலைதான். ஆன்மிகத்தில் பெரிய தேடல்கள் ஏதும் அந்நாட்களில் இல்லாவிட்டாலும், வேலை தவிர, சாமிக்கு இருந்த இன்னொரு பிரதான விஷயம் கோயிலுக்குச் செல்வதுதான். கிடைத்த சொற்ப சம்பளத்தில், தன்னுடைய செலவுகள் போக மீதிப் பணத்தைச் சேமித்துவைத்தார்.

வருஷா வருஷம் பங்குனி உத்திரம் அன்று சாமி, தனது வீட்டில் நடத்தும் அன்னம்பாலித்தலுக்கு அரிசி மூட்டை வாங்கப் பயன்பட்டது அந்தச் சேமிப்புப் பணம்.  பின்னாளில் முருகனுக்குத் தனிக் கோயில், ஆசிரமம் உருவாக்கி வழிபாடுகளை நடத்திய நாட்களிலும், அன்னம் பாலித்தலை ஒரு முக்கிய நோக்கமாகக்கொண்டிருந்தார் சாமி. “உள்ளிருக்கும் இறைக்கு நைவேத்தியம்” என்று அதை மகேஸ்வர பூஜையாகக் குறிப்பிடுவார் சாமி. ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்கள் நடக்கும்போது, மகேஸ்வர பூஜைக்கு முக்கிய இடம் உண்டு.

சென்னைக்கு வந்த சாமி  சாமியின் நண்பர் அப்பன் ராவ் துணி வியாபாரம் தொடங்க நினைத்தார். சுயநலம் இல்லாதவராகவும் கணக்கு வழக்கில் நேர்மையானவராகவும் இருந்த சாமியைத் தன்னுடைய வியாபாரத்தில் கூட்டுக்கு அழைத்தார் நண்பர். ஒரு இளைஞனாக வாழ்க்கையை எதிர்கொண்டிருந்த சாமிக்கு அப்போது ஏகப்பட்ட ஆர்வங்கள். ரேஷன் கடை வேலையில் இருந்தபோதே ஜோதிடத்திலும் சித்த வைத்தியத்திலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. நண்பருடன் கைகோத்தார்.

புதிய துணி கொள்முதலுக்காக சாமி அடிக்கடி சென்னை செல்ல வேண்டியிருந்தது. ஊரிலிருந்து சென்னை செல்பவர்களுக்கு அங்கு பல இடங்களைப் போய் பார்க்க ஆசை இருப்பது இயல்பு. சாமிக்கும் அப்படி ஆர்வம் இருந்தது. அது, சென்னையின் தொன்மையான கோயில்களைப் பார்க்கும் ஆர்வம். அப்படிச் சென்றபோது, திருவொற்றியூர் அவரை அதிகம் ஈர்த்தது. அங்கு சென்ற பின், பட்டினத்தார் கோயில் இருந்த கடற்கரை அவரை இழுத்தது.  காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் சுவேதாரண்யர். வணிகர். பெரும் தனவந்தர். எல்லாம் கூடிய வாழ்க்கை. ஆனால், குழந்தை இல்லை. ஒரு நாள் வேறொரு தம்பதியின் வழியே இறைவன் குழந்தை வடிவில் சுவேதாரண்யரை வந்தடைகிறான்.

அவருடைய குழந்தையாகவே வளர்கிறான். தேர்ந்த வணிகனாகி, சுவேதாரண்யரின் செழிப்புக்கு மேலும் செல்வம் சேர்க்கக் கடல் கடந்து வாணிபம் செய்கிறான். சுவேதாரண்யருக்கு இந்த வாழ்க்கையை உணர்த்தும் நாள் வருகிறது. மகன் வடிவில் இருந்த இறைவன் அந்த நாளில் மாயமாகிறான். ஆறு வார்த்தைகளை சுவேதாரண்யருக்குச் செய்தியாக எழுதிவைத்துச் செல்கிறான்: “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!”  இந்த ஆறு வார்த்தைகள் சுவேதாரண்யரின் வாழ்வையே புரட்டிப்போட்டன. அவர் அவ்வளவையும் துறந்தார். பட்டினத்தார் ஆனார். கட்டிய கோவணத்தோடு ஊர் ஊராகத் திரிந்தார்.

முக்திக்கு இறைவன் அவரை அழைத்த இடம் திருவொற்றியூர். ஆயிரம் வருஷங்களுக்குப் பின், இன்றைக்கு சென்னையின் ஒரு பகுதியாக இருக்கும் அதே திருவொற்றியூர்தான். சென்னையின் நீண்ட கடற்கரையில் உள்ள ஏராளமான கோயில்களில் பட்டினத்தார் சமாதியடைந்த கோயிலும் ஒன்று. 18 சித்தர்களில் ஒருவரான பட்டினத்தாரின் வாழ்க்கை சொல்லும் முக்கியமான செய்தி, தன்னையறிந்து இப்பிரஞ்சத்துடன் ஒன்றுகலத்தல். நமக்கென்று தனி வாழ்க்கை என்று ஒன்றுமில்லை; எது ஒன்றுமே இறுதி வரை வராது என்பதே அவர் பெற்ற ஞானம்.  இருவருமே காவிரிக்கரையில் பிறந்தவர்கள் என்பதைத் தாண்டி சுவேதாரண்யருக்குக்கும் சாமிக்கும் இடையே இன்னொரு முக்கியமான தொடர்பும் உண்டு.

எந்தத் திருவொற்றியூர் கடற்கரையில் பட்டினத்தார் இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றுகலந்தாரோ, அதே திருவொற்றியூர் கடற்கரையில்தான் சாமி தன்னை அறிந்தார். தன் பிறப்பின் நோக்கம் உணர்ந்தார்.  தன்னை அறிந்தார்  எப்போதும்போல, திருவொற்றியூர் கடற்கரைக்குச் சென்ற சாமியிடம், அங்கு வடக்கிலிருந்து இந்தி பேசும் ஒரு சாமியார் வந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சாமி விசாரித்துக்கொண்டு சென்றால், அந்த சாமியார் கோயிலில் இல்லை. கோயிலுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சாமியாரைத் தேடிச் செல்கிறார் சாமி. ஏராளமான குடிசைகள். சாமியார் ஒரு குடிசையில் இருக்கிறார். சாமியை உள்ளே அழைக்கிறார். “எனக்கு டீ வாங்கி வருகிறாயா?” என்று கேட்கிறார். சாமி ஓடிப்போய் டீ வாங்கிவந்து தருகிறார். சாமியார், “நீ தியானம் கற்றுக்கொள்கிறாயா?” என்கிறார். சாமி பதில் சொல்லவில்லை. அப்படியே சாமியாரை நிலைகொண்டு பார்த்து நிற்கிறார். சாமியார் தன் விரல்களால் சாமியின் நெற்றிப் பொட்டைத் தொடுகிறார்: “நீயாக எதையும் தேடாதே; தானாக எல்லாம் வந்தடையும்”.  அது தொடங்கி அப்புறம் நடந்தது எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்று பின்னாளில் நினைவுகூர்ந்தார் சாமி. ஆனால், தன்னைத் தனக்கு உணர்த்திவிட்டதை மட்டும் உணர்ந்திருக்கிறார் சாமி. ஆழ்நிலை தியானத்திலிருந்து சாமி வெளியே வந்தபோது அந்தச் சாமியார் அங்கே இல்லை. குடிசையும் இல்லை. விசாரித்தபோது, அப்படி ஒருவர் அங்கே வரவே இல்லை என்கிறார்கள் எல்லோரும். சாமிக்கு எல்லாம் புரிந்துவிட்டது!

திருவொற்றியூர் கடற்கரையில் தன்னை அறிந்தார் கோவிந்த சாமி. அங்கிருந்து நேரே புறப்பட்டு வந்தவர் மனதில் ஓடிய முதல் எண்ணம், இனி பொருள் தேடும் வாழ்க்கை தனதில்லை; கடவுளுக்கே அர்ப்பணமாகும் கருவி தான் என்பதே. தன்னைத் தொழில் கூட்டிலிருந்து விடுவித்துவிடுமாறு கேட்க, நண்பரை நோக்கிச் செல்கிறார் சாமி. அங்கே ஒரு ஆச்சரியம். நண்பருக்குப் புதிதாக ஒரு நல்ல வேலைவாய்ப்பு கூடிவந்திருக்கிறது. அவரும் தொழில் கூட்டிலிருந்து விலகிவிடலாம் என இவரிடம் சொல்லக் காத்திருக்கிறார். இருவரும் சந்திக்கின்றனர். ஒரே நாளில் தங்கள் தொழிலை இருவரும் சேர்ந்து கலைக்கும் முடிவையெடுத்தனர். சரக்குகள் யாவும் காலிசெய்யப்பட்டு, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

அதே நாளில். இடத்தைக் காலிசெய்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தஞ்சாவூர் வந்தடைந்தார். தஞ்சாவூரில் இப்போது ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்தில் ஒரு கோயிலை அமைக்க கோவிந்தசாமி இறைவனின் கைக்கருவியானார். கையில் ஒன்றுமில்லாதவர்தான்; அன்றைக்கு அது பாம்புகளும் பூச்சிகளும் நெளிந்து பறக்கும் பாழடைந்த புதர் மண்டிய இடமும்கூட. 

வழிகாட்டிய ஆசிரியர்கள்  சாமிக்கு நிறைய குருநாதர்கள் உண்டு. சிலருடன் பல காலம் அவர் இருந்திருக்கிறார். சிலருடன் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள அவர் சென்றிருக்கிறார். சிலரை ஒரு சில முறை மட்டுமே சந்தித்திருக்கிறார். சிலரோடு வாசிப்பின் மூலமாகவே உறவாடியிருக்கிறார். எப்படியிருந்தாலும் அவர்கள் எல்லோரையுமே உயர்ந்த நிலையில் வைத்துப் பூஜித்திருக்கிறார் சாமி. ஆன்மிக விசாரங்களை அவர் நிறையக் கற்றுக்கொண்ட இடம் கிருபானந்த வாரியார். சித்த வைத்தியத்தை அவர் கற்றுக்கொண்ட இடம் வாலையானந்த சுவாமிகள். ரமண மகரிஷியுடன் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார். இன்னும் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், வள்ளலார், அருணகிரிநாதர் என்று தொடங்கி புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் வரை அவர் வாசிப்பின் மூலமாகக் கற்றறிந்த குருக்கள் ஏராளம். சாமிக்கு இவர்கள் அனைவரின் மீதும் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டு; தனிப்பட்ட கருத்துகளும் உண்டு!  அவர், தன்னை எப்போதுமே ஒரு குருவாகவோ, சாமியாராகவோ சொல்லிக்கொண்டவர் அல்ல.

ஆசிரமத்துக்கு வருபவர்களிடமே “நான் இந்த ஆசிரமத்தின் காவலாளி; அவ்வளவுதான்” என்பார். சாமியும் பெரியாரும் ஒரு முறை சந்தித்திருக்கிறார்கள். அப்போது, “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் பெரியார். சாமி, “மக்களுக்கு மருந்து செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாமி. “நல்லது, செய்யுங்கள்” என்று சொன்னார் பெரியார்.  சாமிக்குப் பெரியார் மீது நன்மதிப்பு உண்டு. பெரியாரை ஒரு ஞாநி என்று சொல்வார் சாமி. காஞ்சி மகாபெரியவருக்கும் சாமிக்கும் இடையே பரஸ்பர பிரியமும், அபிமானமும் உண்டு. காஞ்சியில் ஒருமுறை அவரைச் சந்தித்தபோது, மூன்று மணி நேரம் சாமி அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாமிக்குப் பலர் மீது தனித்த பார்வைகள் இருந்தன.

ராமகிருஷ்ண பரமஹம்சரிடமிருந்த தெளிவு விவேகானந்தரிடம் இல்லை என்பது அப்படிப்பட்ட பார்வைகளில் ஒன்று!  ஆன்மிகத் தத்துவ விசாரங்களில், வேதாந்தம் - சித்தாந்தம் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபட்ட போக்குகளில் சாமி எப்போதும் சித்தாந்தவாதிகளையே சிறந்த வழியில் செல்பவர்களாகக் கருதினார். “உலகமே ஒன்றும் இல்லை என்று தனித்து ஒதுங்கிச் செல்வதில் அல்ல; இந்த உலக நலனுக்காக உண்மையாகவும், நேர்மையாகவும் சேவையாற்றுவதே மேம்பட்ட ஆன்மிக வழி” என்பது சாமியின் நிலைப்பாடு!  ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளன்று தஞ்சாவூர் முருகன் ஆசிரமத்தில் நடக்கும் சிறப்பு அர்ச்சனைகளும் மகேஸ்வர பூஜையும் கச்சேரியும் பிரசித்தி பெற்றவை. சுவாமியின் நூற்றாண்டு வருடமான 2015 வரை, 62 பங்குனி உத்திர விழா சிறப்புற நடைபெற்று வந்துள்ளது. அந்நாளில் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். முதலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு.

அடுத்து பசியாறல். தொடர்ந்து கச்சேரி. ஆசிரமத்துக்கு வந்து செல்லாத இசைக் கலைஞர்களை எண்ணிவிடலாம். எவ்வளவோ பேர் வந்தாலும், மதுரை சோமுவுக்கும் ஆசிரமத்துக்கும் இருந்த உறவு இணையற்றது. சாமி மீது பெரும் மதிப்பு கொண்ட சோமு, “இது என் சொந்த வீடு. இங்கு என் மனம் போதும் என்று சொல்லும் வரை பாடுவேன்” என்று சொல்வார். முதல் நாள் மாலை தொடங்கும் பல கச்சேரிகள் மறுநாள் விடிந்தும் தொடர்ந்திருக்கின்றன.

நல்ல சங்கீதம் நம் ஆன்மாவுடன் நேரடியாகப் பேசக் கூடியது என்பார் சாமி. சோமு ‘என்ன கவி பாடினாலும்...’ பாடலைப் பாடும்போது கண்ணீரில் கரைந்துபோவார் சாமி!  சாமி மீது இருந்த பிரியத்தினால் முருகன் ஆசிரமத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில், வாரியார் சாமிகள் தன் இன்னுயிர் இருந்தவரை, 35 வருடங்கள் தொடர்ச்சியாய் வந்து கலந்துகொண்டார். அப்போது ஒரு முறை சாமியிடம், “அன்னம்பாலித்தலுக்காக இவ்வளவு கஷ்டமும், செலவும் பட வேண்டியிருக்கிறதே நீ?” என்று கேட்டார் வாரியார் சாமிகள். “கை இல்லாதவரைப் பார்த்திருக்கேன், கால் இல்லாதவரைப் பார்த்திருக்கேன், வேறு பல உறுப்புகள் இல்லாதவர்களையும் பார்த்திருக்கேன். ஆனால், வயிறில்லாதவர்களைப் பார்த்ததில்லையே சாமி!” என்று அதற்குப் பதில் அளித்தார் சாமி. நிறைவான, ஆனந்தச் சிரிப்புடன் சாமி பதிலளிக்கும் இந்தத் தருணத்தைப் புகைப்படமாகப் பதிந்தார் ஒரு கலைஞர். இன்றும் ஆசிரமத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது இந்தப் படம்!

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in chennai chennai siddhargal , jeeva samadhi in chennai chennai siddhar , siddhar temple in chennai chennai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in chennai , siddhar temples in chennai chennai sitthargal , siddhars in chennai ,

No comments:

Post a Comment