சித்தர் குருலிங்க சுவாமிகள்
Siddhar Sri Gurulinga Swamigal
தொன்மையான கோவில்களும் புகழ்பெற்ற சித்தர்களின் அதிஷ்டானங்களும் கோலோச்சும் சென்னை மாநகரத்திலே சைதாப்பேட்டை இரயில் நிலையத்துக்கு அருகில் இருப்புப் பாதையை ஒட்டி, காரணீசுவரர் திருக்கோயில் தெருவில் ஜீவ சமாதி கொண்டிருக்கிறார் திரு குருலிங்க சுவாமிகள்.
இவர் இங்கே சமாதி ஆனது 1887 ஆம் ஆண்டு. தவப்பெரியார் குருலிங்க சுவாமிகளின் 126 ஆவது குருபூசை கடந்த ஆண்டு திசம்பர் மாதத்தில் அவரது பக்தர்களால் கோலாகலமாக நடத்தப்பட்டது. 1887 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தின் நான்காவது திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு யாம் ஜீவ சமாதி அடைவோம் என்று தம் பின்பற்றார்களிடம் சொல்லி அதன்படியே குறித்த நேரத்தில் ஜீவ சமாதி ஆனவர் திரு குருலிங்க சுவாமிகள்.
ஜீவன் முக்தி அடைந்து நூறாண்டுகள் ஆனபின்னும் இன்றைக்கும் தம் பக்தர்களுக்குத் தேவைப்பட்ட வேளையில் காட்சி தந்தும் கனவில் பேசியும் தியானத்தில் தோன்றியும் அருளி வருகின்றார் குருலிங்க சுவாமிகள். குருலிங்க சுவாமிகள் யார்? வீரசைவக் குடியில் விருத்தாசலத்தில் பிறந்தவர் என்பது அவரது பக்தர்களின் கூற்று. கன்னட தேசத்தில் விப்பிரர் குலத்திலே பிறந்தவர் என்பது சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் தல வரலாற்று குறிப்பு.
சுவாமிகள் பிறந்ததில் இருந்தே மாபெரும் சிவபக்தராகத் திகழ்ந்தவர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவன் கோவில்களுக்குச் சென்று அங்கு உறையும் லிங்கத் திருமேனியின் அழகில் மெய்மறந்து தரிசித்தபடி யாத்திரையாக வந்து கொண்டிருந்தவர் இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் திருக்காரணி எனப்படும் சைதாப்பேட்டை. இங்கு கோவில் கொண்டுள்ள காரணீசுவரரை தரிசித்தார். இத்திருத்தலத்தின் அழகும் கோயில் அமைப்பும் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டதால், இங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார். நாள்தோறும் காரணீசுவரரைத் தொழுவதைத் தம் வழக்கமாகக் கொண்டார். தம்மை தரிசிக்க வந்த ஓரிரு பக்தர்களின் பிணிகளை குருலிங்க சுவாமிகள் தீர்த்து வைத்ததால் இச்சேதி ஊரெங்கும் வேகமாய்ப் பரவியது. சென்னை நகர மக்கள் இவர் இருக்கும் இடம் தேடி வந்து தங்கள் பிணிகளைச் சொல்லி திருநீறு பெற்றுச் செல்லத் தொடங்கினர்.
காலங்கள் கழிந்தோடின தம் மனதுக்கு மிகவும் பிடித்தமான காரணீசுவரர் சந்நிதியிலேயே தான் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று தீர்மானித்தார். சைதாப்பேட்டையில் வசித்துவரும் செல்வந்தர் ஒருவரை அணுகினார். அவர் ஜீவ சமாதி அடைவதற்கான வசதி அந்த செல்வந்தருக்கு இருந்தும் சுவாமிகளின் பெருமை புரியாமல் ஏளனம் செய்து அனுப்பிவிட்டார் செல்வந்தர். சுவாமிகள் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரைக்கு வந்தார். தெள்ளிய ஆறென ஓடும் அதன் கரையில் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தார்.
அதே நேரம் செல்வந்தர் குடும்பத்தில் அனைவருக்கும் திடீரென வயிற்று வலிஏற்பட்டு துன்புற்றனர். திகைப்புற்ற அந்த செல்வந்தர் தம் குடும்பத்தவரோடு சென்று மருத்துவரிடம் அனைவருக்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனாலும் வயிற்றுவலி தீரவில்லை. செல்வந்தர் வீட்டில் பணிபுரிந்த வேலைக்காரன் ஒருவன் குருலிங்க சுவாமிகளின் அருமை பெருமை அறிந்தவன், சுவாமிகள் ஜீவ சமாதி ஆவதற்கு இடம் தராததால் தான் அவர் குடும்பம் இப்படி துன்புற்று துடிக்கிறது என்பதை ஊகித்து சுவாமிகளைத் தேடி அடையாறு ஆற்றங்கரை பகுதிக்கு வந்தான். தன் முதலாளி குடும்பத்தின் துன்பநிலையை சுவாமிகளிடம் சொல்லி அழுதான். அவர்களை எப்படியாவது இந்தத் துன்பத்தில் இருந்து மீட்க வேண்டினான்.
குருலிங்க சுவாமிகள் வேலைக்காரன் கையில் ஒரு சொம்பைக் கொடுத்து ஆற்றில் இருந்து நீர் மொண்டுவருமாறு அவனைப் பணித்தார். அவன் நீரை மொண்டு ஓட்டமாய் ஓடி வந்தான். அதில் சிறிது திருநீறு தெளித்து இதைக் கொண்டு போய் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் குடிக்கச் சொல் என்று சொல்லி நீஷ்டையில் ஆழ்ந்தார்.
வேலைக்காரன் வீட்டிற்கு ஓடினான். சுவாமிகளை அவமதித்து அனுப்பியதால்தான் இத்தனைத் துன்பமும் வந்துற்றது என்று சொல்லி அவரிடம் இருந்து வாங்கி வந்த நீரைக் கொடுத்து அனைவரையும் பருகச் சொன்னான். எத்தனையோ சிகிச்சை செய்தும் பயன் இல்லாமல் இருந்த அவர்கள் அந்த நீரைக் குடித்த அடுத்த கணமே வயிற்று வலி தொலைந்தே போனது. இதன்பின் செல்வந்தருக்கு குருலிங்க சுவாமிகளின் பெருமை விளங்கிற்று.
சுவாமிகள் நீஷ்டையில் இருக்கும் ஆற்றங்கரைக்கு குடும்பத்தினரை அழைத்துச் சென்றார். அவர் திருப்பாதங்களில் அனைவரும் வீழ்ந்து வணங்கினர். கண்களில் நீர் மல்க என்னை மன்னித்து அருளுக என்று மன்றாடினார் செல்வந்தர். அதோடு, சுவாமிகளிடம் ஜீவ சமாதி ஆவதற்கு உரிய இடத்தையும் தருவதாக உறுதியளித்தார்.
ஜீவ சமாதி ஆனபின்பு செய்யவேண்டிய முன் ஏற்பாடுகளைத் தானே முன்னின்று செய்யத் தொடங்கினார் செல்வந்தர். அந்த இடம் தான் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ள இன்றைய இடம். தாம் ஜீவசமாதி அடையும் முன், காரணீசுவரர் கோயிலை மூன்று முறை வலம் வந்தார் குருலிங்க சுவாமிகள். அதன் பின்பு அங்கு கூடி இருக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
நம சிவாய முழக்கம் எல்லாத் திசைகளிலும் எழும்ப சரியாக நள்ளிரவு 12 மணிக்கு சமாதிக்குள் இறங்கி நிஷ்டையில் ஒன்றிப்போனார் சுவாமிகள். பிறகு சமாதி எழுப்பப்பட்டு அதன்மேல் சிவலிங்கம் பதிப்பிக்க்கப்பட்டு அன்றே வழிபாடு தொடங்கிற்று.
ஜீவ சமாதி கோயில் காலையில் 7 முதல் 10.30 வரையும், மாலையில் 5.30 முதல் 8 வரையும் திறந்திருக்கும். இங்கு ஒருமுகப்பட்ட தியானம் சிறப்பாக அமைகின்றது. சுவாமிகளின் குருபூசை திருவிழா ஆண்டுதோறும் திசம்பர் மாதம் இதாவது, சுவாமிகள் சமாதி ஆன கார்த்திகை மாதம் நான்காவது திங்கட்கிழமை அன்று மேற்கொள்ளப்படுகின்றது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in chennai , chennai siddhargal , jeeva samadhi in chennai , chennai siddhar , siddhar temple in chennai , chennai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in chennai , siddhar temples in chennai , chennai sitthargal , siddhars in chennai ,
No comments:
Post a Comment