1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் வீரசேனன். இவனுக்கு அழகும், அறிவும், பணிவும், கண்டிப்பும் கலந்த நற்குண மனைவி வாய்த்தாள். ஒருநாள் இரவில் மன்னன் தன்னந்தனியாக நகர்வலத்துக்கு மாறுவேடத்தில் புறப்பட்டான். அன்றிரவு ஏதோ காரணத்தால் அவன் சாப்பிடவில்லை. சாப்பிடாமலே கிளம்பிய அவனுக்கு நள்ளிரவு வேளையில் பசித்தது. சற்றுநேரத்தில் பசி அதிகமாகவே, அரண்மனைக்குத் திரும்பி ஏதாவது சாப்பிடலாம் என எண்ணியிருந்த வேளையில் பெருமழை பிடித்துக் கொண்டது. அவன் ஒரு வீட்டின் ஓரமாக ஒதுங்கினான்.
பசியோடு, மழை பெய்ததால் குளிரும் சேர்ந்து கொள்ள சற்று சிரமத்துடன் ஒதுங்கி நின்றான். தற்செயலாக அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே ஒரு அந்தணர், அவரது மனைவி மக்களுடன் உறங்கிக் கொண்டிருந்தார். பசி தாளாத மன்னன், வீட்டுக்கதவைத் தட்டவே, அந்தணர் குடும்பத்தினர் திடுக்கிட்டு விழித்தனர். கதவைத் திற என மன்னன் அதிகாரமாகவே கூறவே, அந்த தொனியிலேயே மாறுவேடத்தில் இருப்பது மன்னன் என்பதை அந்தணர் புரிந்து கொண்டு கதவைத் திறந்தார். தாங்கள் மன்னர் தானே! என்றதும், ஆச்சரியமடைந்த மன்னன், எப்படி அதைக் கண்டுபிடித்தீர்? என்று அந்தணரிடம் கேட்டான்.
பேச்சின் தோரணையிலேயே கண்டுபிடித்தேன், என்ற அந்தணரிடம், சரி! போகட்டும், எனக்கு பசிக்கிறது. ஏதாவது கொடும், என்றான் மன்னன். அந்தணர் வீட்டில் ஏதுமில்லை. மன்னா! இப்போதைக்கு உணவேதும் இல்லையே, என்றதும், பொய்யா சொல்கிறீர், என்ற மன்னன், அதோ! அங்கே சில பழங்கள் வைத்திருக்கிறீரே! அது யாருக்கு? மன்னனையே ஏமாற்றப் பார்க்கிறீரா? என்று மிரட்டினான். பழங்களைப் பார்த்ததும், அவனுக்கு பசி இன்னும் அதிகமானது போல் இருந்தது. இல்லை மன்னா! நேற்று வருமானம் ஏதும் கிடைக்காததால் நாங்கள் பட்டினியாக கிடக்கிறோம். அந்தப் பழங்களை சிரார்த்தத்துக்காக வாங்கி வைத்துள்ளோம்.
அது முன்னோர் தெய்வமான விஸ்வதேவரைச் சேர வேண்டும். அவருக்கு படைக்கவே அதை வைத்துள்ளேன். அதைச் சாப்பிடுவது பெரும்பாவம், என்றார் அந்தணர். அதைச் சற்றும் கேட்காத மன்னன் அந்தணரை மிரட்டவே, பயந்து போன அவர் பழங்களைக் கொடுத்துவிட்டார். பசியுடன் இருந்த மன்னன் அவற்றைக் காலி செய்துவிட்டு, ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். வீட்டுக்கு வந்ததும் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த அவனைக் கண்ட மனைவி, அவன் முகத்தில் ஏதோ மாறுதல் இருப்பதைக் கவனித்தாள். பிறர் பொருளை அபகரித்தவர் போல் விழிக்கிறீர்களே! என்ன விஷயம்? என்றாள். நடந்ததைச் சொன்னான் மன்னன். அவள் அவனைத் திட்டினாள். மந்திரிகளை வரவழைத்துக் கேட்டதில் பல தலங்களுக்கும் செல்லுமாறு அவர்கள் கூறினர்.
கோயில் கோயிலாக அலைந்த மன்னன், இறுதியாக அகத்தியர் வணங்கிய சங்கரன்கோவில் என்னும் தலத்துக்கு வந்தான். அங்கு ஒரு பிராமணரைச் சந்தித்தான். அத்தலத்து தீர்த்தத்தில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீரும் என்றார் அவர். மன்னனும் நீராடி, சிவனை வணங்கினான். அவனது நோய் நீங்கியது. பசிக்காக பிறர் பொருளை சாப்பிடக்கூடாது. யாரேனும், பிறர் பொருளை அபகரித்ததற்காக சிரமப் பட்டால், இனி அவ்வாறு செய்வதில்லை என உறுதியெடுத்து, சங்கரன்கோவிலுக்கு வந்தால் பாவம் தொலையும் என்பது நம்பிக்கை. மதுரையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் சங்கரன் கோவில் உள்ளது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment