1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
சொர்க்கம் என்பது அவரவர் செய்த புண்ணிய செயல்களின் பலனாக கிடைக்கிறது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.
மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம் முடிவுறும் நிலை வந்து விட்டது. அவர் வளர்ந்த யாதவர் குலத்தின் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மாண்டு போனார்கள். இவற்றை எல்லாம் அறிந்த, பாண்டவர்களின் மூத்தவரான தருமன் எனப்படும் யுதிஷ்டிரர் வருத்தம் கொண்டார். அவர் தன்னுடைய தம்பி அர்ச்சுனனின் மகனாகிய பரீட்சித்துவுக்கு முடிசூட்டினார்.
பின்னர் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த அணிகலன்கள், பட்டாடைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, எளிய ஆடைகளை அணிந்துகொண்டார். பின் மவுன விரதத்தைக் கடைப்பிடித்து, தலையை கவிழ்ந்தபடி வீர சன்னியாசம் ஏற்று, வடதிசை நோக்கி புறப்பட்டார். அவருடன் மற்ற நான்கு சகோதரர்கள், திரவுபதி ஆகியோரும் புறப்பட்டனர். யுதிஷ்டிரர், உலக மாயைகளை துறந்திருந்தார். அவர் உணவு அருந்தவில்லை. தண்ணீர் கூட பருகவில்லை. இடையில் எங்கும் இளைப்பாறவும் இல்லை. எந்த பக்கமும் திரும்பிப்பார்க்காமல், தனக்கான இலக்கை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவரது சகோதரர்கள், திரவுபதி ஆகியோரும் அவ்வாறே அவரைப் பின்தொடர்ந்தனர்.
யுதிஷ்டிரர் நடந்துவந்த நல்வழிப் பாதை முடிவுற்றது. அங்கிருந்து சொர்க்கத்திற்கு செல்லும் புண்ணியப் பாதை தொடங்க இருந்தது. அங்கிருந்து பயணத்தை தொடங்கியது முதல், திரவுபதி, மற்ற நான்கு சகோதரர்கள் என ஒவ்வொருவராக சரிந்து தரையில் விழுந்தனர். அந்தப் பனிப் பிரதேசத்தில் விழுந்தபிறகு எழும் முயற்சி என்பது பயனற்றது. சில மணி நேரத்தில் அவர்களின் உடலை, பனி மூடி சமாதி செய்துவிடும். அவர்கள் நிச்சயம் சொர்க்கத்திற்கே செல்வார்கள். அதை யாராலும் தடுக்க இயலாது.
அனைவரும் அப்படி சமாதியான நிலையிலும், யுதிஷ்டிரரின் பயணம் தடைபடவில்லை. அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். எந்த பக்கமும் திரும்பிப்பார்க்காமல், தலையை கவிழ்ந்தபடியே சென்றதால், திரவுபதி மற்றும் மற்ற சகோதரர்கள் நிலையை அவர் அறியவில்லை. அவர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக மாறியிருந்தார். யுதிஷ்டிரர் இப் போது சொர்க்கத்திற்கு செல்லும் பாதையில் உயரமான சிகரத்தை அடைந்திருந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் வந்து கொண்டிருந்தது. அது அவர்களை அஸ்தினாபுரத்தில் இருந்தே பின்தொடர்ந்து வந்திருந்தது.
யுதிஷ்டிரர் சிகரத்தின் உச்சியில் ஏறிய தருணத்தில், இந்திரன் தனது விமானத்தில் வந்து அங்கே இறங்கினான். தன் அகமும், முகமும் மலர, யுதிஷ்டிரரை வரவேற்றான். பின்னர், “உங்களின் அறச்செயல் காரணமாக, இன்றைய தினம் சொர்க்கம் முழுவதும் உங்களுடையது. எனவே நான் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். வந்து விமானத்தில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றான்.
இப்போது யுதிஷ்டிரர், “தேவேந்திரா.. என்னுடன் என் மற்ற சகோதரர்களும், மனைவி திரவுபதியும் கூட சொர்க்கத்திற்கு வர அனுமதியளிக்க வேண்டும்” என்றார். அதற்கு இந்திரன், “அவர்கள் எப்போதோ சொர்க்கம் வந்து சேர்ந்து விட்டார்கள்” என்று பதிலளித்தான். யுதிஷ்டிரர் மீண்டும், “இந்திரா.. இந்த நாயையும் விமானத்தில் உட்கார அனுமதிக்க வேண்டும்” என்றார்.
“தாங்கள் தர்மாத்மாவாக இருந்துகொண்டு இப்படிக் கேட்பது சரியல்ல.. சொர்க்கத்திற்குள் நாய் எப்படி போக முடியும்? இந்த புனிதமற்ற விலங்கு, என்னைப் பார்க்க கொடுத்துவைத்ததே பெரிய விஷயம்” என்று மறுத்தான், இந்திரன்.
யுதிஷ்டிரர் விடுவதாக இல்லை. “இந்த நாய் என்னை அண்டி வந்துள்ளது. என் மீது அது கொண்டுள்ள பக்தி காரணமாகவே, அஸ்தினாபுரத்தில் இருந்து இவ்வளவு தொலைவு வந்திருக்கிறது. நம்மை அண்டி வந்தவரைக் கைவிடுதல் அதர்மச் செயலாகும். இதைக் கைவிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. இது இல்லாமல் நான் தனியாக சொர்க்கத்திற்கு செல்வதை விரும்பவில்லை” என்றார்.
உடனே இந்திரன், “அரசே.. சொர்க்கம் என்பது அவரவர் செய்த புண்ணிய செயல்களின் பலனாக கிடைக்கிறது. இந்த நாய் புண்ணியம் செய்திருந்தால், அது ஏன் இப்படி கீழான நாய் உடலைப் பெற்றுள்ளது?” என்றான். கொஞ்சமும் யோசிக்காத யுதிஷ்டிரர், “இது புண்ணியம் செய்யவில்லை என்பதுதானே உங்க ளுடைய வாதம். அப்படியானால் நான் இதுவரை செய்த புண்ணியங்களில் இருந்து பாதியை இந்த நாய்க்கு வழங்குகிறேன்” என்றார்.
அப்போது “யுதிஷ்டிரர் வாழ்க.. வாழ்க” என்ற கோஷம் பலமாக எழுந்தது. அருகில் நின்ற நாய், தர்மதேவனாக மாறியிருந்தது. “யுதிஷ்டிரா.. நான் உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அருளாசி வழங்கியபடி அங்கிருந்து மறைந்தார் தர்மதேவன்.
இவ்வளவு நேரமாக நாயின் வடிவில் தன்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது, தர்மதேவன் என்பதை உணர்ந்த யுதிஷ்டிரர் கண்கலங்கிப்போனார். அவரை பணிவுடன் வணங்கினார்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment