1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
சவுபரி மகரிஷி, ஆள் அரவமே இல்லாத இடத்துக்குப் போய் தவம் செய்து கடவுளை அடையலாம் என்ற எண்ணம் கொண்டார். காட்டுக்குப் போனால் கூட, அங்கே வசிக்கும் மற்ற ரிஷிகள் ஏதாவது பேச்சுக்கொடுத்து தவத்தைக் கெடுத்து விடுவார்கள். எனவே, தண்ணீருக்குள் தவமிருப்போம் என்று அமர்ந்து விட்டார். ஒருநாள், சவுபரி கண்விழித்தார். அப்போது, ஒரு பெரிய மீன் போய்க் கொண்டிருந்தது. பெரிதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் மீன்கள் போய்க் கொண்டிருந்தன. இதைப் பார்த்ததும், சவுபரிக்கு மனதில் சபலம்.
ஆஹா... என்ன அழகான குடும்பம். தந்தை மீனும், தாய் மீனும் முன்னே செல்ல, குழந்தை மீன்கள் பின் தொடர்கின்றனவே! எவ்வளவு இனிமையான வாழ்க்கை! தவமிருந்து கிடைக்காத இன்பம், இந்தக் காட்சியைப் பார்த்ததும் கிடைத்து விட்டதே! நமக்கும், மனைவி, மக்கள் என இருந்தால் நன்றாக இருந்திருக்குமே! வெளியே போய் ஒரு பெண்ணைத் தேடுவோம். அவளை மணந்து, பிள்ளை குட்டியுடன் சுகமாக இருப்போம் என்றெண்ணி தண்ணீரை விட்டு வெளியே வந்தார். வழியில் மாந்தாதா என்ற மன்னனைச் சந்தித்தார். அவனுக்கு ஐம்பது மகள்கள் இருந்தனர். அதில், யாராவது ஒருத்தியைக் கேட்போமே என அவனிடம் பேசினார்.
என் மகள்களுக்கு சுயம்வரம் வைத்து, அவர்கள் விரும்பும் மாப்பிள்ளையை தேட முடிவு செய்துள்ளேன். எனவே, பெண்ணைத் தர இயலாத நிலையில் உள்ளேன், என்றான். பரவாயில்லை! என்னையும் அவர்கள் பார்க்கட்டும், யாருக்காவது பிடித்திருந்தால் மணந்து கொள்ளட்டும், என்றார். தாடியும், மீசையும், ஜடாமுடியும், கரடு முரடான மேனியும் கொண்டவராய் இருக்கும் இவரை தன் மகள்களில் ஒருத்தி கூட கட்டிக் கொள்ளமாட்டாள் என்ற தைரியத்தில் அவரை மகள்களின் அறைக்கு அனுப்பி வைத்தான் மாந்தாதா.
முனிவர், உள்ளே போனாரோ இல்லையோ, ஐம்பது பெண்களும் ஓடிவந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டனர். ஆம்... அவர் தன் தவவலிமையால் எழில் மிகு இளைஞனாக மாறி உள்ளே சென்றார். ஐம்பது பேரும் அவரைத் தான் கல்யாணம் செய்வோம் என அடம்பிடித்தனர். இதென்ன மாயம் என நினைத்த மாந்தாதா, வேறு வழியின்றி எல்லாரையும் திருமணம் செய்து வைத்தான். அவர், அந்தப் பெண்களுக்கு தன் தவவலிமையால், ஐம்பது சிறு மாளிகைகளை உருவாக்கி அதில் தங்க வைத்தார்.
ஒருசமயம், மகள்களைப் பார்க்க மாந்தாதா வந்தான். முதல் மகளின் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தபோது, அப்பா! அவர் என் மேல் உயிரையே வைத்துள்ளார். ஆனால், ஒரே ஒரு கஷ்டம் தான்! அவர் இங்கு மட்டுமே இருக்கிறார். எந்த தங்கையின் வீட்டுக்கும் போகவில்லை,'' என்றாள். அப்படியா! என்ற மாந்தாதா, இரண்டாம், மூன்றாம், நான்காம் என ஐம்பது மகள்கள் வீட்டுக்கும் சென்றான். அவர்களும் முதலாமவள் சொன்ன பதிலையே சொன்னார்கள். ஆம்... சவுபரி ஐம்பது இளைஞர்களாக வடிவெடுத்து எல்லா வீட்டிலும் இருந்தது அப்போது தான் தெரிய வந்தது. ஒரு பெண்ணுக்கு இருவர் வீதம் நூறு பிள்ளைகளைப் பெற்றார்.
அவர்களுடன் ஒருநாள் தெருவீதியில் சுற்றி வந்தார். ஓரிடத்துக்கு வந்ததும் ஞானோதயம் வந்தது. இவ்வளவு மனைவியர், இத்தனை பிள்ளைகளைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வந்து விட்டதே! ஐயோ! பழைய வாழ்க்கையே மேலானது. தவமிருக்கவே போய்விடலாம் என்றெண்ணினார். மீண்டும் காட்டுக்கே கிளம்பி விட்டார். பெரியவர்களின் மனசும் கூட, குழந்தைகளுடையது போல மாறிக்கொண்டே இருக்கும். அதை ஒருநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். - இனியவன்
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment