1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
நூல்களைக் கற்காவிட்டாலும், உள்ளத்தால் பற்றுகளை விலக்கியவரே ஞானம் பெற முடியும், தான் பெற்ற ஞானத்தை பிறருக்கு வழங்க முடியும்.
காட்டின் நடுவில் இருந்தது அந்த சிறிய ஆலயம். அதில் ஞானம் பெற்ற ஒரு குரு வாழ்ந்து வந்தார். அடர்ந்த வனத்திற்குள் இருந்ததால் அந்த ஆலயத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவுமில்லாமல் அந்த குரு, இயற்கையோடு ஒன்றி வாழ ஆசைப்பட்டார். மக்கள் நடுவே செல்வதோ, அவர்களுக்கு அறிவுரை, போதனை போன்றவை கூறி தடபுடல் செய்வதோ அவருக்கு பிடிக்காது. அதனால் தன்னுடைய வாழ்வை இறை சிந்தனையோடு கழித்து வந்தார்.
ஒரு சமயம் அந்த வழியாக புத்த துறவிகள் சிலர் வந்தார்கள். அவர்கள் ஆலயத்தில் இருந்த குருவைக் கண்டதும் அவரை வணங்கி மரியாதை செலுத்தினார்கள். ஆனால் அவர்கள் மிகப்பெரிய படிப்பாளிகள் என்பதை அவர்களின் முகமும், அவர்களின் செய்கையுமே காட்டிக் கொடுத்தது. குருவிடம், புத்த துறவிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஞானம் சார்ந்து பலவிதங்களில் பேசிக்கொண்டிருந்தார் குரு.
இதைக் கேட்ட புத்த துறவிகள், ‘நீங்கள் மிகப் பெரிய ஞானி என்று நினைக்கிறோம்’ என்றனர். அதற்கு குரு, ‘இல்லை நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது’ என்றார். இருள் கவ்வும் வேளை என்பதால் அன்றைய இரவை அந்த இடத்திலேயே கழிக்க, புத்த துறவிகள் முடிவு செய்தனர். அவர்களுக்கான உணவை குரு தயார் செய்து கொடுத்தார். பின்னர் அவர் உறங்கச் சென்று விட்டார். ஆனால் புத்தத் துறவிகள் இரவில் வாட்டிய குளிரைத் தாங்க முடியாமல், வெளியே தீமூட்டி சுற்றிலும் அமர்ந்து குளிர்காயத் தொடங்கினர்.
அப்போது தங்களுக்குள் மெதுவாக பேசிக்கொண்டனர். அவர்களின் பேச்சு மெல்ல மெல்ல மத சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. பின்னர் அது விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் அவர்களின் விவாதம் சூடுபிடித்து, உரத்த குரலில் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது போல் பேசிக்கொண்டனர். நன்றாக உறங்கிக் கொண்டிருந்த குரு, அவர்களின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். பின்னர் மெதுவாக எழுந்து வந்து, அவர் களின் நடுவில் அமர்ந்தார். இந்த நிலையில் புத்தத் துறவிகளின் வாதம் அக வாழ்வு, புற வாழ்வு பக்கம் திரும்பியது.
‘மனிதனின் புறவாழ்வு வெறும் மாயைதான். அக வாழ்வுதான் அவனது மரணத்திற்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் நிரந்தரமானது’ என்றார் ஒரு புத்தத் துறவி. இன்னொருவர், ‘இல்லை.. அகம் என்பது வெறும் எண்ணங்களின் குவியல்தான். கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. எனவே அகம் என்பதுதான் மாயை. இப்போது நம்முன் காணப்படும் உலகம், அதில் நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வு ஆகியவையே உண்மை’ என்றார். மற்றொருவர், ‘உலகமே ஒரு மனோ ரீதியான மாயைதான்’ என்றார்.
‘இல்லை.. உலகம் என்பது உண்மையானது. புறநிலையின் வெளிப்பாடு அது’ என்று தன்னுடைய கருத்தைச் சொன்னார் மற்றொரு துறவி. கடைசியாக ஒருவர் ‘உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானச வாழ்வும் உண்மைதான். ஆனால் அதையும் தாண்டிய பயணமே மிக முக்கியமானது’ என்றார். இறுதியில் அந்த புத்தத் துறவிகள் அனைவரும், தங்களுடன் அமர்ந்திருந்த குருவின் பக்கம் திரும்பினர். அவரிடம், ‘உங்கள் கருத்து என்ன? உலகம் வெளிப்படையான உண்மையா? அல்லது மனோ ரீதியான மாயையா?’ என்று கேள்வியால் அவரைத் துளைத்தனர். குரு, துறவிகளை நோக்கி கேட்டார். ‘அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே. அது மனதில் மாயையா? அல்லது வெளிப்படையாக தெரிவதா?’.
அப்போது ஒரு புத்தத் துறவி, ‘போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனதில் மாயைதான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனதில் சலனக் காட்சிகள்தான். அந்த வகையில் அந்தப் பெரிய பாறை உண்மை அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்’ என்றார். உடனே குரு, ‘அவ்வளவு பெரிய கல்லை, உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரி கிறீர்களே! உங்கள் தலை கனக்காதோ?’ என்றார். அதைக் கேட்ட புத்தத் துறவிகளுக்கு மெய்யுணர்வு உண்டானது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும் தாங்கள் மூட்டிய தீயிலேயே போட்டு பொசுக்கிவிட்டு, குருவின் சீடர்களாக மாறினர்.
நூல்களைக் கற்றதனால், புலமைச் செருக்குடன் வாதமிடுபவர்கள் எந்த ஞானத்தையும் பெற முடியாது. நூல்களைக் கற்காவிட்டாலும், உள்ளத்தால் பற்றுகளை விலக்கியவரே ஞானம் பெற முடியும், தான் பெற்ற ஞானத்தை பிறருக்கு வழங்க முடியும்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment