Tourist Places Around the World.

Breaking

Tuesday, 18 August 2020

வாழ்வை வசப்படுத்துவோம் - ஆன்மீக கதைகள் (121)

 


வாழ்க்கை அற்புதமானது. அழகானது. ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.  


ஒவ்வொருநாளும் வாழ்க்கை சுவாரசியமான சம்பவங்களை வைத்துக்கொண்டு நமக்காகக் காத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் நமது நாள் அமைகிறது. முன்னுரையும், முடிவுரையும் எழுதப்பட்ட புத்தகம். அதன் நடுவில் உள்ள பக்ககங்களை நாம்தான் எழுத வேண்டும். அது நம் வசம்தான் இருக்கிறது. இன்று ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு சோர்வு, எதிர்மறை எண்ணங்கள், வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி என்று பாலையாக இருக்கிறது. இதுவல்லவே நம் வாழ்க்கை.  


ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நமது நட்புகள், மோசமான பழக்கங்கள், தீமை என்று தெரிந்தும் விடமுடியாத சில விஷயங்கள் என்று நம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகளே நம் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. போலியான, மலிவான விஷயங்கள் எவை என்று அறிந்து அவைகளைக் கைவிட்டாலே சிறந்த ஒன்று நமக்குக் கிடைக்கும். இந்த வாழ்க்கையை வசப்படுத்த நம்மால் முடியும். நம் கையில்தான் அனைத்தும் உள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது பெரியோர் மொழி அல்லவா.    


ஒரு ஜென் குரு மரணப்படுக்கையில் இருந்தார். அவரைச் சுற்றி கடைசி நேர அறிவுரை கேட்க சீடர்கள் காத்திருந்தார்கள். குரு சன்னக் குரலில் ஒரு பால் இனிப்பு கேட்கிறார். சீடன் ஒருவன் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வருகிறான். குரு அதை மகிழ்வுடன் வாங்கி வாயில் இட்டுச் சுவைக்கிறார். “ஆஹா என்ன சுவை? வாழ்க்கை” என்கிறார். கண் மூடுகிறார். இதுதான் அறிவுரை. வாழ்க்கை இனிமையானது. அதை நம் வசப்படுத்த வேண்டும். பிறருக்காக வாழ்வதில்லை. நமக்காக வாழ வேண்டும். 


வலிகளை வெற்றியாக்கும் சூட்சுமங்களை கற்றுக்கொண்டால் போதும். தேடிச் சோறு நிதம் தின்று வாடிப் பல கதைகள் பேசி வெற்று மனிதர்களாய் வீழ்வதற்கு பிறக்கவில்லை நாம்.  சரி வசப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு நாம் அடுத்தவர் தயவை நாட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் உற்சாகமாக்க நம் மனசால் முடியும். மாறிக்கொண்டே இருப்பது மனம் என்பது மாற்ற முடியாத விஷயம். 


எந்த இடத்திலும் நம்பிக்கையை விடாமல், உற்சாகமாக இதுவும் கடந்து போகும் என்ற உணர்வுடன் நடந்தால் வெற்றிதான்.  எல்லா உதவிகளும் நமக்குள் இருந்துதான் வந்துள்ளது என்று புரியும். வாழ்க்கையின் முக்கியமான விஷயமே வாழ்வதுதான். அர்த்தமுள்ள வாழ்வு என்பதை விட, நம் ஒவ்வொரு நொடியையும் அழகான ரசனையுடன் கழித்தோமா என்பது முக்கியம். எப்போதும் முகம் கடுப்புடன், சிரிப்பு என்பதை மறந்து, வெறுப்பும், விரக்தியுமாய் இருந்தால் அந்தக் கசப்பு சுற்றியும் பரவிவிடும். வாழ்க்கை குறித்து எப்போதும் ஒரு சிந்தனை, கவலை. 


நம்மைச் சுற்றி இறுக்கமான மனிதர்களே நிறைய இருக்கிறார்கள். நம் சூழ்நிலையையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள்.  எந்த நேரமும் எதோ ஒரு சிந்தனை, எதைப் பற்றியாவது கவலை, வேதனை என்று கழிப்பதற்காக இங்கு வரவில்லை. அழகான இந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து அனுபவித்துப்போகவே வந்திருக்கிறோம். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை மாற்ற முடியாத விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. அதற்குப் பதிலாக சில விஷயங்களைப் பின்பற்றினால் வாழக்கை நம் வசம்.  


முதலில் சிரிக்கப் பழகுவோம். அன்பான சொற்களைப் பேசவும், மனம் திறந்து பேசவும் கற்றுக் கொள்ளலாம். அற்ப விஷயங்களை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? உங்களை நீங்கள் புரிந்துகொண்டால் போதும். மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலை எதற்கு?  மன்னிக்கப் பழகுங்கள். நேர்மை முக்கியம். மன்னிப்பு கேட்கத் தயங்க வேண்டாம். தாழ்வு மனப்பான்மை வேண்டாமே. கனியிருப்ப ஏன் காய் கவர வேண்டும்? பேசும் முன் யோசியுங்கள். அதனால் பலன் உண்டா என்று அறிந்து நிதானித்துப் பேசலாம். 


அவரவருக்கு என்று சில நியாயங்கள் இருக்கும் அதைப் புரிந்து கொள்ளலாம். பேசிவிட்டு முடிவு எடுக்கலாம். தப்பு இல்லை. முடிந்த அளவு கொடுங்கள். ஆனால் எதிர்பார்க்க வேண்டாம். வாழ்க்கை என்றால் இனிப்பும் கசப்பும் இருக்கும். ஏற்கப் பழகுங்கள். எதுவும் கடந்து போகும். தேவையில்லாத மிடுக்கு பந்தா வேண்டவே வேண்டாம். பிடிவாதமே பல நிம்மதி இல்லாத சூழ்நிலைக்கு வழி வகுக்கிறது. அதை ஒதுக்குங்கள்.  நாணலாக வாழப்பழகலாம். கோள் சொல்லுதல், குறை கூறுதல், தவறுகளை சுட்டிக் காட்டுதல் வேண்டாம். மற்றவர்களுக்கும் மரியாதை தேவை. குழந்தை என்றாலும் அதற்கும் மரியாதை கொடுங்கள். 


இங்கு ஒவ்வொருவரும் தனி மனிதர்கள். நல்ல விஷயங்களில் முதல் வணக்கம் கூறுவது நாமாக இருக்கலாமே. என்ன குறைந்துவிடப் போகிறது. நமக்குத்தான் பெருமை. யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நம் லட்சியமாக இருக்கட்டும். முடிந்தவரை விட்டுக்கொடுக்கலாம். இவைகளை கடைப்பிடித்தாலே வாழ்வு நம் வசம் என்பது உண்மை.  நம் குடும்பம், குழந்தைகள், நம்மை நம்பி உள்ளவர்கள் என்று நினைப்புடன் சில தவறான பழக்கங்களை கைவிட்டாலே பாதி மகிழ்வு வந்துவிடும். 


நம் உலகம் அழகானால் நம்மைச் சுற்றியும் எல்லாம் அழகாகி விடும். வாழ்வை மட்டுமல்ல மனிதர்களும் நம் வசம்தான். ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாழ்வை ஆசையுடன் வாழலாமே. மனம் மகிழ்வானால் வாழ்வும் அதுதான் வாழ்வின் அர்த்தமும். 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


- ஜி.ஏ.பிரபா, கணித ஆசிரியர், கோபிசெட்டிப்பாளையம்.


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,  

No comments:

Post a Comment