1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
தெய்வீகத் தன்மை வாய்ந்த மகரிஷி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அந்தத் துறவியிடம் இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள், ‘சுவாமி! நாங்கள் தவம் செய்து ஆத்மஞானம் பெற விரும்புகிறோம். எங்களை உங்களுடைய சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்கள். அவர்கள் இருவரையும் தன்னுடைய ஆசிரமத்திலேயே தங்க வைத்துக் கொண்டார் மகரிஷி. ஆசிரமத்தில் தங்கிய இளைஞர்கள், குரு ஏதாவது உபதேசம் செய்வார் என்று நினைத்து காத்திருந்தனர். ஆனால் குரு தன்னுடைய தியானத்திலேயே ஆழ்ந்திருந்தார். இருவருக்கும் எந்த விதமான உபதேசமும் செய்யவில்லை. நாட்கள் பல கடந்துவிட்டன.
இரண்டு இளைஞர்களும் நேராக மகரிஷியிடம் சென்று, ‘சுவாமி! நாங்கள் இங்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. நீங்களாக ஏதாவது உபதேசம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எந்த உபதேசமும் வழங்கவில்லை. எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்தருளுங்கள்’ என்று வேண்டினர். அவர்களின் ஆர்வத்தைக் கண்ட மகரிஷி, ‘சரி.. நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் இருவரும் ஒரு காரியம் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு ஆளுக்கொரு சிவலிங்கம் தருகிறேன். அதைக் கொண்டு போய், யாருமே பார்க்காத ரகசியமான இடத்தில் வைத்து விட்டு வாருங்கள். அதன்பிறகு உங்களுக்குத் தேவையான உபதேசத்தை நான் வழங்குகிறேன்’ என்றார். பின்னர் அவர்களிடம் ஒவ்வொரு சிவலிங்கத்தையும் கொடுத்தார்.
இருவரும் மகரிஷியை வணங்கி விட்டு, அவர் சொன்னபடியே சிவலிங்கத்தை, யாரும் பார்க்காத இடத்தில் வைத்து விட்டு வருவதற்காக புறப்பட்டுச் சென்றனர். இருவரும் வேறு வேறு திசைகளில் சென்றார்கள். ஒரு சீடன், காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்தான். இறுதியில் மனித சஞ்சாரமே இல்லாத ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து, அதற்குள் சிவலிங்கத்தைப் புதைத்து வைத்தான். புறப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே அந்த சீடன் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தான். அவனின் முகத்தில் குருவின் கட்டளையை நிறைவேற்றிவிட்ட திருப்தி தென்பட்டது.
மற்றொரு சீடனைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. அவன் எங்கே போனான்? என்ன ஆனான்? என்று எதுவும் அறியப்படவில்லை. இந்த நிலையில் ஒரு வருடம் கழிந்த நிலையில், அந்தச் சீடன் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தான். மகரிஷியின் முன்பாக வந்து வணங்கிய அவனது கையில், குரு கொடுத்து அனுப்பிய சிவலிங்கம் அப்படியே இருந்தது. அவன் அந்த சிவலிங்கத்தை மகரிஷியிடமே திருப்பிக்கொடுத்தான்.
‘சுவாமி! என்னை மன்னித்துவிடுங்கள். இந்த சிவலிங்கத்தை ஒருவரும் காணாத இடத்தில் வைக்க என்னால் முடிந்த வரை முயற்சி செய்து விட்டேன். ஆனால் முடியவில்லை. நான் மிகவும் ரகசியமான இடம் என்று நினைத்துப் பல இடங்களிலும் சிவலிங்கத்தை வைக்க முயன்றேன். அப்போதெல்லாம் என் உள்ளத்தில் இருந்து, ‘நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்; நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்று ஒரு குரல் கேட்பது போல் இருந்தது. அது யாருடைய குரல்? என்று தெரியவில்லை. இப்போதும் கூட அந்தக் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அந்தக் குரல் கேட்காமல் இருந்தால்தான், என்னால் இந்த சிவலிங்கத்தை மறைத்து வைக்க முடியும். உங்கள் கட்டளையை நிறைவேற்றத் தவறிய குற்றத்திற்காக தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றான்.
அந்தச் சீடனின் விளக்கத்தைக் கேட்டதும், மகரிஷி அவனை மகிழ்ச்சியோடு தழுவிக்கொண்டார். பின்பு, ‘மகனே! நீ உண்மையை உணர்ந்து விட்டாய். தண்டனையை கேட்டுப்பெற நினைத்தபோதே, பரிசு பெறும் தகுதி உனக்கு வந்துவிட்டது. உனக்குள் சாட்சியாக குடி கொண்டிருக்கும் பரம்பொருளை நீ அறிந்து கொண்டு விட்டாய். அவனே ஆத்மா என்பவன். அவன் எங்கும் நிறைந்திருக்கிறான். இந்த பெரிய உண்மை உனக்கு விளங்கிவிட்டது. இதுவே உனக்கு என்னுடைய உபதேசமாகும்’ என்றார்.
ஆம்! இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. அந்த உண்மையான பரம்பொருள் ஆத்மாதான்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment