Tourist Places Around the World.

Breaking

Monday 10 August 2020

ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை மௌனகுரு சுவாமிகள் / Srila-Sri Mouna Guru Swamigal

 

ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை மௌனகுரு சுவாமிகள்

Srila-Sri Vallimalai Mouna Guru Swamigal

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

மௌன சுவாமிகள், பொன்னை என்ற ஊருக்கு அருகில் உள்ள தங்கால் கிராமத்தில் சமாதி கொண்டு, தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்.  வேலூர் மாவட்டம், பொன்னையில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது தங்கால். பொன்னை கிராமத்துக்கு, சென்னையில் இருந்து சோளிங்கர் வழியாகச் செல்லலாம். வேலூர்-காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்தும் செல்லலாம்.  தங்கால்... ஆஸ்ரமத்தின் முகப்பே அழகாக உள்ளது. உள்ளே 'சுந்தரவனம்' என்ற பலகை கண்ணில் படுகிறது. 


மௌன சுவாமிகளின் சமாதி ஆலயத்துக்கு முன்புறம் சுவாமிகளின் சிலை, அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கும் வடிவம். சுவாமிகளின் கருவறைக்குப் பின், வரிசையாக யோக முனிவர்களின் சிலைகள். அருகிலேயே, சுவாமிகளின் சீடரான மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது. ஆஸ்ரமம் மிகப் பெரிதாக வளர்ச்சி கண்டுள்ளது. காரணம், சுவாமிகளின் சீடர் குருஜி சுந்தரராம் சுவாமிகள். 


இவர் ஒருமுறை திருப்பதி சென்றிருந்தபோது, திருமலையில் வைத்து மௌன குருவைச் சந்தித்துள்ளார். அவருடைய கண்களில் பொங்கிய கருணை வெள்ளம் குருஜி சுந்தரராம் சுவாமிகளை ஈர்க்கவே, மௌனகுருவின் சீடரானார்.  வள்ளிமலை மௌனகுரு சுவாமிகள் என்று அறியப்பட்டவர், பின்னாளில் தங்கால் மௌனகுரு சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார். 


அந்த அளவு, குறுகிய காலத்தில், தங்கால் ஆஸ்ரமத்தில் அமர்ந்து அருள்மாரி பொழிந்து, அன்பர்களின் மனதில் இடம் கொண்டார். சுவாமிகளின் இளமைக் காலம் குறித்தோ அவர் எங்கிருந்தார் என்பது குறித்தோ எதுவும் தெரிய வில்லை (ஆனால், கேரளத்தின் நாயர் இன குடும்பத்தில் பிறந்தவர் மௌனகுரு என்று குருஜி சுந்தரராம் சுவாமிகள் அன்பர்களிடம் கூறியிருக்கிறார்). 


பட்ட மேற்படிப்பு படித்தவரான சுவாமிகள், குளிப்பதோ உண்பதோ ஏதும் அறியாதவராகவே இருந்துள்ளார். சில காலம் மௌனமாக இருந்து பழகியதால், பின்னாளில் முழுவதுமாக மௌனியாகி யுள்ளார். சுவாமிகளுக்கு என்ன வயது இருக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியவில்லையாம். சுவாமிகளின் திருவுருவப் படத்தைக் காணும் போதே, அந்த யோகியின் அதிர்வலைகள் நம்மை ஆட்கொள்கின்றன. 


மெலிந்த தேகம். ஒளி வீசும் கண்கள்... அருள் ததும்பும் பார்வை நம்மைக் கவர்ந்திழுக்கிறது. வள்ளி மலையில் தவம் இயற்றிய சச்சிதானந்த சுவாமிகள், தன் இறுதிக் காலத்தில் சென்னைக்கு வந்த பிறகு, மௌனகுரு சுவாமிகள், வள்ளிமலை குகையில் தவம் செய்தாராம். சுமார் 18 வருடங்கள் வள்ளிமலையிலேயே தங்கி, வள்ளிமலை திருப்புகழ் ஆஸ்ரமம் வளர்ச்சியடையக் காரணமாக இருந்தார். 


வள்ளிமலை சுவாமிகள் சமாதி அடைந்த பிறகு, அவரின் சீடர்கள் பலர் மௌனகுரு சுவாமி களையே தங்கள் குருநாதராக ஏற்றனர். ''சுவாமிகள், முதலில் குடியாத்தம் அருகிலுள்ள 'தொண்டான்துளசி' கிராமத்தில்தான் இருந்திருக்கிறார். அங்கே அரிய மூலிகைகள் நிறைந்த மகாதேவ மலையில் தங்கி, குகைகளில் பல்லாண்டுகள் தவம் செய்திருக்கிறார். அதன் பிறகே வள்ளிமலைக்குச் சென்றார்'' என்கின்றனர்.  


மௌனகுரு சுவாமிகளுக்கு சென்னை மட்டுமல் லாது, சித்தூர் உள்ளிட்ட ஆந்திரப் பகுதி மக்களும் சீடர்கள் ஆனார்கள். நாடிவரும் அன்பர்களுக்கு அலுக்காமல் சலிக்காமல் மணம் வீசும் விபூதியை எடுத்துக் கொடுப்பார். சிலருக்கு, தானே தன் கட்டை விரலால் விபூதி எடுத்து நெற்றியில் இட்டும் விடுவார். சிறிய வேல் கொண்டு அன்பர்களின் நாவில் மந்திரம் ஏதோ எழுதும்  பழக்கமும் இருந்துள்ளது. அவ்வாறு எழுதப் பெற்றவர்கள், பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டுள்ளனர்; சிறுவர்கள், கல்வியில் சிறந்து விளங்கியுள்ளனர். 


''குழந்தைகளுக்கு விபூதி கொடுக்கும்போது, நாணயங்களும் சேர்த்துக் கொடுப்பார். விபூதி எடுக்க சற்று தாமதம் ஆகிறது என்றால், அவர் நாணயங் களைத் தேடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்'' என்கிறார் ஓர் அன்பர்.  ''சுவாமிகள் அடிக்கடி சித்தூர் செல்வார். தபோவனம், திரௌபதி அம்மன் கோயில், போடி (மொட்டை) மலை போன்ற இடங்களில் சுவாமிகளுக்கு அன்பர்கள் பாத பூஜை செய்வர். 


பௌர்ணமி முன்னிரவில் தொடங்கும் பூஜை, சில முறை நள்ளிரவு வரை நீடிக்குமாம். அப்போது, சிலை போல் சலனம் ஏதும் இன்றி நிஷ்டையில் இருப்பார் சுவாமிகள். அவருடைய நிஷ்டை கலைந்த பிறகே தீபாராதனை செய்வார்கள்.  சுவாமிகள் நிஷ்டை கலைந்து விழிக்கும் போது, அவரின் பார்வை தங்கள் மீது படாதா என பலரும் அவர்முன் முண்டியடித்து நிற்க, சுவாமிகளோ அண்ணாந்து வானத்தையோ விட்டத்தையோ பார்த்துவிட்டு, பிறகே அன்பர்களைப் பார்த்து ஆசீர்வதிப்பார்! வள்ளிமலையில் சுவாமிகள் இருந்தபோது, ஒருநாள் சுவாமிகளைக் காணவில்லை என்று தகவல் பரவியது. கவலைப்பட்ட அன்பர்கள், சுவாமிகளின் படத்துக்கு முன் சீட்டு எழுதிப் போட்டார்கள். 


அதில், 'ஒரு வாரத்தில் சுவாமிகள் தரிசனம் தருவார்' என்று வந்தது. ஆனால், 'சுவாமிகள் சமாதியடைந்துவிட்டார்' என்று தகவல் பரவ, அன்பர்களுக்கு அதிர்ச்சி. வள்ளிமலைக்கு வந்தவர்கள், சுவாமிகளைக் கண்டு அதிர்ந்தனர். மருத்துவர் சிகிச்சையளிக்க முற்பட, சுவாமிகளின் கண்களில் நீர்...  நடந்தது இதுதான்! வள்ளிமலையில் பாதாள குகை அருகே புலிகள் நடமாடுமாம். சுவாமிகள் அந்த குகையில் அமர்ந்து தவமியற்றி இருக்கிறார். 


ஆடு மேய்ப்பவன் ஒருவன், அந்த குகை வழியே மேய்ச்சலுக்குச் சென்றபோது, தவ நிலையில் சுவாமிகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அவரின் தவநிலையைக் கலைக்க முயன்று, இயலாமல் போகவே, ஆசனத்தைக் கலைத்து, அவரை தோளில் சுமந்து வந்து ஆஸ்ரமத்தில் படுக்க வைத்துவிட்டான். சுவாமிகள் மூச்சை அடக்கி தவநிலையில் இருந்ததால், சுயநினைவுக்கு வரத் தாமதமாகியுள்ளது. 


மூச்சுப்பேச்சு இல்லாமல் சுவாமிகள் இருப்பதைப் பார்த்த ஆடு மேய்ப்பவன் 'சுவாமிகள் இறந்து விட்டார்' என்று தகவல் அனுப்பியிருக்கிறான். பிறகு, சகஜ நிலைக்கு வந்த சுவாமிகள், நிலை அறிந்து வருத்தம் அடைந்தார். அப்போதிருந்து, சுவாமிகளின் உடல் நிலை மோசமடைந்தது. இனியும் மலை மேல் ஏறி இறங்குவது சிரமம்... எனவே, சமவெளியில் ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று எண்ணிய அன்பர்கள், வள்ளிமலை- சித்தூர் சாலையில் தங்கால் கிராமத்தில் சாலையோரம் இடம் வாங்கினர். சுவாமிகள் அந்த இடத்தை சோலைவனமாக்கினார்.  ''ஆஸ்ரமத்தின் முன்புறம் ஓடு வேய்ந்த சிறிய அறை. உள்ளே பாதாள அறை- சுவாமிகள் தவமிருக்கும் அறை! மரச்சாய்வு நாற்காலியில் சுவாமிகள் அமர்ந்திருப்பார். 


ஒரு பெரிய அலுமினியப் பாத்திரத்தில் வெல்லம், பழச் சாறுகள் சேர்த்து பானகம் செய்து வெளியில் வைத்து விடுவார். போவோர் வருவோர், குடித்துச் செல்வார்கள். சுவாமிகளின் கைகளால் குடிக்க விரும்பு வோருக்கு அவரே தருவார்...''  மௌனகுருவுக்கு பூண்டி மகானுடன் நல்ல தொடர்பு. ஒரு முறை, பூண்டி மகானின் காலில் சிறு விரல் அருகே புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அதை, மௌனகுரு தன் பச்சிலை மருத்துவத்தால் குணப்படுத்தினார். 


மௌனகுருவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்ட போது, அவர் குருஜி சுந்தரராம் சுவாமிகளின் உதவியை நாடியிருக்கிறார். குருஜியே ஹோமம் வளர்த்து, மௌனகுருவின் முழங்கால் வலிக்கு நிவாரணம் தந்திருக்கிறார்.  தன் பிரச்னைக்கு வேறு ஒருவரை நாடுவதும், மற்றவர்களின் பிரச்னைகளை தாமே தீர்த்து வைப்பதும் என்று இவரின் லீலைக்கு உதாரணங்கள் இவை!  3.5.1971- சுவாமிகள் தம் பூவுடலை மறைத்துக் கொண்டார். சித்தர் சுவாமி களை சமாதிப்படுத்தும் முறைகளுடன் மௌனகுரு சமாதியும் எழுந்தது. 


குருஜி சுந்தரராம் சுவாமிகள், ஆஸ்ரமத்தை விரிவாக்கி, ஸ்ரீசங்குசக்ரதாரி ஆண்டவன் மகா தியான மண்டபம் அமைத்தார். அதில் 9 அடி உயரத்தில் பஞ்சலோக திருவேங்கடத்தான் காட்சி தருகிறார்.  தற்போது ஆஸ்ரம பூஜைகள் பிரசன்ன வேங்கடேச சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடக்கிறது. 


பௌர்ணமி மகா யாகபூஜையில் அன்பர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். மௌனகுருவுக்கு சித்திரை மாத மக நட்சத்திரத்தில் குரு பூஜை குறைவின்றி நடந்து வருகிறது. 'இருந்தும் இல்லாமல் இரு' என்பது! சுவாமிகள் வாசகம் எல்லா வசதிகளும் இருந்தும், எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை என்பதுபோல் பற்றறுத்து வாழும் நிலையை, மௌன குருவிடம் உபதேசம் பெற்ற சுந்தரராம் சுவாமிகள் இப்படி வெளிப்படுத்தி உள்ளார். மகான்களின் வாக்கு- நம்மை நெறிப்படுத்தும்! அவர்களின் கருணை- நமக்கு உறுதுணையாக இருக்கும்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in vellore , vellore siddhargal , jeeva samadhi in vellore , vellore siddhar , siddhar temple in vellore , vellore siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in vellore , siddhar temples in vellore , vellore sitthargal , siddhars in vellore ,


No comments:

Post a Comment