Tourist Places Around the World.

Breaking

Sunday 9 June 2019

சட்டி சித்தர் எனும் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் / Kannappa Swamy

சட்டி சித்தர் எனும் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள்.

Kannappa Swamy

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


சித்தர் என்போர் சித்தில் வல்லவர் என்பது பொதுக் கருத்து. அவர் நீர்மேலும் நெருப்பிலும் நடந்திடுவர். இரும்பைப் பொன்னாக்குவர். ஒரு நேரத்தே பலவிடங்களில் தோன்றிக் காட்சி அளிப்பர். காடு மேடு மலையென அலைந்து உழலுவர் எனச் சொல்லி மாளாது இவர் திறம். இவர்கள் கந்தல் ஆடை உடுத்தியும், ஆடை துறந்தும் திரிவதால் மக்கள் சித்தர்களின் பெருமைகளை உணர்ந்தறியாமல் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதே பெரு நிகழ்வு. காலச் செலவில் மக்களுக்கு சித்தர்களின் பெருமைகள் விளங்கலாயிற்று. இவர்கள் கடுமையான தவங்களை இயற்றித்தான் சித்தர் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொண்டுள்ளனர் என்ற உண்மை தெரியவந்துற்றது. சித்தர்கள் புறத் தோற்றத்தில் மிக எளியராகக் காணப்படினும் உள்ளகத்தே மதிப்பறியாத ஒன்பான்மணிகளை (நவரத்தினம்) கொண்டிருந்தனர். 

அந்த மணிகளை உலகோர் உணரும் பொருட்டு செயலாற்றி வந்துள்ளனர். இறைவனின் முழுநிறைவான திருவருள் கிட்டப் பெற்றவர்களே சித்தர் என்று ஆகிட முடியும். இந்தப் புது நாகரிகக் காலத்திலும் இறைப் பேரருளால் சித்தர்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை நடுவண் சிறை அமைந்த புழல் பகுதியின் காவாங்கரையில் சட்டி சித்தர் எனப்பட்ட மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் தோன்றி பல இறும்பூதுகளை (miracles) நிகழ்த்தியுள்ளார். சித்தரின் வருகை மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் தவம் புரிந்த சட்டி சித்தர் இறுதியாக கடலில் மிதந்தபடி திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கயதை பொது மக்கள் பார்த்துள்ளனர். இவர் பிறப்பிடம் யாது? பெற்றோர் யாவர்? என்பன அறியக் கிடைக்கவில்லை. முதன்முதலாக திருவொற்றியூர் வந்து சேர்ந்த இவர் ஆடையின்றி அம்மணராக சென்னை நகர் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து விட்டு புழலில் உள்ள காவாங்கரைக்கு வந்தார். அங்கு இவரது கோலம் கண்ட ஒரு அம்மையார் இவரது இடுப்பைச் சுற்றி ஆடை கட்டினார். அது முதல் சித்தர் அங்கேயே தங்கலுற்றார். 

சித்தருக்கு சடைகட்டி மயிர்க் கற்றையாக இருந்ததால் அவ் அம்மையார் ஒரு அன்பரை அமர்த்தி மொட்டை அடிக்க ஏற்பாடு செய்தார். நீள் சடையும் அழுக்கும் கோர்த்திருந்த அவரது நிலையையும் கண்ட அந்த அன்பர் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு மொட்டை அடிக்கத் தொடங்கினார். அதுபோது மிக உயர்ந்த நறுமண வீச்சு அங்கே எழுந்தது. அந்நறுமணம் எங்கிருந்து வருகின்றது என்று நின்றிருந்தோர் திகைப்புற்று நோக்க அது சித்தரின் தலையிலிருந்து தான் வீசுகின்றது என்பதை இறுதியாக அறிந்தனர். அப்போது தான் அவர் மாபெரும் தவப்பெரியார் (மகான்) என்பதை அங்கிருந்தோர் அறிந்து கொண்டார்கள். அது முதல் சித்தர் அவ்விடத்தில் இருந்து கொண்டே பல இறும்பூதுகளை நிகழ்த்தி வந்தார். ஆடை அணிவித்த அம்மையார் வீட்டில் அவர் தங்கி இருந்த போது முன்கூட்டியே அன்பர்களது வருகையை அறிந்து கொள்வார். தன்னை நாடி வரும் அன்பர்கள் தமது குறைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நீங்கியதன் காரணமாக அன்பர்கள் அவரது தீவர பக்தர்கள் ஆயினர். சட்டி சித்தர் என்ற பெயர்க் காரணம் சித்தர் கன்னிமார் எழுவரை (சப்த மாதர்) தாயாக வரித்து அன்னபூரணியை ஏற்றிப் புகழ்ந்து அட்சய பாத்திரம் ஒன்றை வேண்டிப் பெற்றார். 

அந்த சட்டியில் இருந்து வேண்டிய அளவு உணவுப் பொருள்கள் குறைவில்லாது வந்து கொண்டே இருந்தன. அதனால் அன்பர்களுக்கு வயிறார உணவிடும் வழக்கத்தை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக சட்டி சித்தர் என்ற பெயர் இவருக்கு உண்டாயிற்று. ஒரு சமயம் வயலில் வேலை பார்த்து விட்டு களைப்புற்றிருந்த குடியானவர்களை உணவு உண்ண அழைத்தார். அவரது சட்டியில் சிறிதளவே உணவு இருந்தது. அதைக் கண்ணுற்ற அக் குடியானவர்கள் ''இந்த சிறு கவள உணவை எப்படி எங்கள் எல்லோருக்கும் பரிமாறுவீர்'' என்றனர். சித்தர் அனைவரையும் வரிசையாக அமரச் சொல்லி முதல் ஒருமுறை சோறு பரிமாறினார். சட்டியிலோ சோறு அள்ள அள்ளப் பெருகியது. அடுத்து இரண்டாவது முறையும் அந்த உழவர்களுக்கு வயிறாரச் சோறு பரிமாறினார். 

இந்த விந்தை கண்டு உழவர்கள் வியப்புற்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். சித்தர் தாம் வைத்திருந்த சட்டியிலிருந்து அன்பர்களுக்கு சோறு பரிமாறி வந்ததைக் கண்டு மகிழ்வுற்ற அம்மையாரின் கணவர் இராகவன், "சட்டிச் சோறு கண்ணா" என்று அன்புடன் அழைத்தார். அதுவே கண்ணப்ப சுவாமி என்று வழங்க காரணமாகியது. சித்தரின் பரிவு சித்தர்கள் பேசும்போது ஏதடா ... எங்கேயடா.. என்று ஒருமையில் பேசுவர். உரிமை கலந்த பாச உணர்வு கொண்ட பேச்சாக அவை இருக்கும். அதே போல் சட்டி சித்தரும் மற்றவர்களிடம் பேசும்போது நைனா .. என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். அறியாமல் செய்யும் பிழைகளை அருள் உள்ளத்தோடு அவர் களைய முற்பட்டார்.

பொற்கொல்லர் ஒருவர் கொலுசு செய்து தருவதாகக் கூறி ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் வாங்கிய பணத்தைச் செலவு செய்துவிட்டார். எனவே அவரிடம் பொன் வாங்கப் பணம் இல்லை. கொலுசு செய்யச் சொன்னவர் கேட்டபோது நாளை கொலுசு தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். சொன்னபடி நாளை கொலுசு தராவிட்டால் மானம் போய்விடும் என்று வேதனையுற்ற பொற்கொல்லர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக நஞ்சை வாங்கி வைத்திருந்த போது கடைசியாகச் சித்தரைப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. சித்தரைப் பார்க்க வந்த பொற்கொல்லரை அமர வைத்து மூன்று கூழாங்கற்களை எடுத்து பக்கத்தே வைத்தார். அவை பொன்னாக மாறின. அவற்றை கொல்லரிடம் கொடுத்து போய்யா .. பொழச்சுக்க .. என்று சொல்லி அனுப்பினார். 

சித்தரின் இறும்பூதுகள் ஒரு போது பிராமணர் ஒருவர் சித்தரைக் காண்பதற்காக வந்தார். உணவு வேளையில் வழக்கம் போல் அன்பர்களை உட்கார வைத்து உணவு பரிமாறினார். அந்நாட் பொழுதில் எல்லோருக்கும் மீன் குழம்பு பரிமாறப்பட்டது. இதனால் பிராமணர் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு சித்தர் கவலைப் படவேண்டாம், "நீ, எதை நினைக்கிறாயோ அது வரும் என்று கூறி பிராமணரை அமர வைத்தார். பிராமணர் எனக்கு கத்தரிக்காய் குழம்பு போதும் என்றார். மீன் குழம்பு கரண்டியை எடுத்து இலையில் ஊற்றிய போது அது கத்தரிக்காய் குழம்பாக ஊற்றியது. இது கண்டோர் வியப்புற்றனர்.

ஒரு சமயம் அன்பர்கள் ஆண்டார் குப்பம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் போது சித்தரையும் வருமாறு அழைத்தனர். நீங்கள் முன்னே போங்கள் நான் பின்னே வருகின்றேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அங்கே முருகப் பெருமானுக்கு திருமுழுக்காட்டு நடத்தப்பட்ட போது சித்தருக்கே திருமுழுக்காட்டு நடப்பது போல் அவர்கள் காட்சி கண்டனர். அவரையே தம் நினைவில் கொண்டுள்ளதால் தமக்கு ஏற்படும் மனப்பிறழ்ச்சியே (பிரமை) இது என்று அவர்கள் நினைத்தனர். ஊர் திரும்பிய அவர்கள் நீங்கள் ஏன் வரவில்லை என அவரை வினாவினர். என் மேல் பால் ஊற்றினார்கள் அதை நீங்களும் பார்த்தீர்கள் ஆனால் நான் வரவில்லை என்று சொல்கிறீர்களே என்று கேட்டார். 

இவ்வகையில் பல தலங்களுக்கு செல்வதை அவர் வழமையாகக் கொண்டிருந்தார். திருப்பதிக்குப் போகப் போவதாக அவர் சொல்வார். அப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அவர் திருப்பதியில் இருந்ததைப் பலர் பார்த்துள்ளனர். திருப்பதியில் பேசிய பேச்சுகளைக் கூட அவர் நினைவுபடுத்துவார். நோய்களை அகற்ற பச்சிலை மூலிகைகளைத் தருவதும் அவரது பணியாக இருந்தது. சோறு கேட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சித்தர் செல்வது வழக்கம். ஒருபோது அவ்வாறு சோறு கேட்டு ஒரு வீட்டின் முன் நின்றார். அவ்வீட்டார் வறுமையில் தத்தளித்ததால் அவருக்கு சோறு போட முடியவில்லை. அதை அறிந்த அவர் உரூபாய் கட்டு ஒன்றை அங்கு போட்டு விட்டுச் சென்றார். பகைவர்களை அடியவராக்கிய நிகழ்வு சித்தரின் கொள்கைகளுக்கு மாறுபட்ட சிலர் அவருக்கு துன்பங்களையும் தொல்லைகளையும் ஏற்படுத்த முயன்றனர். 

ஆனாலும் அவர்கள் மீது சித்தர் சிறிதளவேனும் சினந்ததில்லை. ஒரு நிலையில் அவர்கள் சித்தரை கொலை செய்துவிடுவது என்று தீர்மானங் கொண்டதை அறிந்த சித்தர் மண்சட்டியை கையில் ஏந்திக் கொண்டு தன்னந்தனியராக காட்டின் ஊடே நடந்து சொல்லலானார். கொலை நோக்கர் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அப்போது விந்தையிலும் விந்தை ஒன்று நிகழ்ந்தது. சித்தர் தம் தலை சட்டியிலும், பிற உறுப்புகள் எட்டுத் திசையிலும் சிதறி இருக்குமாறு வைத்துவிட்டார். கொல்வதற்குப் பின் தொடர்ந்தோர் நமக்கும் முன்னமேயே நமது நண்பர்கள் வேலையைச் செவ்வையாக முடித்துவிட்டார்கள் என்று மகிழ்ந்தபடித் திரும்பினர். அவர்கள் திகைப்புறமாறு சித்தர் சட்டியை ஏந்தியபடி அவர் எதிரே வந்தார். இதனால் அவர்கள் அஞ்சி நடுக்குற்றனர். 

இந்த நிகழ்வை இவர்கள் தம் நண்பர்களிடம் தெரிவித்த போது தாமும் அவரைப் அவ்வண்ணம் பார்த்த்தாகச் சொல்லினர். அதே நேரம் வியாசர்பாடி, செங்குன்றம், மூலக்கடை, அயனாவரம், பொன்னேரி, எண்ணூர், மீஞ்சூர், மாதவரம், மணலி ஆகிய இடங்களிலும் சித்தரைக் கண்டதாகக் கூறினார்கள். அவரது வல்லமையையும் பெருமையையும் உணர்ந்து கொண்ட கொலை முயற்சியாளர்கள் நாளாவட்டத்தில் அவரின் அடியவராகிப் போயினர். சித்தரின் நவகண்ட யோக நிலையை பல்வேறு சமயங்களில் கண்டாரும் உண்டு.



சட்டி சித்தர் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி:

1961 பிலவ ஆண்டு புரட்டாசித் திங்கள் மகாளய அமாவாசை அன்று அஸ்த நட்சத்திம் கூடிய திங்கட் கிழமை நன்னாளில் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று எண்ணம் மேற்கொண்டவராக அடியவர்களிடம் அந்த நாளின் போது வந்து சேருமாறு பணித்தார். நீ மண்வெட்டி கொண்டு வா, நீ கூடை எடுத்து வா, திருமணத்திற்கு போக வேண்டும் பெரிய மாலை கொண்டு வா என்று சொன்னார். நான் சமாதி ஆகிவிட்டால் உடனே புதைத்து விடக் கூடாது. குழியிலேயே 41 நாள்கள் வைத்திருத்துவிட்டு 41 ஆம் நாள் நான் லிங்கமாக மாறிய பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்யலாம் என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எவருக்கும் அப்போது விளங்கவில்லை. 

குறிப்பிட்ட அந்நாளில் எல்லோரும் வந்தாகிவிட்டது. அவர்களை கவனித்த கண்ணப்ப சுவாமிகளாகிய சட்டி சித்தர் ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள் என்றதும் பாட்டு பாடச் சொல்கிறார் என நினைத்த அன்பர்கள் பாடினார்கள். சித்தர் சின்முத்திரையுடன் அமைதி ஆனார். அப்போது தான் அடியவர்களுக்கு உண்மை விளங்கிற்று. உடனே கண்ணப்ப சுவாமிகள் இருக்கும் இடத்தில் குழி தோண்டி அவரை ஆகம முறைப்படி அமர வைத்தார்கள். 41 நாள்கள் குழியை மூடாமல் பலகை கொண்டு மூடி அதன் மேல் விளக்கை ஏற்றினார்கள். 41 ஆம் நாள் பலகையை எடுத்துப் பார்த்த போது சித்தர் லிங்க வடிவாய் ஆகி இருப்பதைக் கண்டனர். 

சுற்றிலும் மேடை அமைத்து முடித்தனர். அதன் மேல் பின்னாளில் கண்ணப்ப சுவாமிகளின் திருவுருவச் சிலை கிழக்கு நோக்கி பதிக்கப்பட்டது. இவரது சமாதி கோவிலில் அமாவாசை பௌர்ணமி நாள்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. கோவில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி அளவும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகின்றது. இன்றும் மக்கள் தம் வேண்டுதல்கள் நிறைவேறவும் குறைகள் தீரவும் சட்டி சித்தர் எனும் கண்ணப் சுவாமிகளை வேண்டிக் கொண்டு அவரது சமாதியில் ஊதுவத்தி ஏற்றுகின்றனர்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in chennai chennai siddhargal , jeeva samadhi in chennai chennai siddhar , siddhar temple in chennai chennai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in chennai , siddhar temples in chennai chennai sitthargal , siddhars in chennai ,

No comments:

Post a Comment