Tourist Places Around the World.

Breaking

Saturday, 1 June 2019

கொடிய பஞ்சத்தைப் போக்கிய கோரக்கர் / Siddhar Korakkar

கொடிய பஞ்சத்தைப் போக்கிய கோரக்கர்

Siddhar Korakkar

பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம்; ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பதுதான்.

அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின.

ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர்; இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா! அனைவரும் அதிர்ந்தனர்.

இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார். பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, (கரிக்காதோப்பு) என்றழைக்கப்பட்டது.

இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார். “தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும்; நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும்’’ என்று கூறினார். உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத்த துவங்கினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்; தண்ணருளைப் பொழிந்தார். இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது. தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.

சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச்செய்பவர்களே சித்தர்கள்.

இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ‘ஆர்ஷ லிங்கம்’ என்பார்கள். இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே. கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களையெல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார். அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார். பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன. எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.

அன்னதானம்
அத்ரிமலை யாத்திரை சுமார் 6 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும். மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும்.

கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரிதபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம்.

பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும். முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்; ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்துவிடுங்கள்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்





No comments:

Post a Comment