Tourist Places Around the World.

Breaking

Wednesday, 19 June 2019

முருகானந்த ஸ்வாமிகள் / Murugananda Swamigal

முருகானந்த ஸ்வாமிகள்

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


'சின்னப்பயல்' என்றும், 'சின்னான்' என்றும் ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளால் உரிமையோடு அழைக்கப்பட்ட ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள் கி.பி.1886-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி புதன்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தார். குருவின் திருவருள் கிட்டியது ஒரு சுவையான வரலாறு. 

1930-ல் குமரலிங்கத்திற்கு ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் விஜயம் செய்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னமேயே, தன்னுடைய முந்தைய விஜயத்தின் போது, "சின்னப்பய"லின் பரிபக்குவம் அறிந்து அனுக்கிரம் செய்திருந்தார். தற்போது சின்னான் துறவற ஒழுக்கத்தை முற்றிலுமாகக் கடைப்பிடித்து வருகிறான் என்பதைக் கேட்டுணர்ந்து அவனை அழைத்து வருமாறு ஆக்ஞாபித்தார். 



குருவின் திருவருள் கூடிவரும் நாள் நெருங்கிய நிலையில், அவ்விருவரின் சந்திப்பும் சுவையானதாகவே அமைந்தது. தினந்தோறும் இச்சீடன் காலை 10-மணிக்கு குருநாதரைச் சந்திக்க வந்துவிடுவான். ஸ்வாமிகளின் முன்பாக, ரேழியில் அமர்ந்து அவரது திவ்ய ஸ்வரூப தரிசனத்தில் மூழ்கி ஆனந்தம் கொள்வான். மதியம் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மீண்டும் மாலை 4-மணிக்குத் திரும்பவந்து, "நாதன் முன் நந்தி போல" அமர்ந்திருப்பான். இடையில் குருநாதரின் ஆணையை ஏற்று, சித்தர்களின் பாடல்களை வாசிப்பான். சீடனின் வாசிப்பில் தன்னை மறந்து, குருநாதர், சித்தர்களின் அனுபவ வாக்கியங்களில் மூழ்கியிருப்பார். இரவு 12-மணிவரை கூட அங்கிருந்து விட்டு, குருநாதர் ஆகாரம் அருந்திய பின்னர்தான் வீட்டுக்குச் செல்வான் சின்னான். 

பல நாட்களில் குருவின் பிரசாத அமிழ்தம், விரைவில் ஞான உமதேசம் பெறவிருந்த சின்னானுக்கே முதலில் வழங்கப் படுவதுண்டு. அனைத்தும் குருநாதரின் அன்பும் ஆசியும்தான் குருநாதரிடம் மஹாவாக்ய உபதேசம் பெறுவது என்பது குருநாதரிடம் இடைவிடாது பல்லாண்டுகள் பக்தியுடன் பணிசெய்து வருபவர்க்கு மட்டுமே இந்த மஹாபாக்யம் கிட்டும். குருவின் பரிபூரண அன்பையும் அருளையும் பெற்ற சின்னானுக்கு அந்த அதிர்ஷ்டம் விரைவில் கிட்டியது. 'சின்னப்பயல்' மஹாஞானியாகும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த குருநாதர், "வருகின்ற பௌர்ணமி அன்று உனக்கு மஹாவாக்ய உபதேசம் நடைபெறும்" என்று அருளினார். அந்த நாள் ஆனி மாதம் குரு வாரம், மூல நட்சத்திரம் கூடிய நன்னாளாகும். தனது மழலைச் சொற்களின் காரணமாக 'குழந்தை' என்று வழங்கப்பெற்ற குருநாதர், "தத்வமஸி" என்று கூற, பதிலுக்கு, "அஹம் ப்ரஹ்மாஸ்மி" என்று , வடமொழியை அறியாத 'சின்னப்பயல்' கூற, சின்னான் மறைந்து, ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள் தோன்றினார். 

இது நடந்தது 1930-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் நாள்-பிரமோதூத வருடம் ஆனி மாதம் 26-ஆம் நாள் வியாழக்கிழமை. சிவமாய், பிரம்மமாய், தானறியத் தன்னந் தனியனாய், சர்வானந்த மயமாய், அத்வைத சமாதிநிலையில் சதா இருப்பது தான் ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளின் இயல்பு. அத்வைத அநுபவத்தில் திளைத்திருந்த ஸ்வாமிகளை மாத்வ மடாதிபதியாய் இருந்த மஹாப்பெரியவர் ஒருவர் தரிசித்து இன்புற்றுத்திளைத்த அதிசயமும் ஸ்ரீமுருகானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. குமரலிங்கம் அக்ரஹாரத்திற்கு விஜயம் செய்திருந்த அப் பெரியவரைச் சந்திக்க ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள் மிகவும் விருப்பப்பட்டார். 

ஆசார அநுஷ்டானங்களில் அணுவளவும் பிசகாத அந்த மடாதிபதியை, ஏகாலி குலத்தவனான 'சின்னப்பயல்' தரிசிக்க முடியுமா? இது அன்று குமரலிங்கம் அக்ரஹாரத்தில் இருந்த அன்றைய பெரியவர்களின் கேள்வி. குருவருள் துணை நின்றால் நடக்காதது தான் எது? அக்ரஹாரத்தினுள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலையில் நின்று மாத்வப் பெரியவர் பூஜை செய்துகொண்டிருந்த கனத்த திரையிடப்பட்ட பூஜாக்ருஹத்தை கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளின் கண்முன்னே அந்த அதிசயம் நிகழ்ந்தது.  

ஸ்ரீ குழந்தை குருநாதரின் திருவருளால், பூஜாக்ருஹத்தை மூடியிருந்த திரைகள் அற்றுக் கீழேவிழ, பூஜையில் இருந்த மாத்வ ஸ்வாமிகள், சாலையில் ஏக்கம் நிறைந்த விழிகளுடன் நின்று கொண்டிருந்த ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளைக் கண்ணுற்றார். நேரிலேயே தெய்வத்தைக் கண்டுவிட்ட ஆனந்தத்துடன், பூஜையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் தன்னை மறந்த நிலையில் சின்னான் ஸ்வாமியை நோக்கி ஓடிவந்து, ஆரத் தழுவினார். த்வைத பாவத்தைச் சற்றே மறந்து, அத்வைதாநுபவத்தில் மூழ்கித் திளைத்தார். முழுதும் இறுதியுமாய் முழுஞானி ஒருவரைத் தரிசிக்கும் பேறுபெற்றார் இம் மகான் . தான் செய்து வந்த பூஜையின் பலனாகத்தான் பிரம்மஞானியாகிய ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது என அகமகிழ்ந்தார் அப்பெரியவர். "பழம் முதிர்ந்து உதிரும் நிலை யை அடைந்துவிட்டது" எனத் தன் ஒரே மகளான மாரியாயியை அழைத்து ஒரு நாள் கூறினார் ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள். அவ்வண்ணமே, விக்ருதி வருடம் சித்திரை மாதம் 22-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை , பஞ்சமியும் மூலமும் நிறைந்த நாளில் மஹாசமாதி அடைந்தார் ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள். ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளின் அஸ்திக் கலசம் ஸ்தாபிக்கப்பட்டு ஜீவசமாதி உருவாக்கப் பட்டுள்ள ஸ்ரீ முருகானந்த ஆஸ்ரமம், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் கிராமத்தில் காளியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. 

ஸ்ரீ ஸ்வாமிகளின் மகள் வயிற்றுப் பேரனான திரு யோகானந்தம் அவர்களின் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் இந்த சமாதி ஆலயத்தில், ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் வத்தலகுண்டு ஆஸ்ரமத்தை நிர்வகித்து வருபவரும் ஸ்ரீ ஸ்வாமிகளின் பரம்பரையைச் சேர்ந்தவருமான திரு.கணேசன் ஸ்வாமிகள் அவர்களால், காசிமாநகரிலிருந்து கோண்டு வரப்பட்ட மஹாலிங்கமூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டு, அன்னாரால் நூதன கும்பாபிஷேகம் கடந்த 23.01.2012 திங்கட்கிழமை அன்று ஸ்வாமிகளின் ஜன்ம நட்சத்திரமும் அமாவாஸ்யையும் கூடிய அன்று சிறப்பாக நடைபெற்றது. அன்று துவங்கி, ஆலயத்தில் இரு கால பூஜைகளும், ப்ரதோஷ-அமாவாஸ்யை-பௌர்ணமி பூஜைகளும் தவறாது, திரு நவநீத கிருஷ்ணன் ஸ்வாமிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. 

2012-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும், சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் ஸ்வாமிகளின் குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது . அந்நாளில் மகேச்வர பூஜையும் (அன்னதானமும்) நடைபெறுகிறது. வழித்தடம்: திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் பேருந்தில் ஏறி குமாரலிங்கத்தில் இறங்க வேண்டும் . அங்கு முருகானந்த சாமியார் மடம் என்று கேட்டால் சொல்வார்கள் ..உடுமலைப் பேட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் இருக்கும். பழனிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடைப்பட்ட ஊர் தான் குமரலிங்கம். பழனியிலிருந்து குமரலிங்கத்திற்கு உள்ளூர் பேருந்து வசதி உள்ளது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in tiruppur , tiruppur siddhargal , jeeva samadhi in tiruppur , tiruppur siddhar , siddhar temple in tiruppur , tiruppur siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in tiruppur , siddhar temples in tiruppur , tiruppur sitthargal , siddhars in tiruppur 

No comments:

Post a Comment