ஸ்ரீலஸ்ரீ சித்தர் திருப்புகழ் சுவாமிகள்
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
கூகம் நின்று கூவுமடி அம்மானே…” என்ன பாட்டு இது?... யார் பாடி வைத்த அறம் இது? காக்கா வருவதே கஷ்டம் என்றால் கூகம் எனப்படும் மயில் எப்படி கோட்டை வரும்? இது சாபமாகச் சொல்லப்பட்ட பாடலாகும். சொல்லிச்சென்ற மகான் பெயர் திருப்புகழ் சுவாமி.
வளர்ச்சியில் விஸ்வரூபம் கண்டிட்ட கட்டபொம்முவின் வீழ்ச்சியில் வாமன ரூபம் காணவும் இந்த மகானின் சாபமே காரணமாகிப் போனதாம். அதேசமயம் விருதுநகர் ஆலமரமாய் தழைக்கவும் இவரே காரணம் என்றால் நம்புவது கடினமாக உள்ளதல்லவா? குணத்தில் கர்ணனாக, கோபத்தில் துர்வாசராக வாழ்ந்தவர்தான் நமது மகான். கி.பி. 1765-ல் பங்குனி மாத உத்திர நக்ஷத்திர நன்னாளில் அவதாரம் எடுத்திட்டவரே நமது மகான் திருப்புகழ் சுவாமிகள். இடம்: காட்டு நாயக்கன்பட்டி (தூத்துக்குடி ஜில்லா) உடன்பிறப்பாக நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் அமையப் பெற்றனர். பிறப்பினில் பெற்றோர் வைத்த திருப்பெயர் முத்தையா.
அது என்ன மாயமோ தெரியாது. பிறப்பு முதலே திருப்புகழையே சதா பாடிவந்ததால் ஊராரும், வீட்டாரும் இட்ட பெயர் திருப்புகழ். அந்த காலகட்டங்களில் ஹைடெக் சிட்டி ஏது? டைடல் பார்க் ஏது? எல்லாமே விவசாயம் சார்ந்த தொழில்கள்தானே? நமது மகானும் சளைக்காமல் விவசாயப்பணிகளை எவரும் கற்றுத்தராமலேயே மேற்கொண்டு வந்தார். இப்பணிகளைக்கூட இவர் ஏதோ களத்திற்குச் சென்று சேறு தீண்டி செய்தவரில்லை. அவரது அருளாலேயே அது தானாகவே நடைபெற்று முடிந்திருக்கும். இதை அறிந்த தாய் தந்தையர் முத்தையாவை சிரமப்படுத்த முனைந்ததில்லை. ஆனால், உடன்பிறப்புகளுக்கு இது பெரும் கோபத்தைக் கிளப்பியது.
“நாமெல்லாம் இளைத்தவர்களா? அல்லது சளைத்தவர்களா? அவன் மட்டும் சுகவாசியாகச் சுற்றி வர நாங்கள் மட்டும் நிலம் புகத்தான் வேண்டுமா?...” என்று நிஷ்டூரம் பேசினர். இது நாளடைவில் வஞ்சமாக மாறத் தொடங்கும்போதே… சுவாமிகள் வீடு விடுத்து - ஊர் விடுத்து வெளியேறி விட்டிருந்தார். அங்கிருந்து சுவாமிகள் சென்று சேர்ந்த இடம் கட்டபொம்மனின் வாசஸ்தலமான பாஞ்சாலங்குறிச்சி. வேறு ஏதும் புதுப்பணி செய்யாமல் தன்னை நாடி வருபவர்களுக்கு நல்வாக்கு சொல்வதும் அவர்கள் பிணி தீர்த்து வைப்பதுமாக தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்.
இது கடவுளின் வரமல்லவா! சுவாமிகளை இன்னும் சற்று உயர்த்திப் பிடிக்க நினைத்த மகேசன் வழக்கம்போல் தன் விளையாடலைத் அதை வீரபாண்டிய மன்னனின் மனைவியான வீரஜக்கம்மாளிடம் தொடங்கிவிட்டான். ஆம்! கடும் வயிற்றுவலியினை அவளுக்கு ஏற்படுத்தினான். வைத்தியம் – மருந்துகள் – வழிபாடுகள் எல்லாமே அலுத்துப் போயிற்று மன்னனுக்கு; இனியும் ஜக்கம்மா பழைய நிலைமைக்கு திரும்புவாளா என்று வருந்தித்தீர்த்தான். இந்நிலையில் திருப்புகழாரின் பெருமை மன்னனின் செவிகளை எட்டியது. பிறகு என்ன? அடுத்த ஒரு சில மணித்துளிகளில் அரண்மனைக்கு திருப்புகழ் சுவாமிகள் அழைத்து வரப்பட்டார். வந்தவரின் வேண்டுதலாகவே தனது மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான நோயைப்பற்றிச் சொல்லி கண்ணீர் உகுத்தான்.
“அடடே! மன்னா இதற்காகவா துன்பப்படுவாய்? ஒடிந்துப்போவாய்?… தோடுடைய செவியோனின் திருநீற்றுக்கு முன்பாக இவ்வலியெல்லாம் எம்மாத்திரமப்பா? என்று கேட்கவும் “சுவாமி! பார்க்காத வைத்தியமில்லை. கொடுக்காத கஷாயமில்லை. வேண்டாத தெய்வமில்லை. தாண்டாத ஆலயமில்லை… ஆனால் எல்லாம் வீணாயிற்று மகானே...” - மன்னன் நிலம் பார்த்து புலம்பினான். “பகை என்றால் படம் எடுத்து பஞ்சமுக நாகமாக சீறும் நீயா இதற்கு பதற்றப்படுவாய்? சற்று பொறு! வலி தீர்த்து வழி தருவான் என் திருப்புகழ் அப்பன்”… என்று கூறியபடியே தன் திருக்கரத்தில் திருநீற்றினை அள்ளி எடுத்து ஜக்கம்மாள் நெற்றி பூசியபடியே சற்று அவளது வாயிலும் இட்டார். “கண் மூடி அப்பனை – அவன் குமரனை நினைவாய் தாயே”…என்றார்.
அவளும் அவ்வாறே செய்ய … நொடித்துளியில் அவளது வயிறுவலி முற்றிலுமாக விடுபட்ட உணர்வைப் பெற்றார். நடந்தாள்… நடந்தாள்… குதித்தாள்… உருண்டாள்… புரண்டாள்… ஊஹூம்… கிஞ்சித்தும் வலி தெரியவில்லை. சுவாமி!... சுவாமி!... என்று கொண்டாடித் தீர்த்தார். கண்கள் தாமரை குளமாய் சுரந்து தள்ளின. பார்த்தான் மன்னன்! மகானின் பாதம் பணிந்ததுடன் தன் உளமார்ந்த பரிசாக விலைமதிப்பற்ற இரண்டு வைரத்தோடுகளை அவரது பாதத்தில் வைத்து வணங்கினான். வந்த பணி தீர்ந்த நோக்கில் வாயில் நோக்கி நடந்த மகான் அடுத்தபடியாக செய்துமுடித்த செயல்தான், கட்டுரையின் முதலில் படித்த பாடல் வரிகள். தன் கடன் பணி செய்து கிடப்பதே… என்பது போல் தன் வழி சென்றிட்ட மகானின் முன்னே எதிர்பட்ட குடும்பம் ஒரு நாவிதனுடையது. வறுமை… வறுமை… வறுமை. இது மட்டுமே இந்த நாவிதனை சுற்றி பிணைந்திருக்க வேண்டும். இன்றோ நாளையோ என்றிருந்தவனின் வறுமை போக்க நினைத்த மகான் மன்னன் தனக்களித்த விலைமிக்க வைரத்தோடுகளை நாவிதனுக்கு தாரை வார்த்து விலகினார்.
ஒற்றர்கள் நிறைந்த குறிச்சியில் மகானின் செயல்பாடு அடுத்த அரைமணித்துளிகளில் மன்னனது செவிக்கு எட்டியது. மதிப்புடன் நான் கொடுத்திட்ட அப்பேர்ப்பட்ட பரிசை சாதாரண ஒரு நாவிதனுக்கு தானம் செய்கிறார் என்றால் அந்த சுவாமிகளுக்கு என்ன ஒரு இறுமாப்பு இருக்க வேண்டும்…? என்று நினைத்தவன் சுவாமிகளை சபைக்கு வரவழைத்ததுடன் ‘இனியொருமுறை இங்கு வரவும் கூடாது’ என்று எச்சரித்தும் பேசிவைக்க, மகானுக்கு மூன்றாம் கண் திறந்தது… அப்போதே சாபம் விட்டார்! ‘காகம் வந்து அஞ்சும் உன் கோட்டைக்கு மயில் வந்து நாசம் செய்யுமடா…’ என்று சொல்லி அவ்வூர் அகன்று விருதுநகருக்கு தெற்கே உள்ள ‘கல்போது’ என்ற கிராமத்திற்குச் சென்றுவிட்டார்.
அடுத்து விவசாயம் செய்யவும் ஆரம்பித்து கூடவே ஒரு செம்மறி ஆட்டையும் வளர்க்கத் தொடங்கினார். இந்த ஆடு வளர்ப்பு பலரது கண்ணையும் உறுத்தி இருக்க வேண்டுமோ என்னவோ?... ஒரு நாள் மகான் இல்லம் விட்டு வேளியே சென்றிருந்த வேளையில் செம்மறி ஆட்டை களவாடிச் சென்றதுடன் அதைக் கொன்று கறி விருந்தும் செய்து வைத்தனர். கணப்பொழுதில் விஷயம் உணர்ந்த சுவாமிகள் கடும் கோபத்திற்கு ஆளானார். அவரின் உதடுகள் துடித்தன. ஏதோ முணுமுணுத்தபடியே இல்லம் வந்து சேர்ந்தார்.
இதனிடையே கறிவிருந்து நடந்திட்ட இடத்தில் பரிமாறப்பட்ட இலைகளில் உள்ள ஆட்டிறைச்சியை எடுத்து உண்ணத் தொடங்கிய பலரும் தலைதெறிக்க ஓடினர். காரணம்: கடுமையான கசப்பினை அந்த விருந்து ஏற்படுத்தியது. எட்டிக்காயைப் போல் எண்ணூறு மடங்கு கசந்து தீர்த்தது. ஆக, மொத்த சமையலும் பாழாகிப் போயிருந்த்து. பிழை உணர்ந்த அனைவருமே ஓடோடிச் சென்று அவர் பாதம் வீழ்ந்து கண்ணீர் உகுத்தனர். அதன்பிறகு அந்த கிராமத்தையும் வெறுத்து ஒதுக்கி பாவளி என்ற கிராமம் சேர்ந்தார். ஆவலப்ப நாயக்கர் என்ற ஜமீனின் ஆளுகைக்கு உட்பட்டது பாவளி. மனம் ஒன்றிப்போய் இங்கு தங்கியவர் பழையபடியே மந்திரித்தல், தன்னை நாடி வந்தவர்களுக்கு அருளாசி வழங்குதல் என்று… தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுவிட்டார்.
பிறரால் களவாடப்பட்ட ஆட்டினை நினைத்தவர் மீண்டும் ஒரு ஆட்டினை வளர்க்கத் தொடங்கினார். அதற்கு ‘செல்வம்’ என்றும் பெயரிட்டார். செல்வம் செல்லமாக வளர்ந்து வந்தது. சுவாமிகளைவிட்டு எங்கும் நகராது. அவர் இருக்குமிடமே அதற்கு வாசஸ்தலமாயிற்று. ஆனால், விதி இங்கு மீண்டும் வால் நுழைத்தது. ஒரு அமாவாசை நாளில் மலை ஏறி மகாலிங்க சுவாமிகளை தரிசித்து வர நினைத்து, தனது ‘செல்வத்தினை’ (ஆடு) ஜமீனிடம் ஒப்படைத்தவர், ‘மலை இறங்கி வந்த பிறகு இதனை எனது இல்லம் அழைத்துச் செல்கிறேன்’… என்று நம்பிக்கையுடன் ஒப்படைத்துச் சென்றுவிட்டார். கொழுக்… மொழுக்… என்றிருந்த ஆட்டினைக்கண்ட ஜமீனுக்கு நாவில் என்ன ஊறியதோ… அன்றைய விருந்துக்கு ‘செல்வம்’ பலிபோனது. இறைதரிசனம் முடிந்து திரும்பியவர் செல்வத்தை திரும்பித் தருமாறு ஜமீனிடம் கேட்க, அவரோ, “நீங்கள் சென்ற சற்று நிமிடங்களில் உங்களைத் தேடியபடி ஓடிப்போய்விட்டது” என்று பொய் பகர்ந்தார். நொடிப்பொழுதில் உண்மை நிலையுணர்ந்த சுவாமிகள் கோபம் தவிர்த்து ‘சரி போகட்டும், நான் இங்கு தங்கிக் கொள்கிறேன்’ என்றார்.
ஜமீனோ “அதெல்லாம் வாய்ப்பே இல்லை. பலரும் வந்துபோகும் இடம். உன்னைப் போன்ற சன்னியாசிகளுக்கு இடம் தரும் வழக்கமில்லை”… என்று உறுதிபடக்கூறி முடிக்கு முன்பே… மகான் தனது பாடலை சாபமாக விடுத்தார். “பட்டி பெருக பால்பானை பொங்க பாவாலி கெட்டு நொந்து அழிய போன குடி போக புதுகுடி ஏறாது ஆனகுடிகளுக்கெல்லாம் அனத்தமப்பா – ஆவலப்பா…” உடனடியாக ஊர் விடுத்தும் வெளியேறிவிட்டார். பிறகு என்ன ஆயிற்று என்று கேட்கவும் வேண்டுமோ? பாவளி ஜமீன் அந்தஸ்தை இழந்து அனாதையாக மாறியது. ஐஸ்வர்யம் கெட்டு பஞ்சம் பற்றியது. கோபம் கொண்ட சுவாமிகள் தற்போது சென்று சேர்ந்த இடம் கொக்குப்பட்டி என்ற கிராமம்.
அலுப்பு தீர வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டி அங்கிருந்த சிலரிடம் சுண்ணாம்பு கேட்டுள்ளார். அங்கிருப்பவர்களுக்கு சுவாமிகள் புதிய நபர் என்பதால் வினை புரியாமல் ‘நீர்த்து கொடப்பா சுண்ணாம்பை” என்று கிண்டல் செய்து பேசினர். ஏற்கெனவே செல்வத்தை இழந்த சினத்தில் இருந்த சுவாமிகள், “அப்படியே… கொக்குப்பட்டியும் நீர்த்துப் போகட்டுமே”… என்று சொல்லி அகன்றுவிட அடுத்த சில ஆண்டுகளில் அந்த கிராமமே இல்லாமல் போய்விட்டது. கோபம் இருக்குமே தவிர குணத்திலும் மகான் தங்கமானவர்தான் என்பதற்கு சாட்சியும் உண்டு. தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு அருளாசி வழங்கும் விதமாக ஒரு தேங்காயை உருட்டி விடுவார். அடுத்த விநாடி, அவர்களின் தேவை தீர்ந்துவிடுமாம்.
இறுதியாக விருதுநகரில்தான் தங்கியிருக்கிறார். ஒருமுறை தன் பாடலின் ஆசியாக ‘பால், பொங்கிப் பெருகும் நகராகும் விருது’ என்றாராம். இன்றும்கூட பலதுறைகளிலும் அந்நகர் பெருமை பெற்றுவருவதை காண்கிறோம். எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திக்காட்டிய சுவாமிகள் 1810ஆம் வருடம் ஆடி அமாவாசை தினத்தில் மகாசமாதிக்கு நாட்குறிப்பிட்டு விட்டார். சொன்ன தினத்திலேயே முக்தி பெற்றார். மகானை அந்நிலத்திலேயே நல்லடக்கம் செய்துவிட்டார்கள்.
காலம் கடந்தது. அங்கு மகான் சமாதி உள்ளது என்று தெரியாமலே ஒரு சிலர் விவசாயம் ஏர் கலப்பை கொண்டு உழுவும்போது கலப்பையின் முனையில் ரத்தம் கசிந்துள்ளது. பதறியவர்கள் பள்ளம் தோன்றிப்பார்த்தபோது அதிர்ந்து போனார்கள். எத்தனையோ வருடம் முன்பு சமாதியான மகானின் திருவுடல் அழுகாமல் இருக்க அப்போது போடப்பட்ட பூமாலைகளும் மணம் வீசிக் கொண்டிருந்திருக்கின்றன. அவ்வளவுதான் ஊர் கூடியது. திருவிழா மிஞ்சிய கூட்டம்… அந்த இடம் புனித தலமானது. மகானுக்கு முறைப்படி மடம் அமைத்தனர். விருதுநகர் இந்து நாடார்கள் சங்கம் அந்த மடத்து நிர்வாகப் பொறுப்பை பெருமையுடன் ஏற்றுக் கொண்டது.
கருவறையில் லிங்க உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்கின. திருப்புகழ் சுவாமிகளின் திருவுருவமும் வைக்கப்பட்டு தலைப்பாகையும் அணிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையன்று அன்னதானம் வழங்கப்பட்டு, பெரிய விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுவாமிகளின் மடத்திற்குச்சென்று மந்திரித்துக் கொண்டால் அனைத்து நோய்களும் நீங்கிவிடும். எண்ணெய் வாங்கி தேய்த்துக் கொண்டாலோ அனைத்து விதமான பூச்சிக் கடிகளும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
விருதுநகர் முனிசிபல் அலுவலகத்திற்கு பின்புறமாக இந்த திருப்புகழ் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
mahans in virudhunagar , virudhunagar siddhargal , jeeva samadhi in virudhunagar , virudhunagar siddhar , siddhar temple in virudhunagar , virudhunagar siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in virudhunagar , siddhar temples in virudhunagar , virudhunagar sitthargal , siddhars in virudhunagar ,
No comments:
Post a Comment