கருமாரப்பட்டிசாமி ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள்
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
பைந்தமிழ் நாட்டின்கண் உள்ள பஞ்ச பூதஸ்தலங்களில் நடுநாயாகமாக நின்று அக்னி சொரூபமாக காட்சியளித்து நினைத்தாலே முக்தியளிக்கும் உண்ணாமலை உடனாகிய திருவண்ணாமலையின் ஈசான்ய திக்கில் 20 கி.மீ வடகிழக்கே மங்கலத்துக்கு அருகில் (3 கி.மீ) ஏழை விவசாயிக்கள் பலர் வசிக்கும் ஒரு சிறு கிராமம் கருமாரப்பட்டி. இங்கு திருவாளர். சின்னத்தம்பி திருமதி. குள்ளம்மையார் என்னும் எளிய விவசாய குடும்ப தம்பதிகளுக்கு 17.8.1927 அன்று 3-வது குழந்தையாகப் பிறந்தவர் வெள்ளையன் என்கின்ற இன்றைய வெள்ளையானந்த சுவாமிகள் ஆவார்.
பெற்றோர்களின் தவப்பயனாய் அவதரித்த தவக்கொழுந்து கருமாரப்பட்டிசாமி என பக்தர்கள் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் 15 ஆண்டுகளாக உணவு உண்ணாமலும் தண்ணீர் பருகாமலும் ஒரே இடத்தில் அமர்ந்த 47 ஆண்டுகளாக கடும் தவம் செய்து சித்திகள் பெற்று தன்னை நாடி வருகின்றவர்கள் குறைகளை அறிந்து அருள் நோக்கும் அருள் வாக்கும் புரிந்து விபூதியளித்து அருள் செய்து வந்தார்.
இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் உள்ளத்தில் கிருஷ்ண பகவானும் சிவபெருமானும் நிரம்பி அருள் பொழிந்து கொண்டு இருந்தனர். இதன் விளைவாக 7,8 வயது சிறுபையனாக இருக்கும் போதே தம் ஊரில் உள்ள கிருஷ்ணன் பஜனை கோயிலுக்கு காலை தோறும் பூஜை செய்துவிட்டு அங்கிருந்து தென்மேற்கில் தெரியும் அருள்மிகு அருணாசலத்தை நோக்கி மனமுருக கும்பிடுவது தான் தமது அன்றாடக்கடமையாக செய்து வந்தார்.
சக வயது குழந்தைகளுடன் சடுகுடு, கில்லிதாண்டி, தொடை தட்டி முதலிய கிராம விளையாட்டுகளை மிக அற்புதமாக விளையாடி நல்ல இளைஞர்கள் கூட்டம் சேர்ந்து மாலையில் நடுத்தெரு விநாயகர் கோயிலுக்கு கூட்டி வந்து திருப்புகழ் பஜனைப்பாடல்கள் பாடுவதும், தமக்கு தெரிந்த இறைவன் திருவிளையாடல் சம்பந்தமான அற்புதக் கதைகளைச் சுவைபடச் சொல்லுவதுமாக வளர்ந்து வந்தார்.
குப்பகவுண்டன் என்பவர் இவருக்கு 15 வயது மூத்தவர். பூண்டி மகானிடம் பெரும் ஈடுபாடு உடையவர். வெள்ளையானந்தரை இந்த மகானிடம் கூட்டிப்போக எவ்வளவோ முயற்சிகள் செய்தார். தம் உள்ளம் முழுவதும் சிவா-விஷ்ணு நினைவாக இருந்த வெள்ளையானந்தருக்கு திருவண்ணாமலை – திருப்பதி வெங்கடாசலபதியைத் தவிர்த்து வேறு எந்த சாமிகள் மீதும் நாட்டம் ஏற்படவில்லை. தவறாது திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி வருவார். தினசரி உள்ள10ர் கிருஷ்ணன் கோவிலில் பூஜை செய்த கையோடு அருணாச்சல தரிசனம், மாலையில் பஜனை என்று வழக்கமாக கொண்டார். இது தவிர வேறு யாரைப் பார்க்கவும் சிந்திக்கவும் விருப்பமேற்படவில்லை.
வயது ஏறிக்கொண்டு வந்தது. முப்பது வயதாகியும் இறை நாட்டமிகுந்து இல்லற நாட்டம் சிறிதும் இல்லாமல் தம் விவசாய வேலைகள் உண்டு, தம் பூஜை, பஜனை உண்டு என்று வாழ்ந்துவந்தார். திண்ணைப் பள்ளியில் 2,3 ஆண்டுகள் பயின்றது தான் இவர் கல்வி.
வெள்ளையானந்தரின் தாய் மாமாவிற்கு 15 வயதில் அமிர்தம்மாள் என்று ஒரு பெண் இருந்தார். உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்று 30 வயதான இவருக்கு 1956-ம் ஆண்டு திருமணம் முடித்து வைத்தனர். இரு ஆண்டுகள் கழித்து ரகுநந்தன் பிறந்தார்.
ஒருநாள் காலையில் வயல் வெளியில் ஒரு மகான் வெள்ளையாந்தருக்கு காட்சி கொடுத்தார். 'நீதான் அந்த குப்பனுடைய குரு பூண்டி மகானா' என்று சாமி கேட்டார். 'ஆமாம், நீ என்னிடம் இன்றே வா' என்று சொல்லிவிட்டு பூண்டி மகான் மறைந்துவிட்டார். ஒரு நொடி கூட தாமதிக்காமல் வீட்டுக்கு வந்து தம் மனைவி அமிர்தாம்மாளையும் கூட்டிக் கொண்டு திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையார் உத்தரவு பெற்றுக் கொண்டு பூண்டி மகானை சந்திக்கச் சென்றார். பெரும் கூட்டம்! அந்தக் கூட்டத்திலும் பூண்டி மகான் வெள்ளையானந்தரைக் கூப்பிட்டு வெற்றிலை, பழம், தேங்காய், பூ, வெல்லம், ஆகியவற்றை அமிர்தம்மாள் மடியில் வைத்து இருவருக்கும் திருநீறு பூசி நீ என்னை விட ஒருபடி மேலாக வந்து நல்ல தீர்க்காயுசுடன் இருப்பாயடா! என்று கூறி அனுப்பினார்.
மனதிலுள்ள இறைதாகம் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. உள்ளம் முழுவதும் நிரம்பி வழிந்தது. பூண்டி மகானின் ஆசிர்வாதங்கள் எண்ணெய் நிரம்பிய விளக்கில் திரிபோட்டு தீபம் ஏற்றியது போல ஆகிவிட்டது. தனிமையில் இருந்து தியானம் செய்ய வேண்டுமென்று மனது பெரிதும் விரும்பியது. 1962-ல் தம் வீடு ஒரு சிறு குடிசை அதனால் நடுத்தெரு பிள்ளையார் கோவில் கொஞ்சநாள் உட்கார்ந்து தியானம் செய்து பார்த்தார், சூழ்நிலை சரியாக இல்லை.
அருகில் 3 கிமீ தூரத்திலுள்ள மங்கலத்தில் டீக்கடை அப்புகவுண்டர் மிகுந்த இறை பக்தி கொண்டவர். இவரிடம் அதிக அன்பு உடையவர். தம் கடைக்கு பின்னால் ஒரு அறை இருந்ததால் அங்கு சென்று தியானம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். தினசரி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தியானத்தில் உட்கார்ந்துவிடுவார். திரும்பும்போது ஒரு டீ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார். இவ்வாறு அப்புகவுண்டர் இடத்தில் சிலவருடங்கள் கழிந்தன. பிறகு அங்கும் சூழ்நிலை சரிபட்டு வரவில்லை.
இரண்டாவது மகன் தவராஜி 1969-ல் பிறந்தார். அணையாத தமது ஆன்மிக தாகத்துடன் தம் மனைவி அமிர்தம்மாவை அழைத்தார். நான் நிலையாக ஒரே இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்தபடி தியானத்தில் இருக்க விரும்கின்றேன் அநேகமாக என் ஆயுள் பரியந்தம் கூட இவ்வாறு இருந்துவிடலாம் என்று கருதுகின்றேன். என் உள்ளத்திலிருக்கும் சிவா விஷ்ணு தெய்வங்கள் உன்னைக் காப்பாற்றும் நீ பயப்படாதே என்று சொன்னார்.
ஒரு சிறிய சிமெண்டு மேடை போட்டு அதில் சாமியை உட்கார வைத்துவிட்டார் அம்மையார். பெரிய பையன் 10வயதில் 5-வது படித்துவந்தான். படிப்பை நிறுத்தி தம் விவசாயத்திற்கு துணையாக சுவாமிகளை பராமரித்து வந்தார். 1970 முதல் ஆரம்பித்த இந்த தீவிர தியானம் 25 ஆண்டுகள் தொடர்ந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரத்தை குறைத்துக் கொண்டு 1972 வாக்கில் சுத்தமாக தண்ணீர் பருகுவதைக் கூட நிறுத்திவிட்டார். எப்போதும் நிர்விகல்ப சமாதியிலிருந்துதபடியே, சித்தர்கள் பலருடன் உரையாடுவது எல்லாம் மற்றவர்களுக்கு ஒரு பித்தன் உளறுவதுபோலத் தென்பட்டது.
1979-ல் ஒரு வெள்ளிக்கிழமை பூண்டி மகான் சுவாமிகள் சமாதியடைந்தார். நம் வெள்ளையானந்த சுவாமிகள் மனைவி அமிர்தம்மாளை அழைத்து மறுநாள் சனிக்கிழமை முதல் தம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாகவும் ஆகவே கம்பு சோற்று நீராகாரத்தில் உப்பு போட்டு கொண்டு வரும்படியும் கூறினார்.
அது முதல் ஏதோ சிறிது ஆகாரம் சாப்பிட ஆரம்பித்தார். இருந்தாலும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து விபூதி கொடுத்து ஆசிர்வதிப்பதுமாக இருந்தார். ஏழைகள், பணக்காரர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் என்று பலரும் இவரது அருளாசிகளைப் பெற்று தமது கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆறுதல்களை பெற நாடிவந்தார்கள். சித்தத்தை சிவன்பால் வைத்து நிர்விகல்ப சமாதியில் இருந்து வந்த சுவாமிகளை உபாதைகள் எதுவும் பாதிக்கவில்லை.
இவர் தலையின் ஜடா முடி இரு பிரிவுகளாக 12 அடி நீளம், தாடி 5 அடி நீளம் இருந்தது. மூன்றையும் மும்மூர்த்திகளாக வடம் போல இணைத்துக் கட்டி சுருட்டி ஒரு மர ஸ்டூல் மீது வைத்திருந்தார்கள். பக்தர்கள் இதைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று திருநீறு வாங்கிச் சொன்றனர். கொண்டு வரும் எலுமிச்சை பழங்களை அவரவர்களுக்கு கொடுத்து சாறு பிழிந்து சாப்பிட்டு வரவும், வீட்டு முகப்பில் கட்டி விடச்சொல்லி அவரவர் கர்மவினைகளை போக்கவும் உதவினார். பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம், கற்புரம், ஊதுவத்தி, புஷ்பங்களை வெளியில் தாம் பிரதிஷ்டை செய்துள்ள வேலுக்கு வைத்து கும்பிட்டுவிட்டு வரச் சொல்லி ஒவ்வொரு பக்தரிடமும் சலிக்காமல் குறைகளை கேட்டு தம் அருட்பார்வையை அவர்கள் மீது படரவிட்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
ஒரு ஏழை விவசாயி ஒருவன் தன்னிடம் நிலம் இருந்தும் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். சுவாமியைப் பார்க்க வேண்டுமென்று நீண்டநாள் ஆவல் அவருக்கிருந்தது. ஒருநாள் சுவாமியிடம் சென்று சுவாமி நான் வறுமையில் இருக்கிறேன். ஒரு கிணறு வெட்டி விவசாயம் செய்யலாமா என்று முறையிட்டார். சுவாமிகள், 'டேய் உன் நிலத்திலேயே உள்ள கிணற்றை தூர் வாரி, சரிபடுத்து. அதிலேயே நிறைய தண்ணீர் வரும்' என்று அருள்பாலித்தார். தற்போது அந்த விவசாயி நன்றாக விவசாயம் செய்து வறுமையிலிருந்து மீண்டு மகிழ்வுடன் குடும்பம் நடத்துகிறார்.
மற்றொரு சமயம் ஒரு பக்தர் தன்னிடமுள்ள பசுவின் பாலில் சுவாமிக்கு பாயாசம் செய்து எடுத்து வந்தார். சுவாமியின் மனைவியார். சுவாமியிடம் 'ஐயா, சாப்பிட வாருங்கள்' என்று அழைத்தார். அதற்கு சுவாமிகள் ' எனக்காக ஒரு பக்தன் பாயாசம் செய்து வந்து கொண்டிருக்கிறான். அவன் வந்தவுடன் அவன் பாயாசத்தை நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று அவன் வருவதற்கு முன்னே குறிப்பிட்டுச் சொன்னார். பிறகு இச்செயல் நடந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இதுபோல் பல அதிசய நிகழ்வுகளை சுவாமிகள் தினந்தோறும் நடத்திக் கொண்டு வந்தார்.
இவ்வாறாக சுவாமிகள் ஐப்பசி மாதம் பூசநட்சத்திரத்தில் (5.11.2012) அன்று ஜீவசமாதி அடைந்து லிங்க வடிவமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். திருவண்ணாமலை – அவலூர்பேட்டை இடையில் உள்ள மங்கலம் கிராமத்தில் ஆட்டோவில் கருமாரப்பட்டியில் உள்ள சுவாமிகளின் சமாதியை அடையலாம்.
அண்மை காலத்து சேஷாத்ரி சுவாமிகள், பூண்டி மகான், திருவலம் மௌனகுரு சுவாமிகள், பழநிமகரிஷி ஈஸ்வராய குருதேவர், புஞ்சைப்புளியம்பட்டி வேணுகோபால் சுவாமிகள் ஆகியோர் வரிசையில் வைத்து போற்றத் தக்க இவர் லிங்க வடிவாக காட்சியளித்து கொண்டு நாடி வரும் அனைவருக்கும் குறைகளை போக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
கர்மவினைகள் நீங்க கருமாhரப்பட்டி சுவாமிகள் சமாதி சென்று தரிசனம் செய்து ஆன்ம உயர்வு பெறலாம்.
கருமாரப்பட்டி ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் திருவடி சரணம்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in thiruvannamalai , thiruvannamalai siddhargal , jeeva samadhi in thiruvannamalai , thiruvannamalai siddhar , siddhar temple in thiruvannamalai , thiruvannamalai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in thiruvannamalai , siddhar temples in thiruvannamalai , thiruvannamalai sitthargal , siddhars in thiruvannamalai ,
Good to know about siddhar vellaianandha swamigal. Many histories of Great saints remain untold. I remember my parent visited him in 1980s and received his blessings
ReplyDelete