ஆறுமுகநயினார் சன்னிதியை திறந்த அமாவாசை சித்தர்
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
தில்லைத் தாண்டவராயர் நெல்லைக்கு அழைத்து வந்த சித்தரால் தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை. குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் நெல்லை நகரத்தில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் அரண் மனைக் கட்டி வசித்து வந்தவர்.
தற்போதும் அவர் வழி வந்த வாரிசுகள் அங்கு வசித்து வருகிறார்கள். தில்லைத் தாண்டவராயர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக விளங்கினார். இவர் தெய்வங்களை வித்தியாசமாக வணங்குவார். தல யாத்திரை செல்லும் போது ஆங்காங்கே தெய்வங்களை வணங்க வேண்டுமே.. அதற்காக வித்தியாசமானக் கைத்தடிகளை உருவாக்கி எடுத்துச்செல்வார். அந்தக் கைத்தடியில் தலைப்பகுதியைத் திறந்தால் அங்கே விநாயகர், லட்சுமி உள்பட பல தெய்வங்கள் காட்சியளிப்பார்கள். இவர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடி தெய்வங்களை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தார். அடிக்கடி காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு முறை காசி சென்றபோதுதான் அமாவாசை சித்தரைச் சந்தித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிறகு துறவு வாழ்க்கைக்கு வந்தவர். தன் கால் போனப் போக்கில் நடந்து பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறுதியில் காசியை அடைந்திருந்தார். இவரது ஆன்மிக வாழ்க்கைத் தில்லைத் தாண்டவராயரை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே அவரைக் காசியில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்தார். அமாவாசை சித்தர் நெல்லை டவுனில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டுக் கிடப்பாராம். இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம்.
இது ஒரு வகையானத் தியானம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இவருடைய செய்கை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது. ஆனாலும் அமாவாசை சித்தரை எல்லோரும் மதித்து வந்துள்ளனர். இவர் பகல் வேளையில் கடை வெளியில் சுற்றி வருவார். வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவார். அமாவாசையில் மட்டும் தான் இவர் குளிப்பார். மற்ற நாட்களில் சூரியக் குளியலும், நிலாக் குளியலும் தான். எனவே தான் இவருக்கு ‘அமாவாசை சாமியார்’ எனப் பெயர். அமாவாசை சாமியாரும், தில்லைத் தாண்டவராயரும் ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றனர். முழுவதும் கண்ட ராம பாண்டியன் பிரதிஷ்டை செய்த நெல்லையப்பரை மனமுருக வேண்டி நின்றனர். பின் பிரகாரம் சுற்றி வந்தனர். அப்போது பிரகாரத்தில் உள்ள ஆறுமுகநயினார் கோவில் பூட்டிக் கிடந்தது. இதைக் கண்டு மனம் நொந்து போனார்கள்.
ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் வீட்டுக்கு வந்த பின்பும் உணவு உண்ண முடியாமல் தவித்தார். எப்போதும் ஆறுமுகநயினார் கோவில் நினைவாகவே இருந்தார். தில்லைத் தாண்டவராயர் மனமுடைந்து இருப்பதை அறிந்த அமாவாசை சாமியார், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தார். திருநெல்வேலியில் தாமிரபரணி கரையில் உள்ள கருப்பந்துறையில் ஒரு நந்தவனம் இருந்தது. கருப்பந்துறைக்கு பெயர் காரணமே ஆன்மிகம் சார்ந்தது தான். சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் குவளை. இந்தக் குவளைப் பூக்கள் கருநீல நிறமாகக் காட்சித் தரும். எனவே கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது. அதுவே காலப்போகில் ‘கருப்பந்துறை’யாக மாறிவிட்டது.
கருப்பந்துறை நந்தவனத்துக்கு அடிக்கடி அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம். காரணம் அங்குள்ள ஆசிரம நந்த வனத்தில் போகர் மாயாசித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் அமாவாசை சித்தரிடம் ஆன்மிகக் கருத்துகளைப் பேசி மகிழ்வார்கள். இவர்கள் இருவர் இருக்கும் இடத்தில்தான், அமாவாசை சித்தரும் வந்து அமர்ந்திருப்பார். எனவே தான் ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்கக் குளத்தூர் ஜமீன்தார் நினைத்தவுடன், இவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கருப்பந்துறை நந்தவனத்துக்கு ஓடோடி வந்தார் அமாவாசை சித்தர்.
ஆறுமுகநயினார் சக்தி மிக்கவர். அவர் சிலையே அபூர்வமானது. ஆறுமுகம் கொண்ட அவர் முகத்தை எட்டு திசையில் எங்கிருந்து பார்த்தாலும் ஆறு முகத்தையும் தரிசிக்கலாம். அப்படியொரு வடிவமைப்பு, வேறு எந்தக் கோவிலிலும் யாரும் கண்டதில்லை. அண்டிவரும் பக்தர் களைக் காப்பாற்ற வல்லவர். அப்படிப்பட்ட சுவாமி சன்னிதி, சிலரது சதியால் பூட்டப்பட்டு விட்டது. இதுபற்றிதான் மற்ற இரு சித்தர்களுடனும், அமாவாசை சித்தர் ஆலோசித்தார். ‘இதற்காக எவ்வளவு பெரிய யாகம் வேண்டுமானாலும் செய்யுங்கள். இதற்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என குளத்தூர் ஜமீன்தார் உறுதி அளித்தார். சித்தர் பெருமக்கள் கூடினர்.
போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர். இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எந்த வித தீயச் சக்தியும் ஒழிந்து போகும். குறிப்பிட்ட நாளில் ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர். தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. என்ன ஆச்சரியம். நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டது. கோவில் சன்னிதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாமே மிகச்சிறப்பாக நடந்தது.
பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இந்நாள் வரை இங்கு வந்து நன்மை அடைந்தப் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். காலங்கள் கடந்தது. தினமும் ஆறுமுகநயினார் சன்னிதியே கதி என கிடந்தார் அமாவாசை சித்தர். அவர் கூறும் வாக்குகள் பலித்தன. எனவே இவரைத் தேடிப் பக்தர்கள் அதிகம் கூட ஆரம்பித்தனர். இது சிலருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அமாவாசை சித்தரை வெளியேற்ற முயற்சி செய்தனர். ‘கோவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இனி நான் எங்கிருந்தால் என்ன?' என்று கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார் அமாவாசை சித்தர். சித்தன் போக்கே சிவன்போக்கு என்று கடைக் கடையாக அலைந்தார். அவர்கள் தரும் உணவை உண்டார். சில நேரம் ஜமீன்தார் வீட்டுக்கு வருவார்.
அங்கு அவருக்கு உணவு படைக்கப்படும். ஜமீன்தாரோடு யாத்திரைச் செல்வார். கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து நாள் கணக்கில் தவமேற்றுவார். ஒருநாள், நந்தவன ஆசிரமத்துக்கு சென்று போகர் மாயா சித்தரிடம், ‘எனக்கு இந்த இடத்தைத் தாருங்கள்' என ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டு காண்பித்தார் அமாவாசை சித்தர். முக்காலும் உணர்ந்தப் போகர் மாயா சித்தரும் ‘சரி’ என்று கூறி விட்டார். போகர் மாயா சித்தர், மகேந்திரகிரி மலைக்கு சென்று அடர்ந்தக் காட்டுக்குள் தியானம் செய்துக் கொண்டிருந்தார்.
அவர் மனதுக்குள் செய்தி ஒன்று கிடைத்தது. உடனே அவர் அவசரம் அவசரமாக மலையை விட்டுக் கிளம்பினார். வல்லநாட்டில் தியானம் மேற்கொண்டிருந்த வல்லநாட்டுச் சித்தருக்கும் அந்தச் செய்தி கிடைத்தது. அவரும் நெல்லை நோக்கிக் கிளம்பினார். அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப்போகிறார் என்பதே அவர்களின் மனதில் தோன்றியச் செய்தி. அவர்களின் மனம் சொன்னது போலவே அமாவாசை சித்தர் சமாதி அடைந்தார். அமாவாசை சித்தர் கேட்டுக்கொண்டபடி, போகர் மாயா சித்தர் தன்னிடம் அவர் காட்டிய இடத்தில் சமாதி அமைத்தார்.
அவரது சமாதி மீது ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரத்தை, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளும், ஸ்ரீபோகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர். சித்தர் ஒருவர் அடங்கி இருக்கும் இடமே சிறப்பு. அதிலும் அவருக்கு இரண்டு சித்தர்கள் சமாதி வைத்திருக்கிறார்கள் என்பது அதை விடச் சிறப்பு. சமாதி மேலே ஆறுமுகநயினாரின் ஆலயத்தைத் திறக்க உதவிய சக்கரமும் பொருத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. அதனால் தான் பக்தர்கள் இங்கு வந்து வணங்குவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.
அமைவிடம்: நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம். இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in tirunelveli , tirunelveli siddhargal , jeeva samadhi in tirunelveli , tirunelveli siddhar , siddhar temple in tirunelveli , tirunelveli siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in tirunelveli , siddhar temples in tirunelveli , tirunelveli sitthargal , siddhars in tirunelveli ,
No comments:
Post a Comment