Tourist Places Around the World.

Breaking

Sunday 19 April 2020

திருடர்களை காட்டிக் கொடுத்த பெரியசாமி சித்தர் / Periasamy Siddhar

திருடர்களை காட்டிக்கொடுத்த சித்தர் ...
திருடர்களை காட்டிக் கொடுத்த சித்தர்

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

பெரியசாமி சித்தர் இரவு நேரத்தில் யாசகம் கேட்கச் சென்றபோது, சிலர் அவரை தீவெட்டி கொள்ளையர்கள் என்று நினைத்தனர். இதனால் அவரை ஓரிடத்தில் அசையவிடாமல் நிற்கவைத்து, அவரைச் சுற்றி காய்ந்த ஓலை கட்டுகளைப் போட்டு தீவைத்தனர்.  தீ முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆனால் தீக்குள் இருந்த பெரியசாமி சித்தருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏற்றிய தீபம் அவரது தலையில் அப்படியே சுடர் விட்டு எரிந்துகொண்டு இருந்தது. தீக்குள் இருந்ததற்கான சுவடு கூட அவரது உடல் மேல் தென்படவில்லை.

எப்படி ஆலயத்தை விட்டு புறப்பட்டாரோ அதேபோன்ற தூய்மையான உடலோடு இருந்தார். மக்கள் அனைவரும் திகைத்தனர்.  இவர் கொள்ளையன் இல்லை. இவர் மிகப்பெரிய சித்தர் என்பதை உணர்ந்து அவரை வணங்கினர். பெரியசாமி சித்தரின் ஆலயம் எழுப்பும் பணிக்கு, பொன்னையும், பொருளையும் வழங்கினர்.  சித்தர்கள் பலரும் இருக்கும் காலத்தில் செய்யும் நற்பலன்களை, பிற்காலத்திலும் செய்ய வேண்டும் என்பதற்காக, பூமிக்குள் சமாதி அடைவது வழக்கமான ஒன்று. அதே போல் பெரியசாமி சித்தரும் ஜீவ சமாதி அடையும் காலம் வந்தது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

பெரியசாமி சித்தர் ஊர் மக்களை அழைத்தார். ‘நான் சமாதி அடையப்போகிறேன். நான் அணிந்திருக்கும் தங்கப் பூணுலையும், தங்க அரைஞான்கொடியையும் கழற்றாமல் அப்படியே என்னைச் சமாதி வைத்து விடுங்கள்’ என்றார்.  அனைவருக்கும் ஆச்சரியம். ‘எதனால் சுவாமிகள் இப்படி சொல்கிறார். சாமிக்கோ வாரிசு கிடையாது. தனக்கு காணிக்கையாக வந்த பணத்தை எல்லாம், கோவிலுக்கு நிலபுலன்களை வாங்கி வைத்து விட்டார். தனக்காக எதையும் சேர்த்து வைக்காதவர், புதைக்கும்போது மட்டும் எதற்காக தங்கப் பூணுலையும், அரை ஞான்கொடியையும் போட்டு புதைக்கச் சொல்கிறார்’ என்று நினைத்தனர்.  ஆனால் அவர் சொன்னதற்கு பின்னால், பெரிய வரலாறே இருக்கிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

பெரியசாமி சித்தர் கூறியபடியே, அவரைச் சமாதி நிலையில் வைத்து அதன் மேலே கல் படுகை அமைத்து விட்டனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேர் கவனித்துக் கொண்டே இருந்தனர். அவர் உடலில் உள்ள தங்கத்தை எப்படியாவது களவாடி விட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஒரு நாள் இரவு சமாதிக்கு வந்தனர். கல் படுக்கையை அகற்றினர். பின் அவர் மீதிருந்த பூணுலை அகற்றி விட்டு, அருணாக் கொடியை இழுத்தனர்; வரமறுத்தது. தொடர்ந்து சுவாமி வயிற்றில் காலை வைத்து அழுத்தி மிதித்துக்கொண்டு கொடியை இழுத்தனர்.  அப்போது ‘யா...வ்....யா..வ்..’ என ஏப்பமிட்டார் பெரியசாமி சித்தர்.

திருட வந்த நாலுபேரும் அப்படியே அமர்ந்து விட்டனர். அவர்களின் கண்கள் இருண்டது. எங்கும் புகை மூட்டம். சமாதியையேச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் மனம் துடித்தாலும், அவர்களால் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.  இருள் விலகி, பொழுது புலர்ந்தது. பருத்தி காட்டுக்கு செல்ல மக்கள் அந்த வழியாக வந்தப் போது, சமாதியைச் சுற்றி 4 பேர் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு வந்தனர். அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, அவர்கள் 4 பேரும் கண் பார்வையை இழந்திருந்தனர்.  அப்போது சுவாமி சமாதியில் இருந்து எழுந்தார்.

‘எனக்குப் பிறகு என்னைப் போலவே தலையில் தீபம் ஏற்றி வர, இவர்கள் சம்மதித்தால் அவர்களுக்கு கண் பார்வையைத் தருகிறேன்’ என்றார்.  அதற்கு அந்த 4 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு கண் பார்வை வந்தது. இப்போதும் அவர்களது குடும்ப வாரிசுகளே தலையில் தீபத்தை ஏற்றி வருகிறார்கள்.  அப்போது தான் மக்களுக்கு புரிந்தது. ஆகா.. சித்தர் தங்கப் பூணுலையும் தங்கக் கொடியையும் ஏன் போடச் சொன்னார். தன் கடமையை பிற்காலத்தில் செய்வதற்கு மக்கள் வேண்டும் என்று தான் இப்படிச் செய்தார் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். இதையடுத்து சித்தர் மீண்டும் சமாதி நிலையை அடைந்தார்.

தென் திருவண்ணாமலை ஆலயத்தை ஒட்டியே, பெரியசாமி சித்தரின் சமாதியும் இருக்கிறது. மிகுந்த அருளாட்சி நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது. 60 குடும்பங்கள் இருந்த இந்த ஊரில் தற்போது, 600 குடும்பங்கள் பெருகி வாழ்கிறார்கள். மேலும் இங்குள்ள அனைவரும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்குகிறார்கள். ஊர் மக்கள் ஒற்றுமையாகக் கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். திருக்கார்த்திகைக்கு திருவண்ணாமலையில் சிறப்பு தீபம் ஏற்றுவது போலவே, இங்கேயும் ஏற்றுகிறார்கள். கொடி நடுவது, திருவிழா நடைபெறுவது, மலை மீது தீபம் ஏற்றுவது எல்லாமே திருவண்ணாமலையை போலத்தான்.

கார்த்திகை தீபம் தோறும் 2 கிலோமீட்டர் தொலைவில், 3000 அடி உயரத்தில் மிக கடினமானப் பாதையில் மக்கள் கூட்டமாக ஏறுவார்கள். சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை செய்ய, பூஜை பொருட்கள், எண்ணெய் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள். முள் என்றும் கல் என்றும் பாராமல் நடந்து செல்வார்கள். முதலில் சப்தக்கன்னிகளுக்கு பல வித அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்ட பின், 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள்.  அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபம் பல கிலோ மீட்டர் அப்பால் எங்கிருந்து பார்த்தாலும் சுடர் விட்டு பிரகாசிக்கும். பெரியசாமி சித்தர் காலத்தில் இருந்தே தீபம் ஏற்ற மலை ஏறி சென்றால், தன் வாழ்வில் கிடைக்காதப் பேரின்பம் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது தற்போதும் தொடர்கிறது.

இந்த கார்த்திகை திருநாளின் போது, தலையில் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறுகிறது. தற்போது தலையில் தீபம் சுமப்பவரின் பெயரும் பெரியசாமியே. இவர் திருக்கார்த்திகை நாளில் தலையில் எரியும் தீபத்துடன் ஒவ்வொரு ெதருவாக வந்து அருளாசி வழங்குகிறார். விடிய விடியத் தீபத்துடனே அவர் ஊரைச் சுற்றி வருவார்.  விளக்கில் ஊற்றப்பட்ட எண்ணெய் முகம், உடல் என எங்கும் வடிந்து நிற்க, தீயால் அவருக்கு தீங்கு நேராமல் இருப்பது இந்தக் கலியுகத்தில் பெரியசாமி சித்தர் அருளே என பக்தர்கள் நம்புகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர் கோவிலுக்குள் வரும் வேளையில், விபூதி வாங்கினால் மக்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கிறது.  மதியம் 1 மணி வரை அருள்வாக்கு கூறியபடியே பெரியசாமி சித்தர் பீடத்துக்குள் செல்வார். பீடத்தினை சுற்றி வலம் வருவார்.

அதன் பின் சித்தரின் ஜீவசமாதி முன் மண்டியிட்டு தனது தலையில் உள்ள சுடரை எடுத்து வைப்பார். தொடர்ந்து பெரியசாமி சித்தர் பீடத்தில் அந்தத் தீபம் எரிய தொடங்கிவிடும்.  கார்த்திகை மாதத் திருவிழாவிற்கு பெரியசாமி சித்தரைக் காண ஓடோடி வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டும் வரத்தினை அள்ளி அள்ளி தருகிறார் பெரியசாமி சித்தர்.  திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் வன்னிக்கோனேந்தல் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் ‘மருக்காலங்குளம் விலக்கு’ என்ற இடத்தில் இருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ. மேற்கு நோக்கி பயணித்தால் அண்ணாமலைப்புதூர் என்னும் தென் திருவண்ணாமலையை அடையலாம்.

மக்களுக்காக வாழ்ந்த சித்தர்  பெரியசாமி சித்தர், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு சென்று நோய் தீர்க்கத் திருநீறு கொடுப்பார். அவர்களின் நோய் தீரும். இவரது செயல் சிலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவரை அங்கு செல்லவிடாமல் தடுக்க முடிவு செய்தனர்.  பெரியசாமி சித்தர் சுடரை தலையில் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்ற போது, அங்கு வந்த பலர் இவரைக் கேலி செய்ததுடன், அந்தப் பகுதிக்குப் போகக்கூடாது என்றும் தடுத்துள்ளனர்.

இதனால் சினம் கொண்ட சித்தர் வழியும் எண்ணெயைக் கையால் வழித்து, அவர்கள் மீது வீசினார். மறுநிமிடம் அவர்கள் உடல் முழுக்க முழுக்கக் கொப்புளமாக மாறிவிட்டது. அலறியபடி சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.  ‘சாதி என்று எதுவும் கிடையாது. இனிமேல் இதுபோல் நினைக்காதீர்கள்’ என்று கூறிய பெரியசாமி சித்தர், மீண்டும் தன்மேல் வழிந்த எண்ணெயை எடுத்து அவர்கள் மீது தெளித்தார். முதலில் சுட்டெரித்து கொப்புளங்களை உண்டாக்கிய அதே எண்ணெய், இப்போது குளிர்ச்சியாக மாறி அந்த கொப்புளங்களுக்கு மருந்தானது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in thiruvannamalai , thiruvannamalai siddhargal , jeeva samadhi in thiruvannamalai , thiruvannamalai siddhar , siddhar temple in thiruvannamalai , thiruvannamalai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in thiruvannamalai , siddhar temples in thiruvannamalai , thiruvannamalai sitthargal , siddhars in thiruvannamalai ,



No comments:

Post a Comment