வண்டி பாரத்தை தாங்கிய மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர்
Maranthai Sri Chetty Sithar
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மாறந்தை என்ற கிராமம். இங்கு அடங்கி உலகெல்லாம் அருள் வழங்குபவர் தான் ஸ்ரீசெட்டி சுவாமிகள்.
வயல்வெளியில் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு மற்றொரு தாய் பால் கொடுத்த காரணத்தினால் இவ்வூர் ‘மாற்றான் தாய் நல்லூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ‘மாறந்தை’ என மருவியது. ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிபுதூரில் 1878-ல் பிறந்தவர் தவத்திரு செட்டி சுவாமி என்ற சற்குருநாத சுவாமிகள்.
இவர் தந்தையின் பெயர் முத்தையா செட்டியார். இவரின் நான்கு புதல்வர்களில் ஒருவர் தான் கருப்பன். தந்தையாரின் ஜவுளி கடையில் திருநீறு அணிந்து பக்தி பரவசமாகவே வேலை செய்வார். பக்தியில் மிகவும் லயித்து விடக்கூடாது என இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தெய்வத்தின் மீது ஈடுபாடுடன் இருந்த கருப்பன், வியாபரத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் பற்று இல்லாமலேயே விளங்கினார்.
எனவே யாருமில்லாத சமயத்தில் கடையில் ஜவுளிகளை நஷ்டத்துக்கு விற்று விட்டார். இதையறிந்த சகோதரர்கள் கோபமடைந்தனர். அவரை கண்டித்தனர். கருப்பன் தனது மனைவி குழந்தையுடன் வடக்குநோக்கி கிளம்பினார். பல இடங்களில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். ஆங்காங்கே மகான்களை கண்டு தரிசனம் செய்தார். இறுதியில் ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
அங்கு சமாதி கொண்ட தாயுமான சுவாமிகள் பீடத்தில் அமர்ந்து, சிறிது காலம் தியானம் செய்தார். தொடர்ந்து திருச்செந்தூர் நோக்கி பயணமானார். அங்கே மூலவருக்கு பின்னால் குகைக்குள் அமைந்்துள்ள பஞ்சலிங்கத்தை தினமும் தவறாமல் பூஜித்தார். நாழிக்கிணறு அருகே பூவரசு மரத்தடியில் வட்டக் கல்லில் துறவு கோலத்துடன் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்க ஆரம்பித்தார். இவரின் காதில் பெருந்துளையிட்ட தோற்றத்தினை கண்டு, அனைவரும் இவரை ‘ஸ்ரீசெட்டி சுவாமி’ என்று அழைத்தனர்.
அந்த பெயரே பிற்காலத்தில் அவருக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. பலர் இவருக்கு பழங்களை பரிசளித்தனர். அதை வாங்கி தானும் புசித்து விட்டு மீதியை, அங்கு வரும் ஏழைகளுக்கும் வழங்கினார். எப்போதும் புன்சிரிப்புடன் பட்டினத்தார், தாயுமானவர் பாடலையும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலான பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு ஆடாமல் அசையாமல் பத்மாசனமிட்டுச் சின்முத்திரை தாங்கி, சண்முகநாதனை நோக்கித் தவமேற்றுவார்.
அவர் திருச்செந்தூரில் இருப்பதை அறிந்து, குடும்பத்தார் அவரை அழைத்தனர். எதையும் கண்டுகொள்ளாமல் அவர் கற்சிலைபோல் தவமேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் அவரை விடவில்லை. எப்படியும் தங்களது வீட்டுக்கு கூட்டிச்சென்று விடவேண்டும் என முயற்சி செய்தனர். குடும்பத்தார் கண்ணில் தென்படாத வகையில் கோவிலுக்குள் சென்று அமர்ந்து கொண்டார், ஸ்ரீசெட்டி சுவாமிகள். ஆனாலும் உறவினர்கள் கோவிலுக்குள் சென்று அவரை வலுக்கட்டாயமாக பிடித்து வில்லு வண்டியில் ஏற்றிச் சென்றனர்.
வண்டி குறிப்பிட்ட தூரத்தில் சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என இறங்கியவர் மாயமாக மறைந்து விட்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பட்டப்பகலில் காணாமல் போன அவர் சித்தராகி விட்டார் என புரிந்த உறவினர்கள், ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பி விட்டனர். அதே வேளையில் சுவாமி தென்திருப்பேரை அருகே ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அதன் பின் அவ்வூரில் அமர்ந்து செந்தூர்முருகனை நோக்கி தவமேற்றினார்.
அதைக் கண்ட முருக பக்தர் அருணாசலம் என்பவர், சித்தருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தார். தென்திருப்பேரையில் இருந்தாலும், திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் சென்று வந்தார். தென்திருப்பேரை ரவுண்டனாவில் கீழே படுத்துக் கிடந்தால் கூட, அப்படியே உயிரற்ற கட்டையாக தவம் செய்வார். ஒருநாள் சாலையோரம் அவர் படுத்துக்கிடப்பதை கவனிக்காமல் பாரத்துடன் வந்த மாட்டு வண்டி ஒன்று அவர் மீது ஏறிவிட்டது. வண்டிக்காரர் பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தார்.
அப்போதும் தியானம் கலையாமல் அப்படியே இருந்தார் ஸ்ரீசெட்டி சுவாமிகள். இதனைக் கண்ட வண்டிக்காரர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். சித்தரைப் பற்றி அக்கம் பக்கத்தில் கூறினார். தென்திருப்பேரை அருணாசலம், சித்தருக்காக உணவு சமைத்து எடுத்து வருவார். அதை சிரித்துக் கொண்டே தான் வைத்திருக்கும் தகரப்போணியில் போடச்சொல்வார். அவர் சாப்பிட்ட பின் மீதியை அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கொடுப்பார். ஊர் மக்கள் பலர் இவருக்கு உணவு கொடுக்க ஆசைப்படுவர்.
அனைவரிடமும் சிரித்த முகத்துடன் உணவை பெற்றுக்கொள்வார். நாய்குட்டி சுவாமிகள், சேரகுளம் பண்ணையார், அனவரதநல்லூர் தேவாரம் சுந்தரபிள்ளை, தென் திருப்பேரை கிருஷ்ண அய்யங்கார், ராயர் சமுதாயத்தினர் உள்பட பலர் ஸ்ரீசெட்டி சித்தருக்கு பணிவிடை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
1915-ம் ஆண்டு சுவாமிகள் ஆழ்வார்திருநகரியை விட்டு திருநெல்வேலிக்கு வந்தார். தனக்குத் தேவை என்று தோன்றினால் கையிலுள்ள தகரப் போணியைப் பிச்சா பாத்திரமாகக் கொண்டு வீடுகளில் பிச்சை எடுப்பார். மாலை நேரத்தில் காந்திமதியம்பாளைத் தரிசித்துவிட்டு அங்குள்ள பொற்றாமரை குளக்கரையில் ஏகாந்தமாக படுத்துக்கிடப்பார். செட்டிச் சுவாமியைச் சூழ்ந்திருக்கும் சிவபக்தர்களுக்கு நல்வழிகள் கூறியும், பட்டினத்தார், தாயுமானவர் அருட்பாடல்களைச் சொல்லி அதற்குப் பொருளும் கூறுவார்.
இவ்வேளையில் மாறந்தையைச் சேர்ந்த காசிநாத முதலியார், சுவாமியை சந்தித்துள்ளார். அவரின் ஆன்மிக செயலுக்கு அடிமையாகி, சித்தரின் சீடராகி விட்டார். பின்னர் தன்னோடு மாறந்தைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மறுநாள் வருவதாக சுவாமி வாக்களித்தார். இதற்கிடையில் சுவாமி வரும் தகவலை முதலியார் மாறந்தையில் பலரிடம் கூறினார். அவ்வூரை சேர்ந்த சுப்பிரமணிய ஆசாரி என்பவர், புதூர் சென்ற போது அங்கு பாடிக்கொண்டிருந்த ஸ்ரீசெட்டி சித்தரைக் கண்டார். ‘ஆகா.. இவர் முதலியார் கூறிய சுவாமிகள் போல அல்லவா உள்ளார்' என நினைத்து அவரை மாறந்தைக்கு அழைத்துள்ளார்.
அப்போதும் சுவாமிகள், ‘நாளை வருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அந்த தகவலையும் அவர் ஊரில் போய் கூறினார். ஊரே.. சுவாமியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. மறுநாள் அதிகாலை ஆசாரி வீட்டு முன்பு, கையில் தகரப்போணியை வைத்துக்கொண்டு, இடிப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிய வண்ணம் செட்டி சுவாமிகள் நின்றார். அவரை வணங்கி வரவேற்றனர்.
ஆசாரி மனைவி கொடுத்த கஞ்சியை தனது தகரப்போணியில் வாங்கி, அதில் பாதியை குடித்து விட்டு, மீதியை அப்படியே வைத்துக்கொண்டார். இதையறிந்த ஊர் பெரியவர்கள் ஓடோடி வந்தார்கள். காசி நாத முதலியார் தனது இல்லத்திற்கு அழைத்து, தக்க ஆசனத்தில் அமர வேண்டினார். சுவாமியோ தரையில் அமர்ந்து கொண்டார். வீட்டு ஓரத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். பின் எதுவுமே பேசாமல் ஆலங்குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். வெண்கல பொட்டலில் பாழடைந்த மண்டபத்திலும், அத்தியூத்து என்னுமிடத்திலும் அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தார். ரோடு ரோடாக அலைந்த காரணத்தினால் இவரை ‘ரோட்டு சாமியார்' எனவும் அழைக்க ஆரம்பித்தனர்.
மாறந்தைக்கு சுவாமி வரும் வேளையை எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருப்பார்கள். சில வேளையில் பட்டை ஓலையை எடுத்துக்கொண்டு சுவாமி ஊருக்குள் வருவார். பாகுபாடின்றி அனைத்து தெருக்களிலும் பிச்சை எடுப்பார். சிலர் ‘சைவ அம்சம் கொண்ட எங்கள் இடத்தில் மட்டும் பிச்சை எடுங்கள்’ எனக் கூறினர். அவர்களுக்கு சுவாமியிடம் இருந்து புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது. ஸ்ரீசெட்டி சித்தரின் புகழை கேள்வி பட்டு திருநெல்வேலியில் இருந்து இரண்டு நண்பர்கள் சுவாமிக்கு பழம் வாங்கி கொண்டு வந்தனர். இருவரும் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில் தாழ்த்தப்பட்டவர், ‘தான் யார் என்று கூறினால் பழத்தினை சுவாமி வாங்குவாரோ.. வாங்க மாட்டாரோ.. எனவே அவரிடம் நாம் யார் என்று கூறக்கூடாது' என அமைதியாக இருந்தார்.
சுவாமியை சந்தித்த போது, ‘யப்பா, உங்கள் ஜாதியை எல்லாம் நான் கேட்டேனா.. எல்லாருமே இந்த பூமியில் ஒன்றுதானப்பா.. ஜாதியை இறைவன் வைக்கவில்லை. நீங்கள் தான் வைத்துக்கொண்டீர்கள்' என கூறி சிரித்தார். அவர் தந்த பழத்தினை சாப்பிட்டு விட்டு, மீதியை கொண்டு போய் உங்கள் குழந்தையிடம் கொடுங்கள்' என அனுப்பி வைத்தார். ஆகா.. நாம் மனதில் நினைத்தது சுவாமிக்கு புரிந்து விட்டதே. என அதிர்ந்தவர்கள், சுவாமியின் அருள் வேண்டி நின்றனர்.
ஜாதி சமயத்துக்கு அப்பாற்பட்டு சுவாமியை காண பக்தர்கள் புதூர் மடத்துக்கு வருவதை வாடிக்கையாக கொண்டனர். காலங்கள் கடந்தது. சுவாமியின் கழுத்தை சுற்றி கண்ட மாலை என்னும் நோய் தாக்கியது. இந்த நோயை தீர்க்க அந்த காலத்தில் மருந்தே கிடையாது. இதனால் சுவாமிகள் ரணம் அடைந்தார். பலரும் ‘நோய் தீர்க்க மருத்துவரிடம் செல்வோம்’ என்று ஆலோசனை கூறினர். ஆனால் சுவாமி கேட்கவில்லை.
பச்சை குத்திக்கொண்ட பக்தர்: மாறந்தையை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர், தனது வீட்டின் வாசலில் சுவாமி பாடிக்கொண்டிருந்ததை கண்டு கோபமுற்றார். சுவாமியை நோக்கி சொல்ல கூசும் வார்த்தைகளால் ஏசினார். சுவாமி.. ‘கவலைப் படாதே.. நீயும் என்னைப் போலத்தான் ஆக போகிறாய்’ என கூறி சிரித்தார். கோபமடைந்த சங்கரலிங்கம், சுவாமியை அடிக்க கம்பு எடுக்க வீட்டுக்குள் ஓடினார். வெளியே வந்து பார்த்த போது சுவாமியை காணவில்லை. பல இடத்தில் தேடியும் இவர் கண்ணில் படவில்லை.
ஆனால் அவரை தேடிசென்ற இடத்தில் எல்லாம் ‘சுவாமியை இப்போதுதான் பார்த்தேன்’. ‘இங்குதானே அமர்ந்திருந்தார்’ என மற்றவர்கள் பேசினர். அந்த சிறு கிராமத்தில் தனது கண்ணில் மட்டும் சுவாமி படவில்லை என்றால், அவர் சாதாரண மனிதரா? என யோசிக்க ஆரம்பித்து விட்டார் சங்கரலிங்கம். ஆகா.. இவர் மகான் அல்லவா.. என அறிந்து அதன் பின் அவரிடம் சீடராகி விட்டார். சாமி.. சமாதி அடைந்த பிறகு தன்னுடைய கையில் ‘செட்டி சுவாமியின் சீடர்’ என பச்சையே குத்திக்கொண்டார்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in tirunelveli , tirunelveli siddhargal , jeeva samadhi in tirunelveli , tirunelveli siddhar , siddhar temple in tirunelveli , tirunelveli siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in tirunelveli , siddhar temples in tirunelveli , tirunelveli sitthargal , siddhars in tirunelveli ,
No comments:
Post a Comment