Famous Shiva Temple
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
வடஇந்தியாவில் காசி போல, தென் இந்தியாவில் தென்காசி திருத்தலம் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. அதேபோல் வடக்கே திருப்பதி போல், தெற்கே தென்திருப்பதி என்ற புகழ், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலுக்கு உண்டு. அதுபோல் வடக்கே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் போன்று, தெற்கே ஏதேனும் கோவில் இருக்கிறதா? என்றால் இருக்கிறது.
அந்த கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப்புதூர் என்னும் ஊரில் இருக்கிறது என்பது பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு கோவிலைப்பற்றி இங்கே நாம் பார்ப்போம்!. திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் வன்னிக்கோனேந்தல் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சரியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் மருக்காலங்குளம் விலக்கு என்ற இடம் உள்ளது.
இந்த மருக்காலங் குளம் சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அண்ணாமலைப்புதூர் என்ற ஊரில் இந்த அக்னி ஸ்தலம் அமைந்துள்ளது. இங்குதான் அண்ணாமலையார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை தென்திருவண்ணாமலை என்று அழைப்பதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உண்டு. இந்த கோவில் அமைந்து உள்ள பகுதிக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஒரு சித்தர் வந்து உள்ளார்.
அவரது பெயர் பெரியசாமி. அவரது சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் தனது தலையில் துளசி மாலையை “சும்மாடு'' போல் மடக்கி கட்டிக்கொள்வார். அதற்குள் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி எரிய விடுவார். அவரது இந்த செயலை ஊரே அதிசயமாக பார்த்தது. வெறும் தலையில் ஒரு சாமியார் தீபம் எரிய விடுகிறார் என்பது அந் நாளில் அனைவரையும் அதிசயம் கொள்ள செய்தது.
அவர் சுற்றித்திரிந்த பனவடலிசத்திரம் பகுதியில் ஒரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்ததால் அவர்களால் இந்த சித்தர் விரட்டப்பட்டு அண்ணாமலைப்புதூர் பகுதிக்கு வந்து உள்ளார். அப்போது அந்த பகுதி ஒரு ஊராக இருக்கவில்லை. மனித நடமாட்டமே இல்லாத காடாக இருந்து உள்ளது. சித்தர் பெரியசாமி இந்த இடத்திற்கு வந்தவுடன், இந்த பகுதி திருவண்ணாமலை போன்று உள்ளதே என்று ஆச்சரியம் அடைந்து அங்கேயே அண்ணாமலையாருக்கு சிறிய கோவில் ஒன்றை கட்டி வழிபட்டு வந்தார்.
அங்கே அவர் வழிபட்ட ஐம்பொன்னாலான அண்ணாமலையார் சிலை இன்னமும் அந்த கோவில் கர்ப்பகிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராக கல்லால் ஆன சிவலிங்கம் உள்ளது. திருவண்ணாமலையில் உள்ளதுபோலவே இங்கும் ஒரு பெரிய மலை உள்ளது. அந்த மலையானது அங்கே(திருவண்ணாமலையில்) சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் அமைந்து உள்ளது.
இந்த மலையானது இங்கே(அண்ணாமலைபுதூரில்) சிவனின் முன்புறத்தில் கிழக்கு திசையில் அமைந்து உள்ளது. இங்குள்ள மலை மீது சப்தகன்னிமார் கோவிலும் உள்ளது. அங்கே இருப்பதைபோலவே இங்கேயும் தெப்பக்குளம் இருக்கிறது. இப்படி இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் அண்ணாமலையாருக்கு திருக்கோவிலை உருவாக்கிய சித்தர் பெரியசாமி ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் மலைமீது தீபம் எரிய விட்டார். திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப்போன்று இந்த பகுதியிலும் தீபம் எரிகின்றதே என்று அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த மலையடிவாரத்தை நோக்கி மறுநாள் பகல் பொழுதில் வந்து பார்த்தால் சித்தர் பெரியசாமியோ தனது தலையில் தீபத்தை எரியவிட்டு தவக்கோலத்தில் இருப்பார். அதைப்பார்த்து அதிசயித்த மக்கள் சித்தர் பெரியசாமியை வழிபட தொடங்கினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக கோவிலை சுற்றி குடியேறவும் தொடங்கினார்கள்.
திருக்கார்த்திகை நாள் அன்று தனது தலையில் தீபம் ஏந்தியவாறு சித்தர், அந்த தீபத்துடன் வீடு, வீடாக சென்று அருளாசியும் வழங்குவார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் அவரது தலையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவரது தேகம் எல்லாம் வழிந்தோடும். ஆனாலும் அவருக்கு ஒன்றும் செய்யாது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அவரை வழிபடுவதற்காக வந்த மக்கள் அவருக்கு காணிக்கையாக நவதானியங்களை வழங்கினார்கள். அவற்றை சித்தர் பெரிய “குலுக்கைகளில்'' சேமித்து வைத்திருப்பார். அதை ஒரு குடும்பத்தினர் திருட முயன்றபோது சாமியார் “நான் சுமக்கிற நெருப்பை நீ சுமப்பாய்'' என்று சாபம் கொடுத்து விட்டார்.
அந்த குடும்பத்தினர் வழிவழியாக இன்றும் தங்கள் தலையில் தீபம் ஏந்தி கார்த்திகை தினத்தின் மறுநாள் வீதி உலா வருகின்றனர். பின்னாட்களில் ஜீவசமாதி அடைந்த பெரியசாமி சித்தரின் சமாதி, கோவிலை ஒட்டியவாறே அமைந்து உள்ளது. இக்கோவில், மிகுந்த அருளாட்சி நிறைந்த கோவிலாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த பகுதி மக்கள் மிகுந்த ஒற்றுமையாக கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபமானது பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருந்து பார்த்தாலும் திருவண்ணாமலையில் உள்ள மலையில் தீபம் எரிவதைப்போன்று சுடர்விட்டு பிரகாசிப்பதை பார்க்க முடியும். அதேபோல் தலையில் தீபம் சுமக்கும் வைபவமும் இங்கு ஆண்டு தோறும் நடக்கிறது. இந்த திருக்கோவிலுக்கென்று ஒரு சிறிய தேரும் இருக்கிறது.
திருக்கார்த்திகை அன்று நள்ளிரவில் இந்த தேர் பவனி நடக்கிறது. திருநெல்வேலியில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு திருநெல்வேலியில் இருந்து பனவடலிசத்திரம் சென்றால் அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம்.
-நெல்லை வேலவன்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
கோவில்கள் வரலாறு , இந்திய கோவில்கள் , கோவில்களின் மர்மங்கள் , சிறப்பு வாய்ந்த கோவில்கள் , பரிகார கோயில்கள் , பரிகார கோவில்கள் , பிரசித்தி பெற்ற ஆலயங்கள் , temples in india , famous temples in india , oldest temples in india , must visit temples in india , famous shivan temples in india ,
famous shivan temples in tamilnadu , தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் , தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில் , தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்கள் , temples in tamilnadu , tamilnadu temple tour , oldest temple in tamilnadu ,must visit temples in tamilnadu , must visit temples in south india , south india temple tour ,
No comments:
Post a Comment