திருவருட் பிரகாச வள்ளலார்
Thiru Arut Prakasa Vallalar
Thiru Arut Prakasa Vallalar
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கம். இராமலிங்க அடிகள் ஊனுடம்பில் 1823 ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, அவ்வாண்டு சனவரி 30ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தன் உடலை ஒளியில் கரைத்துக்கொண்டு, ஒளிவடிவம் பெற்று இறைவனோடு ஒன்றானார்.அடிகளார் கடலூர் மாவட்டம், புவனகிரிக்கு வடமேற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘’மருதூர்’’ என்னும் விவசாய கிராமத்தில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் (சுபானு,புரட்டாசி 21) ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் மாலை 5.54 மணிக்கு தவத்திரு ‘’இராமையா பிள்ளை’’ திருமதி.சின்னம்மையார் என்ற தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
இவருக்கு சபாபதி,பரசுராமர் என்ற இரு மூத்த சகோதரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற மூத்த சகோதரிகளும் இருந்தனர். அடிகளார் ஐந்து இடங்களில் வாழ்ந்துள்ளார். 1823 ஆம் ஆண்டுமுதல் 1825ஆம் ஆண்டுவரை கைக்குழந்தையாக மருதூரிலும், 1825 முதல் 1858 வரை சென்னையிலும், 1858 முதல் 1867 வரை கடலூர் மாவட்டத்திலுள்ள கருங்குழி என்ற கிராமத்திலும், 1867 முதல் 1870 வரை வடலூரிலும், 1870 முதல் 1874 வரை மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத்திலும் வாழ்ந்துள்ளார்.
அடிகளார் 1851ஆம் ஆண்டு ஒழுவில் ஒடுக்கம் என்ற நூலையும், 1855-இல் தொண்டமண்டல சதகம் என்ற நூலையும்,1857 இல் சின்மய தீபிகை என்ற மூன்று நூல்களை பதிப்பித்துள்ளார். மேலும், அவர் ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவையும், மனுமுறைகண்ட வாசகம் மற்றும் சீவகாருண்ய ஒழுக்கம் என்ற மூன்று நூல்களை இயற்றி வெளியிட்டுள்ளார்.
அடிகளார் 1865 ஆம் ஆண்டு ‘’சுத்த சன்மார்க்க சங்கத்தையும்’’, 1867இல் ‘’சத்திய தருமச்சாலையையும்’’, 1870இல் ‘’சித்திவளாகத்தையும்’’ மற்றும் 1872 ஆம் ஆண்டு ‘’சத்திய ஞான சபையையும்’’ தோற்றுவித்தார். 1874ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி (திருமுக ஆண்டு தை 19) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு ஒளிவடிவம் பெற்று இறையோடு கலந்தார். இறைவன் ஒளிவடிவில் இருப்பதால், அடிகளார் அந்நிலையை ஏற்றார்கள், என அவருடைய பாடல்கள் கூறுகின்றன.
ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவானது ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் இறை உணர்வின் உந்துதலால் அருள்நிலையில் பாடப்பட்டவையாகும். எனவே திருவருட்பா என பெயர்ப்பெற்றது. இப்பாடல்கள் அனைத்தும் ஒன்பது வகையான இலக்கணங்களைக் கொண்டுள்ளது.அவை, எண்ணிலக்கணம், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம், உரையிலக்கணம், புணர்ச்சியிலக்கணம் மற்றும் ஒற்றிலக்கணம் என்பனவாகும்.
அடிகளார் அருளிய திருவருட்பாவின் பாடல்கள் அனைத்தும் மனிதனுக்கு ஞானத்தைப் புகட்டி மனிதனை மன்+இதன் = மனிதன், ஆக ஆக்க வல்லவை. அடிகளார் சாதி,மதம்,மொழி,தேசம் போன்ற அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு, அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே குருவருள் நெறி என்றார்.
அனைத்து உயிர்களும் இறைவனின் குழந்தைகள். அவற்றை சமமாக பாவிப்பதும், கருணையால் உபசரிப்பதும் மட்டுமே திருவருளுக்கு உகந்தது என்றார். ‘’சீவகாருண்யமே முக்தி என்ற வீட்டின் திறவுகோல்’’ எனவே, உயிர்களை பசியிலிருந்து காப்பதும், பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத் தொண்டு எனப் புகட்டினார். மேலும், அத்தொண்டே சன்மார்க்கத்தாரின் தலையாய கடமை எனக் கூறினார்.
வள்ளலாரின் முக்கிய உபதேச மொழிகள்:
‘அருட்பெருஞ்சோதி’ – இந்த பிரபஞ்சம் தழுவிய சோதியே அனைத்தையும் உருவாக்கியது.
‘தனிப்பெருங்கருணை’ – அருட்பெருஞ்சோதி, இறைவனின் தனிப்பெருங்கருணையால் பஞ்சபூதங்கள் உருவாக்கப்பட்டு உயிர்களுக்கு வேண்டிய அனைத்தும் புவியில் அளிக்கப்படுகின்றன.
‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ – உலகில் அனைத்து உயிர்களுக்கும் இறைவனால் சமமான உரிமைகள் அருளப்பட்டு, காக்கப்பட்டு, பக்குவ நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை. உயிரைக் கொல்வது இறைவன் முன் ஏழுவகைப் பிறவியிலும், தண்டனைக்குரிய குற்றமாகும். அக்குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். யாரும் தப்பமுடியாது. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தண்டனை தீரும்வரை துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும்.
ஞானமே மனிதனை துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதியைக் கொடுக்கும்.
ஆன்ம நேயம் அமைதிக்கு வழிகாட்டும்.
சீவகாருண்யமே நமது வாழ்க்கைமுறையாக அமைய வேண்டும்.
சன்மார்க்க கோட்பாடுகள் அனைத்தும் பிணி,மூப்பு,மரணமில்லாத பெரு வாழ்வைக் காட்டும்.
சன்மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் முத்தேக சித்திகளைப் பெற்று அழியாது, ஊனுடம்பிலோ,ஒலியுடம்பிலோ அல்லது ஒளியுடம்பிலோ ஞான தேகத்துடன் நிலைத்த வாழ்வைப் பெறுவார்கள்.
மனிதனின் இறுதிநிலை இறப்பது அல்ல. ஒளியில் கரைந்துவிடுவதே! இறைவன் ஒளிவடிவமாக இருப்பதால் இறைவனிடமிருந்து வந்த உயிர்கள் இறைவனிடமே ஒளிவடிவில் ஒளி அணுக்களாகச் சென்றடையும். ஆன்ம அணுக்கள் ஒளிவடிவத்தில் இருக்கின்றன.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
cuddalore sithargal, mahans in cuddalore , cuddalore siddhargal , jeeva samadhi in cuddalore , cuddalore siddhar , siddhar temple in cuddalore , cuddalore siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in cuddalore , siddhar jeeva samadhi temples in tamil nadu ,
No comments:
Post a Comment