Tourist Places Around the World.

Breaking

Wednesday 24 June 2020

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 3/3) / Kagabujandar Siddhar Padal in Tamil

காகபுஜண்டர் சித்தர் பாடல் - (Part 3/3)

Kagabujandar Siddhar Padal in Tamil - (Part 3/3)

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 1/3)

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 2/3)

51: மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடையு மான லிங்கம்
சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
ஏகபர மானதொரு லிங்கந் தானே. 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


52: தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான்
கோனென்ற பிரமத்தி லடக்க மாகக்
குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்;
தேனென்ற சட்டை களுங் கழன்று போகும்
தேனுக்குந் தேவனா யிருக்க லாமே. 

53: இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும்
ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல்
குணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள்
செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே. 

54: தானவனே யென்குருவே புசுண்ட நாதா
தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம்
தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந்
துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங்
குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே. 

55: சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா!
சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்;
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
மைந்தனே! அபுரூப மாகு மப்பா!
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால்
வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே. 

56: ஆச்சென்ற அபுரூப மான போதே
அட்டமா சித்திவகை யெட்டு மாடும்;
மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே
முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்;
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால்
நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே. 

57: மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான்
மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா!
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே. 

58: இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
உத்தமனே காயமது வுறுதி யாச்சு;
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
வண்டரோ டிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற்
குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே. 

59: பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி!
பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்க ளதிக மாகத்
திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும்
கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே. 

60: வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு;
மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்
ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி
உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்;
மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று
மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்
காயான சுழுத்தியென் றிதற்கு நாமம் கண்டுபார்
கண்டுகொள்ளப் போதந் தானே. 

61: தானென்ற பலரூப மதிகங் காணுந்
தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும்
ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி
உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே. 

62: நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு;
நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு;
சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
ஆகாய வீதிவழி யாட்டும் பாரே. 

63: ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப்
பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங்
கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும்
வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே. 

64: போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே. 

65: பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே. 

66: காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. 

67: நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி. 

68: அறியாத பாவிக்கு ஞான மேது?
ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே. 

69: குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
பராபரையுங் கைவசமே யாகு வாளே. 

70: ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே. 

71: பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே. 

72: சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு. 

73: வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே. 

74: பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே. 

75: ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே. 

76: பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு
புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி
அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாம லரைத்து மைந்தா!
பாலகனே சவாதோடு புனுகு சேரே. 

77: சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்?
அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே. 

78: வாரான தில்லைப்பால் கருந்து ளசியும்
வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே.

79: பாரடா பரப்பிரமத் தூடே சென்று
பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்.
கூரடா கோடானு கோடி சித்துக்
குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே.

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 1/3)

காகபுஜண்டர் சித்தர் பாடல் (Part 2/3)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar kagabujandar padal , siddhar kagabujandar padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,

No comments:

Post a Comment