1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? ஆனால் தத்தாத்ரேயர், ‘எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்’ என்று கூறியதற்கான காரணத்தை பார்க்கலாம்.
யது என்ற மன்னன், வேட்டைக்காக காட்டுக்குள் சென்றான். அங்கு தத்தாத்ரேயரைக் கண்டான். அவரின் முகத்தில், கவலை என்பதையே அறியாதவர் போன்ற மகிழ்ச்சி தென்பட்டது. தத்தாத்ரேயரை நெருங்கிய மன்னன், ‘சுவாமி! தாங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் என்ன?. உங்களுக்கு குரு யார்?’ என்று கேட்டான். அதற்கு பதிலளித்த தத்தாத்ரேயர், ‘எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்’ என்றார்.
அதைக் கேட்டு ஆச்சரியம் கொண்டான் யது மன்னன். அந்த ஆச்சரியம் அவனது கேள்வியில் வெளிப்பட்டது. ‘சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் மிகவும் வித்தியாசமாக தெரிகிறதே’ என்றான். ‘பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு (தேனீ), யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் தாசிப் பெண், குரரம், சிறுவன், ஆயுதம் தயாரிப்பவன், சிறுமி, பாம்பு, சிலந்தி, புழு ஆகியோர் என் குருக்கள் ஆவர்’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட, தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்.
‘மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன். தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது. சந்திரன் தேய்வதும் வளர்வதும் ஒரு கலை. அதை சந்திரன் தேய்வதாக கருதக்கூடாது. அதுபோலவே மாறு பாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்று அறிந்தேன். ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பல வாறாக சிந்திப்பதை உணர்ந்தேன். வேடன் ஒருவன் புறாக் குஞ்சுகளை வலைவிரித்துப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. தேனீக்கள், பூக்களிடம் இருந்து தேனைப் பெறுவது போல, துறவிகளும் தங்களுக்கு தேவையான உணவை யாசகமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரம் தேனீக்களைப் போல உணவை சேர்த்து வைத்து பறிகொடுப்பதை தவிர்த்து, தேவையானதை அனுதினமும் பெற வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் குழியில் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன். தேனீக்கள் சேகரித்த தேனை, தேன் சேகரிப்பவன் அபகரித்துச் செல்வான். தேனீயை பொறுத்தவரை தேன் சேகரிப்பது சரி என்றாலும், மனித வாழ்வோடு அதை ஒப்பிடுகையில் அபரிமிதமாக சேர்க்கப்பட்ட பொருள் அபகரிக்கப்படும் என்பதை தேன் சேகரிப்பவனிடம் இருந்து அறிந்து கொண்டேன்.
ஓடுவதில் மானின் வேகம் அசர வைப்பதாகும். ஆனால் அது இசையைக் கேட்டால் அப்படியே நின்று விடும். கொடிய விலங்குகள் அப்போது வந்தால் என்ன ஆகும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே இறை வழியை நாடுபவர்கள் இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளக்கூடாது என்று மானிடம் கற்றுக்கொண்டேன். நாவை அடக்க முடியாததால் வரும் சபலத்தால், தூண்டிலில் மாட்டு கின்றன மீன்கள். எனவே நாவை அடக்க வேண்டும் என்பதை மீனிடம் கற்றேன். பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
குரரம் என்பது சிறிய பறவை. அது தூக்கிச் செல்லும் மாமிசத் துண்டை, பெரிய பறவை பறிக்க வந்தால், இறைச்சியை கீழே போட்டு விடும். பெரிய பறவையும், குரரம் பறவையை விட்டு விட்டு, மாமிசத்தை நாடிச் சென்று விடும். ‘வேண்டும்’ என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் வராது என்பதை அந்தப் பறவையிடம் கற்றேன். சிறுவனின் உள்ளம் எந்த இன்ப துன்பத்திலும் சிக்காதது. ஒருவன் திட்டினான், ஒருவன் புகழ்ந்தான் என்று எந்த மனநிலையிலும் அந்தக் குழந்தை அகப்படுவதில்லை. அதே போன்ற மனம் முனிவருக்கும் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். ஒரு சிறுமியின் வளையல்கள் தேவைக்கு அதிகமாக உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
ஆயுதம் செய்பவனின் மன ஒருமைப்பாடு வியக்கத்தக்கது. அவன் அருகில் போர் நடந்து கொண்டிருந்தாலும்கூட, தன்னுடைய ஆயுதத்தை முழுமைப்படுத்துவதிலேயே கவனம் கொள்வான். அவனிடம் இருந்து மன ஒருமைப்பாட்டை கற்றேன். பாம்பு தனித்து திரியும். ஆனாலும் கவனமாக இருக்கும். கண நேரத்தில் அழியும் இந்த உடலுக்காக அவை, சிரமப்பட்டு வீடு கட்டிக் கொள்வதில்லை. அதுபோல முனிவருக்கும் வீடு கூடாதென்பதை பாம்பிடம் கற்றேன்.
பரபிரம்மத்தின் தத்துவத்தை சிலந்தியிடம் கற்றேன். அது தன் உள்ளிருக்கும் நூலை வெளிப்படுத்தி வலை பின்னி, அதனுடன் விளையாடி, இறுதியில் அதையே விழுங்கிவிடுகிறது. அதுபோலவே இறைவனும் இந்த மாய பிரபஞ்சத்தை உருவாக்கி, பிரளய காலத்தில் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். ஒரு வகை வண்டு, ஒரு புழுவைக் கொண்டு வந்து அதை ஓரிடத்தில் வைத்து அதைச் சுற்றிலும் சத்தம் செய்து கொண்டே இருக்கும்.
அந்தப் புழு பயத்தால், அதையே பார்த்துப் பார்த்து மனம் முழுவதும் லயித்துப் போகும். இதனால் அந்தப் புழு தன் பழைய உருவை விட்டு, வண்டாக மாறிவிடும். அது போலவே மனிதர்களும் பயம், பக்தி, சினேகம், துவேசம் ஆகியவற்றில் தன் மனதை எதன் மீது நிறுத்துவரோ அந்த உருவை அடைவர். இந்த 24 பேரும் தான் என்னுடைய ஆசிரியர்கள் என்றார் தத்தாத்ரேயர். இதைக் கேட்ட "யது" அரசன், தன் பதவியை துறந்து ஆன்மிகத்தில் ஈடுபடத் தொடங்கினான்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment