வரி போட்டது சரியா?
நான் என்ன தவறு செய்தேன் என்று இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள்? என்று பிசிராந்தையாரிடம் கேட்டான் பாண்டிய மன்னன். பாண்டிய நாட்டிலுள்ள சிறிய கிராமம் பிசிர். இங்கு ஆந்தையார் என்னும் பெயர் கொண்ட புலவர் வசித்தார். ஊரின் பெயரை அவரது பெயருடன் இணைத்து பிசிராந்தையார் என அழைத்தனர். யாரையும், எழுத்தாலும் பேச்சாலும் தட்டிக்கேட்கும் குணமுடையவர்.
அவரது விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் என்பதால் அரசர்களும், அறிஞர்களும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். ஒருசமயம், பாண்டிய மன்னன் மக்கள் மீது பல வரிகளை விதித்தான். அவதிப்பட்ட மக்கள் பிசிராந்தையாரிடம் சென்றனர். அய்யனே! இதுபற்றி மன்னரிடம் பேசக்கூடாதா? வருமானமெல்லாம் வரிக்கே போனால், நாங்கள் குழந்தை குட்டிகளுடன் எப்படி பிழைப்போம்? என்றனர் கவலையுடன்.
பிசிராந்தையார் ஆவேசமாகக் கிளம்பி விட்டார். கையில் ஓலைச்சுவடி. மன்னனுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை பாடலாக எழுதியிருந்தார். புலவரைக் கண்ட மன்னன் வியப்படைந்தான். முன்னறிவிப்பின்றி திடீரென வருகை தந்துள்ளீர்களே! முதலில் அமருங்கள், தாகசாந்தி செய்து கொள்ளுங்கள், என்று உபசரித்த மன்னன், அழகிய சிம்மாசனம் ஒன்றில் அமர வைத்தான். மன்னா! நான் தாகசாந்தி செய்து கொள்வது இருக்கட்டும். மக்கள் மிகுந்த தாகத்துடன் இருக்கிறார்களே! அதுபற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார்.
புலவரே! தாங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. வைகையில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடத்தானே செய்கிறது... அவன் புரியாமல் பேசினான். மன்னா! வைகை பொய்க்கவில்லை. அது பெருகியோடுவதால் தானே கழனிகள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால், குடிமக்களின் வீடுகள் தான் காய்ந்து கிடக்கிறது. உன் கஜானா மட்டும் நிரம்பி வழிகிறது. சற்று விளக்கமாக சொல்லுங்கள் புலவரே! பிசிராந்தையார் மீண்டும் புதிர் போட்டார்.
மன்னா! யானையைப் பார்த்திருக்கிறாயா? பாண்டியன் கலகலவென சிரித்தான். என்ன புலவரே கேள்வி இது! வேடிக்கை யாகப் பேசுகிறீர்களே! ஒரு மன்னனுக்கு யானை தெரியாதா! அதெல்லாம் சரி! வயலில் விளைந்திருக்கும் நெல்லை சோறாக்கி, யானைக்கு கவளம் கவளமாகக் கொடுத்தால், அது பலநாளுக்கு போதுமானதாக இருக்கும். மொத்த யானைகளையும் வயலுக்குள் இறக்கி விட்டால், யானையின் வயிற்றுக்குப் போவது குறைவாகவும், காலில் சிக்கி வீணாவது அதிகமாகவும் இருக்கும். அதுபோல் தான் மக்கள் நிலையும்! நியாயமான வரி போட்டால், உன் கஜானாவும் நிரம்பும், மக்களும் செழிப்படைவார்கள்.
அதிகவரி விதித்தால், உன் கஜானா மட்டுமே நிரம்பும். மக்களின் வாழ்க்கைத்தரம் குறையும். உனக்கு வலிமை, ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மக்களுக்கு தாறுமாறாக வரி விதித்தால், யானையின் காலில் சிக்கிய வயல் போல் இந்த நாடு ஆகி விடும்,'' என்று ஆவேசமாகப் பேசினார். மன்னன் மனம் மாறி வரிகளைக் குறைத்தான். பட்ஜெட் போடும், நமது ஆட்சியாளர்களும் மக்கள் மீது கருணை வைத்து நியாயமான வரி வசூலிக்கலாமே!
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , siddhar teachings, siddhar noolgal
No comments:
Post a Comment