குழந்தை வரம் அருளும் குரு சித்தானந்த சுவாமி
SITTHANANTHA SWAMY
புதுச்சேரி சித்தர்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருபவர் சித்தானந்த சுவாமிகள்தான். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடலூர் அருகே உள்ள வண்டிப்பாளையம் என்ற ஊரில் அவதரித்த சித்தானந்த சுவாமிகள், சிறு வயதில் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரரை வழிபடத் தொடங்கினார்.
பெரியநாயகி அம்மனுக்கு நாள்தோறும் பூக்கள் பறித்து மாலை சூட்டி, ஆலயத் திருப்பணிகளைச் செய்து வந்த போது ஒருநாள் கனமழை பெய்தது. இதன் காரணமாக பாடலீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் பெரும் வெள்ளம். ஆலயத்திற்குச் செல்ல வழியறியாது அனைவரும் நின்றிருந்த நேரத்தில், அங்கு வந்த சிறுவன் சித்தானந்தன், சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் குதித்து, ஆலயத்தை நோக்கி நீந்திச் சென்று இறைவனுக்கு பூசை செய்து வழிபட்டான்.
இயற்கையின் சலசலப்பைக் கண்டு அஞ்சாத சிறுவன் சித்தானந்தன், தெய்வ நாமத்தை உச்சரித்தபடியே இருந்தான். நள்ளிரவு கடந்து கொண்டிருந்த நேரத்தில் சிவபெருமான் மற்றும் பெரியநாயகியின் அருட்பார்வை சித்தானந்தன் மேல் படத் தொடங்கியது. சிறுவன் சித்தானந்தனுக்கு சிவபெருமான், பெரியநாயகி அம்மாள் காட்சி அளித்து, அருளாசி வழங்கி மறைந்தனர். அன்று முதல் சித்தானந்தன் சொன்ன வார்த்தைகள் உண்மையாகின. அவரைத் தரிசித்தவர்களின் பிரச்சனைகள் தீர்ந்தன.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்த சுவாமிகள் அரூப நிலையில் அருள்பாலிக்கிறார். கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நுழைந்தால் பிரகாரத்தில் மூலமுதற்கடவுளான விநாயகர் அருள்பாலிக்கிறார். சற்று திரும்பினால் குரு சித்தானந்த சுவாமிகளின் கருவறை ஒட்டி ஸ்ரீகுரு தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளது. குரு பார்வை கோடி நன்மை என்பதற்கேற்ப சுவாமியை தரிசிக்கும்போது நமது மனம் தெய்வீக அனுபவத்தை உணர்கிறது. வலதுபுறத்தில் சித்தானந்த சுவாமிகளின் தியான திருமேனிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலின் சிறப்பு அம்சமாக கோயில் முழுவதும் வடிக்கப்பட்டுள்ள சித்தர்களின் சுதைவடிவம் அமைந்துள்ளது. இவர்களை தரிசித்து வெளியே வரும்போது வளாகத்தில் உள்ள அரசு, வேம்பு மரத்தின் அடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். சித்தானந்த சுவாமிகளின் சன்னதி எதிரே நந்தி தேவர் உள்ளார். பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிவராத்திரி விழாவும் பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மேலும் சித்தானந்தசுவாமிகhளின் ஜீவன் முக்தி அடைந்த தினமான வைகாசி 15ம்தேதி குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
om namasivaya....
ReplyDeleteNamashivaya
ReplyDelete