காகபுஜண்டரின் திவ்விய சரித்திரம்
SIDDHAR KAGABUJANDAR
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
சிவபெருமானின் சாபமும் இராமபிரானின் அருளும் ஒருங்கே பெற்றவர் காகபுஜண்டர். அதனாலேயே பல யுகங்கள் கண்டவர். பல யுகங்கள் கண்டவருக்கு பல பிறவிகளும் இருப்பது இயற்கைதானே ! அப்படி ஒரு பிறவியில் காகபுஜண்டர் ஓர் அந்தணரின் மகனாய் பிறந்தார். ராம நாமம் உள்ளத்திலும் உதட்டிலும் பவனி வந்தது. கண்கள் ராமனின் திருவடிக்காக ஏங்கின. செவிகளோ ராமனின் சொற்களுக்காகத் தவமிருந்தன. ராமரைத் தரிசிக்க பல இடங்களில் அலைந்தார். திரிந்தார். மேரு மலைக்கு வந்தார்.
அங்கே மலை முகட்டில் ஒரு தவமுனிவர். லோசம முனிவர். அவரடி தொழுது புஜண்டர் கேட்டது ராமரைப் பற்றியே ! "பிரம்ம ஞானம் கைவரப் பெற்ற மகா ஞானியே ! ராம தரிசனம் காண வேண்டும். வழி சொல்லுங்கள் !" விழிகள் பிரகாசிக்க புஜண்டர் கேட்டார். "தம்பி... உருவ வழிபாடு சாரமற்றது. பிரம்மமே சத்தியமானது. பிரம்மத்தைப் பார். உணர். அதுவே சாஸ்வதமானது. பிரம்மம் என்பது எது தெரியுமா ? நீயே பிரம்மம். உனக்கும் அதற்கும் வேறுபாடில்லை." முனிவர் எளிமையாகச் சொன்னார். "ஜீவராசிகளும் பிரம்மமும் ஒன்றெனில் தெய்வ பக்தி என்பது எது ? மாந்தர் வேறு கடவுள் வேறு என்றில்லாவிட்டால் தெய்வபக்தி எப்படி சாத்தியம் ?" வாதாட ஆரம்பித்தார் புஜண்டர்.
வாதங்கள் தர்க்கமாய்த் தொடர கோபப்பட்டார் பிரம்ம ஞானி. "ஐயா.... பிரம்மம் உருவமில்லாதது. அதுவே சிறந்தது என்கிறீர்கள் ! பிரம்மம் சலனமற்றது. புலன்களால் சிதைந்து விடாது. கவலையற்றது. ஆனந்தமானது என்கிறீர்கள் ! பிரம்மமான உங்களுக்கேன் இப்படி கோபம் வருகிறது ? பிரம்மமும் ஜீவராசிகளும் ஒன்றென்றால் ஜீவராசிகளுக்கு மட்டும் எதற்கு இத்தனை கவலைகள்.... பிரச்சனைகள்.... பிரம்மம் மட்டும் கவலையின்றி பிரச்சினைகளின்றி இருக்கிறதே ! கவலையற்றது பிரம்மம் என்கிறீர்களே .... எப்படி சுவாமி ...? எல்லாவற்றிலிருந்தும் விடுதலை வேண்டுமெனில் ராம பக்தியே வழிகாட்டும். பக்தி மார்க்கமே சிறந்தது. உருவ வழிபாடே உயர்ந்த வழிபாடு. உண்மை வழிபாடு." உரத்துச் சொன்னார் புஜண்டர்.
லோசம முனிவர் பதில் சொல்லவில்லை. பதிலாக கோப மிகுதியில் சாபம் தந்தார். "அறிவுத் தெளிவு அறவே இல்லாதவனே ! என் உபதேசங்களையா அலட்சியம் செய்கிறாய் ? உயர்ந்த உண்மைகளை நம்ப மறுக்கிறாயே ! காக்கை தான் யாரையும் நம்பாது. எல்லாவற்றுக்கும் பயப்படும். உணவிடுபவரைக் கண்டு பயந்து விலகிப் போகும். உனக்கும் காக்கைக்கும் வேறுபாடு இல்லை. காக்கையாய் போ...!" அக்கணமே காகமானார் புஜண்டர். தான் காகமானது குறித்து கவலைப்படவில்லை காகபுஜண்டர். லோசம முனிவரை வணங்கி விட்டு விண்ணில் பறந்து போனார். ராம நாமமே உணர்வாய் உயிராய் விரவிப் போனார்.
காகபுஜண்டரின் தியானத்தில் ராமபிரானே நிறைந்திருந்தார். காலம் சுழன்றது. புஜண்டரின் ராம தியானம் சாபம் தந்த லோசம முனிவரை உலுக்கியது. 'இப்படி ஒரு ராமபக்தனா...!' வியந்தார் லோசம முனிவர். புஜண்டரை அழைத்தார். "புஜண்டா... இனி நீயென் சீடன். நீ அறிந்த ராம சரிதம் ஒருபுறமிருக்கட்டும். சிவபெருமானே எனக்கு ஒரு ராம கதை சொல்லியுள்ளார். உண்மையான ராம பக்தனான உனக்கு அதைச் சொல்கிறேன்... கேள்...!" தெய்வம் சொன்ன ராம கதையைச் சீடனுக்குச் சொன்னார் லோசம முனிவர்.
ராம மந்திரம் உபதேசம் தியான வழிமுறை கற்பித்தார். அரவணைத்தார். ஆட்கொண்டார். "சீடனே... இனி நீ விரும்புவது எல்லாம் கைகூடும். நீ விரும்பினால் மட்டுமே மரணம் கூட நிகழும். விரும்பும் உருவை நீ எடுக்கலாம். காலம் குணம் செயல் இயல்பு குறை போன்றவற்றால் எழும் துயரம் ஏதும் உனக்கு இருக்காது. முன்பு சாபம் தந்த குரு இப்போது ஆசி தந்தார். பின் காலம்தோறும் ராமன் புகழ்பாடும் வாழ்வைக் களிப்புடன் கழித்து வரலானார்... வரலாறானார்... காக ரூப சித்தர் பிரான். 'காகபுஜண்டர் காக உரு கொண்ட கதை இதுதான்' என சிலர் சொல்கிறார்கள்.
ஞானமும் பக்தியும் ஒன்றென உரைப்போரும் அரியும் சிவனும் ஒன்றென வாழ்வோரும் காகபுஜண்டரின் கதையை சாட்சிக்கு வைப்பர். ஆம்... காக புஜண்டர் ஒரு பிறவியில் ராமனை நிந்தனை செய்தவர். சிவ பிரானால் அதற்காக சாபம் பெற்றவர். சில பிறவிகளில் ராமனை மட்டுமே சிந்தனை செய்தவர். காகபுஜண்டரின் உபதேசங்கள் உலகையே அதிரவைப்பன. முன்னும் பின்னும் யாரும் சொல்லாத பெருமை கொண்டன. காகபுஜண்டர் சொல்வதை அவர் அருளிருந்தால் உணரலாமே தவிர முழுமையாக வார்த்தைகளுக்குள் முடக்கி விட முடியாது. காகபுஜண்டரின் உபதேசங்களின் அடிப்படை இதுவே. பல யுகம் கண்ட காகபுஜண்டர் கலி காலம் பற்றி சொல்வது ஓர் அதிரடி படப்பிடிப்பு.
அவர் சொல்கிறார். "கலியுகத்தில் திருமகள் கருணையால் சிற்சில நன்மைகளும் உலாவரும். கலியுகத்தில் மூச்சடக்கி பேச்சடக்கி தவம் செய்ய வேண்டாம். தியானம் தவம் செய்த பலனை இறை பெயரைச் சொன்னாலே சித்தியாகும். மற்ற யுகங்களில் நல்லது செய்தால் கிடைக்கும் பலன் கலியுகத்தில் நல்லதை நினைத்தாலே நடந்தேறும் !" காகபுஜண்டர் அருளிய நூல்கள் ஏழு. அவற்றை படிப்பது புரிந்து கொள்வது பூர்வ ஜென்ம புண்ணியம். உதாரணத்திற்கு - அவர் நோய்களைப் பற்றி அருளியது எக்காலத்திற்கும் பொருத்தமாய் இருப்பது அவருடைய சித்த மெய்யறிவு. மனநோய்கள் பற்றி கூறும்போது.. "நான் எனும் அகம்பாவம் சொறி சிரங்கு. பொறாமை அரிப்பு. துன்பமும் மகிழ்ச்சியும் கழுத்து நோய்.
பிறர் மகிழ்ச்சியைக் கண்டு வெம்புவது காசநோய். கொடுமை வஞ்சனை குஷ்ட ரோகம். அகங்காரம் மூட்டுவலி. வஞ்சனை திமிர் தற்பெருமை நாக்கில் புழு வரும் நோய். பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை அழுத்தமான நோய்கள். பொறாமை விவேகம் இன்மை ஜுரம். இவ் வியாதிகள் இருப்பதே பலருக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு மருந்து பற்றி மட்டும் எப்படித் தெரியும் ?" இம் மன நோய்களுக்கு மருந்தும் சொல்கிறார் காகபுஜண்டர். 'கட்டுப்பாடான வாழ்க்கை நற்செயல்கள் நன்னடத்தை சகிப்புத்தன்மை நல்லறிவு யாகம் ஜபம் தானம் ஞானம்."
ஈடில்லா சித்தரான காகபுஜண்டர் முக்தி பெற்ற வரலாறும் சித்திபெற்ற திருத்தலங்களும் அறிய ஆவலா ? கைலாய நாதரைத் தரிசித்து முக்தி வேண்டும் என வேண்டுதல் வைத்த புஜண்டரைப் பார்த்து உலகநாயகன் சொன்னார். "பொய்கையில் மூழ்கு கரையேறும் இடத்தில் முக்தி கிடைக்கும்." காகபுஜண்டர் பொய்கையில் மூழ்கி ஆச்சாள்புரத்தில் எழுந்தார். ஆச்சாள்புரம் இன்றைய சீர்காழி அருகே உள்ள திருத்தலம் திருமணஞ்சேரி. இங்குதான் ஞானசம்பந்தருக்குத் திருமணம் நடந்தது. திருமண வேள்வியில் எழுந்த ஜோதியில் திருமணத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் முக்தி பெற்றதாக புராணம் மகிழும்.
இக்கோயிலில் யோகீஸ்வரர் யோகாம்பாளாக சிவனும் உமையும் அருள்பாலிக்கிறார்கள் காகபுஜண்டர் காக முகத்தோடு ஜடாமுடி சகிதம் பத்மாசனத்தில் இங்கு எழுந்தருளியுள்ளார். காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினம் என்று ஓர் அழகிய திருத்தலம். இங்கு காகபுஜண்டர் மனைவி பகுளாதேவி சகிதம் உறைந்து அருள்பாலிக்கிறார் இக்கோயிலே காகபுஜண்டருக்கு தோன்றிய முதல் ஆலயம். அக்கோயில் தென்னாட்டில் அமைந்ததற்கு காரணம் காகபுஜண்டர் தென்னாடு பெற்ற தமிழர் என்கிறது ஓர் ஆன்மிக தகவல். காகபுஜண்டருக்கு திருகாளகஸ்தியில் சிலை உண்டு. அங்கு அவரை வழிபடுவது நம் பிறப்பின் சிறப்பு.
கள்ளக்குறிச்சி அருகே பொன்பரப்பியில் சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் காகபுஜண்டர் பகுளாதேவி தம்பதி சமேதராய் ஸ்தூல சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. திருச்சியில் உறையூரில் காகபுஜண்டர் வாழ்வாங்கு வாழ்ந்து சித்தி அடைந்ததாகக் குறிப்பு உள்ளது. காகபுஜண்டரின் அவதார தினமான பங்குனித் திங்கள் ஆயில்ய நட்சத்திரம் அவர் திருத்தலம் வணங்கி நின்றால் வாழ்க்கை சிறக்கும் என்பது சத்தியபூர்வமான அனுபவ உண்மை.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
mahans in Kallakurichi , Kallakurichi siddhargal , jeeva samadhi in Kallakurichi , Kallakurichi siddhar , siddhar temple in Kallakurichi , Kallakurichi siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in Kallakurichi , siddhar temples in Kallakurichi , Kallakurichi sitthargal , siddhars in Kallakurichi ,
No comments:
Post a Comment