Tourist Places Around the World.

Breaking

Thursday, 13 February 2025

அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்

 


அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்,
அரதைப்பெரும்பாழி,
அரித்துவாரமங்கலம் 612802
திருவாரூர் மாவட்டம்.

மூலவர்: பாதாளேசுவரர், பாதாள வரதர்

தாயார்: அலங்காரவல்லி

தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்

தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்: திருஞானசம்பந்தர்.

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண பூமியில் துவாரம் ஏற்படுத்தியதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது.

மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்ற பெயர் வந்தது.

வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால், சிவபெருமானின் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான்.

இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும ரகசியமாகும்.

வராக அவதாரமெடுத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்ட திருத்தலமாகும் இது.

சிவனுக்கு வலது பக்கத்தில், கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்பாள் அலங்கார வல்லி என்ற திருநாமத்தோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது.

அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.

இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இவரை வழிபட்டால் நவகிரக தோஷம் நீங்கும்.

இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிய பின் ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று. இந்த ஐந்து "வனத்" தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம்.



உஷத் காலமான காலை 5.30-6.30 மணிக்குள் முல்லை வனமான திருக்கருகாவூர் ஈசனையும்,

காலசந்தியான காலை 8.30-9.00-க்குள் பாதரிவனமான அவளிவநல்லூர் ஈசனையும்,

உச்சி காலமான மதியம் 11.30-12.00-க்குள் வன்னி வனமான அரித்துவாரமங்கலம் ஈசனையும்,

சாயரட்சை எனும் மாலை 5.30 - 6.30-க்குள் பூளைவனமான ஆலங்குடி ஈசனையும்,

அர்த்தயாமம் எனும் 7.30 - 8.00-க்குள் வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூர் ஈசனையும் வழிபடுவது பஞ்சாரண்ய தல வழிபாட்டு நெறியாகும்.

இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று உள்ளது.

தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் அரித்துவாரமங்கலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.

No comments:

Post a Comment