அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
ஆலங்குடி அஞ்சல்-612801
கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
இறைவன் - காசி ஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயேஸ்வரர்.
இறைவி - ஏலவார்குழலி.
தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள்.
இது சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம்.
விசுவாமித்திரர் வழிபட்ட தலம்.
பூளை என்னும் செடியைத் தலவிருட்சமாக உடையதாதலின் இத்தலம் இரும்பூளை என்ற புராணப்பெயர் கொண்டது.
திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது எழுந்த ஆல கால விஷத்தை சிவபெருமான் உகந்து பருகித் தன் கண்டத்தில் வைத்து, அகில உலகங்களையும் காத்ததால் இவ்வூருக்கு "ஆலங்குடி" எனவும், இறைவனுக்கு "ஆபத்சகாயர்" எனவும் பெயர் வழங்கப்படுகிறது.
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்வித தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.
நவகிரக பரிகாரத்தலங்களில் குருபகவான் தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.
ஆலங்குடியைப் பொறுத்தவரை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் தரிசனம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியே குரு பகவானாக , நவக்கிரக தோஷத்தை நீக்குபவராக வழிபடப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.
வருடத்துக்கு ஒருமுறை நிகழும் குருப் பெயர்ச்சியின் போது இங்கே லட்சார்ச்சனை நடைபெறும்.
ஆலய பிரகாரத்திலேயே கிடைக்கும் 25 நெய் தீபங்கள் வாங்கி அதில், முதல் தீபத்தைக் கலங்காமல் காத்த விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, மவுனமாக பிரகார வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து வணங்கி விட்டு, 24 சுற்றுக்கள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்' என்ற நடைமுறையும் இங்கே சொல்லப் படுகிறது. இப்படிச் செய்வதால், குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் விலகுகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானின் அருள் பெற்ற பின்னர் திருக்கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் கொடி மரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது தல புராணம்.
திருக்கருகாவூர், அவளிவநல்லூர், அரதைப்பெரும்பாழி, ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் ஆகிய பஞ்ச ஆரண்யத் தலங்களில் இது நான்காவது. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்த தலமாகும்.
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்கு ஒன்பது பரிவாரத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஆலங்குடி "தட்சிணாமூர்த்தி" தலமாக விளங்குகிறது. ஏனையவை - திருவலஞ்சுழி (விநாயகர்), திருவேரகம் (முருகன்), திருவாவடுதுறை (நந்தி), சூரியனார் கோயில் (நவக்கிரகம்), சேய்ஞலூர் (சண்டேஸ்வரர்), தில்லை (நடராஜர்), சீர்காழி (பைரவர்), திருவாரூர் (சோமாஸ் கந்தர்), என்பன.
கஜமுகாசுரனால் தேவர்களுக்கு வந்த ஆபத்தை நீக்கி அவர்களைக் காத்தபடியால், இங்கு விநாயகப்பெருமான், கலங்காமல் காத்த கணபதி எனப்படுகிறார்.
நாக தோஷம் நீங்க, மனக் குழப்பம், பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும், திருமணத் தடை விலக, கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம்.
அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்ததால் இந்த இடம் திருமணமங்கலம் எனப்படுகிறது. அத்திருமணத்தைக் காண வந்த திருமால்,பிரமன், லக்ஷ்மி, சாஸ்தா, அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரர், கருடன் ஆகியோர் தத்தம் பெயரில் இலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளனர்.
முசுகுந்தன், சுவாசனன் ஆகியோரும் பூசித்துள்ளனர்.
சுந்தரர் இங்கு வந்தபோது வெட்டாற்றில் ஒடக்காரனாக வந்து சிவபெருமான் அருளியதாகச் செவிவழிச் செய்தி குறிப்பிடுகிறது.
இங்குள்ள சுந்தரர் சிலை திருவாரூரிலிருந்து அர்ச்சகர்களால் ஒளித்து எடுத்துவரப்பட்டதாகவும், அப்போது காவலர்களிடமிருந்து தப்பிக்க, தங்களின் பிள்ளைக்கு அம்மை நோய் உள்ளதால் மறைத்து கொண்டு செல்கிறோம் என கூறினர். தொடர்ந்து ஆலங்குடி வந்து பார்த்த போது சுந்தரருக்கு அம்மை போடப்பட்டிருந்தது. இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
இத்திருக்கோயில் முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க மறுத்த அமைச்சர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.
கும்பகோணம்- மன்னார்குடி (நீடாமங்கலம் வழி) சாலையில் 17 கி.மீ தொலைவில் ஆலங்குடி உள்ளது. எண்ணற்ற பேருந்துகள் ஆலங்குடியில் நின்று செல்கின்றன.
No comments:
Post a Comment